Wednesday, April 16, 2025
முகப்புஉலகம்அமெரிக்காவினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் - நீரவ் - பாஜக - மோடி !

வினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி !

-

17 பேர்களை சுட்டுக் கொன்ற நிக்கோலஸ் க்ரூஸ் !

நிக்கோலஸ் க்ரூஸ், வயது 19, முன்னாள் மாணவன், மெஜாரிட்டி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளி, புளோரிடா, அமெரிக்கா.

கடந்த செவ்வாய்க்கிழமை 13.02.2018 அன்று ஏ.ஆர். 15 ரைபிள் துப்பாக்கியால் அந்த பள்ளியில் 17 பேரைக் கொன்றிருக்கிறான் நிக்கோலஸ். பின்னர் போலீசிடம் பிடிபட்டவன், தனது கொடூரச் செயலை ஒத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த துப்பாக்கியை கடந்த பிப்ரவரி, 2017 அன்றுதான் வாங்கியிருக்கிறான். அவனது பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட்டனர். ஒழுங்கு நடவடிக்கைக்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவன், இன்று அந்த பள்ளியின் வரலாற்றில் கொடூரமான நினைவுகளின் வரலாறாய் பதிந்து விட்டான்.

உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா, உள்ளூரில் தனது துப்பாக்கி கலாச்சாரத்தால் மக்களைக் கொன்று வருகிறது. அதன் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்க ஆளில்லாதது போல அதன் உள்நாட்டு துப்பாக்கி வணிகத்தையும் நிறுத்த ஆளில்லை.

ஹாலிவுட் படங்களில் மட்டும் நாம் பார்க்கும் வன்முறைகளை அமெரிக்க மக்கள் நேரில், அதுவும் குழந்தைகள் படிக்கும் வகுப்பறைகளிலேயே பார்க்கிறார்கள்.

*****

நீரவ் மோடி – பிரியங்கா சோப்ரா – நரேந்திர மோடி

ஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடியை கொள்ளையடித்த, குஜராத்தின் பிரபல வைரவியாபாரி நீரவ் மோடி, குடும்பத்துடன் வெளிநாடு தப்பியதை அறிந்திருப்பீர்கள். லலித் மோடி, மல்லையா வழியில் இந்திய கொள்ளை முதலாளிகள் வெளிநாடு தப்பிச் செல்லும் வரலாற்றில் நீரவ் மோடியும் சேர்ந்து விட்டார்.

அன்னாரைத்தான் சென்ற மாதம் டாவோசில் சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராடிய நாட்களில், பிரதமர் ஏன் பார்க்க வில்லை என்று கேட்ட போது மோடிக்கு வேற வேலையே இல்லையா என்று கொதித்தனர், காவி பரிவாரத்தினர்.

அவ்வளவு பிசியாக இருந்த மோடி வெளிநாடு சென்ற போது நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து உரையாடினார். அதே பிரியங்கா சோப்ராதான் கடந்த வருட ஜனவரி மாதத்தில் நீரவ் மோடியின் வைர வியாபாரத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார்.

அப்போது பிரியங்கா அம்மையார் கூறியதாவது: “நமது பாரம்பரியம் மீது இருவரும் பெருமை கொண்டவர்கள். உலக அரங்கின் முன்பு நவீன இந்தியாவை முன்னிறுத்தும் யோசனையில் இணைந்தோம். அவருடைய (நீரவ் மோடி) நகைகள் செம்மையாக உள்ளன. அதன் அழகான வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தவை”.

ஆக பாரம்பரியத்தின் மீது பெருமையும், உலக அரங்கில் இந்தியாவை முன்னிறுத்துபவர்களும் இவர்கள்தான்.

எவர்கள்? நீரவ் மோடி, நரேந்திர மோடி, பிரியங்கா சோப்ரா!

*****

விமானப் போக்குவரத்து துறை வளரந்தால் யாருக்கு இலாபம்?

“நமது வான்வழிப் போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் தரமான அடிக்கட்டுமான வசதிகள் தேவை என்பது வான்வழிப் போக்குவரத்து துறையைப் பொறுத்தவரை முக்கியமானது. நமது அரசாங்கம் கொண்டு வந்த வான்வழிப் போக்குவரத்து கொள்கை , இத்துறையை மாற்றி வருகிறது.

தனியார் விமானங்களையும் சேர்த்து தற்போது இந்தியாவில் 450 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 900 புதிய விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.” – இது பிரதமர் மோடி, நாவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நான்காவது சரக்கு முனையத்தை திறந்து வைக்கும் போது உதிர்த்தவை.

விமானப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான அடிக்கட்டுமான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்பதை உறுதிபடுத்துகிறார், மோடி.

உண்மைதான், இந்தியாவில் விமான போக்குவரத்து துறை திகைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது, உரியவர்களுக்கு ‘சேவை’ செய்தும் வருகிறது.

அதனால்தான் லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற மோசடி புகழ் ‘தொழில் முனைவோர்கள்’ பத்திரமாக விமானமேறி வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்திருக்கிறது.

இனி மோசடி செய்யும் முதலாளிகள் கவலைப்படவேண்டாம். நீங்கள் பத்திரமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் வெளிநாடுகளில் இறங்குவதற்கு மோடி அரசு தீயாய் வேலை செய்யும்!

*****

பா.ஜ.க-வின் புதிய கட்சி அலுவலகமும், மோடியின் 100% ஜனநாயகமும் !

தில்லியில் பாரதிய ஜனதாவின் புதிய அலுவலகம் அசோகா சாலையிலிருந்து, 6 ஏ, தீனதயாள் உபாத்யா மார்க்கிற்கு மாறியிருக்கிறது. இந்த அலுவலகத்தின் பரப்பளவு 1,70,000 சதுர அடியாகும்.

திட்டமிட்டபடி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும் 18.2.2018 அன்று நடந்த திறப்பு விழாவன்று ஒரு சொதப்பல் நடந்திருப்பதால் காவிகள் கொஞ்சம் சோகத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

அமித்ஷா, அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் போன்றோர் சூழ மோடி அலுவலகத்தை திறப்பதற்கு சென்றிருந்தார். திரைச்சீலையை அவர் இழுத்த போது அதில் குத்தியிருக்கும் பின்னோ, பின்களோ ஏதோ பாகிஸ்தான் சதியாலோ என்னமோ வேலை செய்யாமல் சிக்கிவிட்டது. பிரச்சினையை உணர்ந்து கொண்ட ராஜ்நாத் சிங் உடனே அவரது கைகளால் திரையை இழுத்து விட்டார்.

உடனே அலுவலக்கட்டிடம் திறக்கப்பட்டுவிட்டது. இப்படி ராஜ்நாத் சிங்கால் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம், செய்திகளில் மோடி திறந்து வைத்ததாகவே பதிவு செய்யப்படுகிறது. கீழே விழுந்தாலும் அது காவி மீசையாக இருக்கும் பட்சத்தில் மண் படவில்லை என்பதல்ல, கீழேயே விழவில்லை என்றே அவர்கள் சாதிப்பார்கள். ஃபோட்டோஷாப்பிலேயே குஜராத்தில் வளர்ச்சியும், பாக் எல்லையில் விளக்கும் போட்டவர்கள் திறப்பு விழாவில் மோடியின் சாதனையை மட்டும் விட்டு விடவா முடியும்?

அமித்ஷா தலைமையிலான குழு இந்த பல்மாடி கட்டிடத்தை பதினெட்டே மாதங்களில் கட்டியதை குறிப்பிட்ட மோடி அதற்காக வானளாவிய பாராட்டை தெரிவித்திருக்கிறார். மேலும் உலகில் உள்ள எந்தக் கட்சி அலுவலகத்தையும் விட இது பெரியது என்று புளகாங்கிதமும் அடைந்திருக்கறார். விட்டால் கின்னஸ் ரிக்கார்டு பீட்டர்கை வரவழைத்து டி.வியில் ஒளிபரப்ப வேண்டியதுதான். எதற்கெல்லாம் பீலா விடுகிறார்கள் பாருங்கள். உண்மையில் அமெரிக்காவிலோ, சீனாவிலோ இதை விட பெரிய கட்சி அலுவலகங்கள் இருக்கும். அதை நமது மீம் கிரியேட்டர்கள் காமடிக்காக விட்டுவிடுவோம்.

புதிய அலுவலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளும், குறிப்பாக சமூக வலைத்தளங்களுக்கான பெரும் அலுவலகமும் இருக்கிறதாம். இனி மோடிக்கு சொம்படிப்பவர்கள் இலட்சகணக்கான போலி ஐடிகளில் இங்கிருந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

“பாஜக-வின் டி.என்.ஏ-இல் 100 சதவீத ஜனநாயகம் இருக்கிறது” என்று மோடி இறுதியாக சொன்ன ஜோக்தான் இந்த விழாவின் முத்தாய்ப்பான விசயம். இதைக் கேள்விப்பட்ட ஜனநாயகம் தான் இந்தியாவில் ஏற்கனவே இல்லை என்பதால் இதற்காக விசேசமாக அழத் தேவையில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க