Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுவேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

-

வேதாரண்யம் அரசு மருத்துவமனையைக் கண்டித்தும், செயல்படாத டெட்பாடி அரசை எதிர்த்தும் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு (03.02.18) ஆர்ப்பாட்டம் நடத்து திட்டமிட்டோம். அனைத்து வேலைகளும் முடித்த நேரத்தில் 02.02.2018 அன்று மாலையில் வழக்கம்போல் கா(ஏ)வல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வது என 140 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். எதிர்பாராத விதமாகவே பொதுமக்கள் அணி திரண்டு வந்திருந்தது உற்சாகம் அளித்தது. மக்கள் அதிகார கொடிகளுடனும், பிளக்ஸ் உடனும் பேரணியாக செல்ல திடீர் முடிவு செய்து பேரணியை வேதாரண்யம் மேலவீதி பெரியார் சிலை அருகிலிருந்து தொடங்கினோம். காவல் துறைக்கே வியப்பூட்டும் வகையில் பொதுமக்கள் அணி திரண்டு இருந்தனர்.

அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், இப்பகுதியின் தலைமை மருத்துவமனையில் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்தும், இறந்தவர்களை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கூட இல்லாமல் சமீபத்தில் 9 கிலோமீட்டர் உடலை கைப்பாடையில் தூக்கி சென்ற அவலத்தை நீக்கி உடனடியாக ஆம்புலன்ஸ் (அமரர் ஊர்தி) ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், உரிய மருந்து மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியில் வாங்க சொல்லி எழுதி கொடுப்பதும் என்ன கேவலம், இது அரசு மருத்துவமனையா இல்லை தனியார்  கிளினிக்கா என பல்வேறு முழக்கங்களுடன் பேரணி நடத்தப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்ததும் காவல் துறை அதிகாரிகள் பேரணிக்கு தலைமை வகித்த தோழர் தனியரசை வலுக்கட்டாயமாக கைது செய்ய முற்பட்டனர். மக்களும் தோழர்களும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மெகாபோனை பிடுங்கி வைத்துக் கொண்டது காவல்துறை. இதை பல பயணிகளும் அருகிலுள்ள பொது மக்களும் கவனித்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையை எதிர்த்து ” எதுக்கு எங்கள மறைக்கிற? நாங்க பொதுவான விஷயத்துக்கு போராடுகிறோம். உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்” என கேள்வி கேட்டதும் போலீஸ் கண்டுகொள்ளாமல் நின்றது.

95 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தோழர் கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் அதிகப்படியாய் பேசியபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸ் பின் வாங்கியது.

கைது செய்து புஷ்பவனம் பெரியகுத்தகை பேரிடர் பாதுகாப்பு மையக்கட்டிடத்தில் தங்க வைத்தனர். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 70-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர். தோழர் காளியப்பன் பொது மக்களிடம் மருத்துவமனை மற்றும் டெட்பாடி அரசின் கையாலாகாததனத்தையும், விமர்சித்து இந்த செத்த அரசை சுமக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கான உரிமைகளை பெற நாம்தான் போராட வேண்டும் என பேசினார்.

தோழர் வெங்கடேசன் மற்றும் வேதாரண்யம் வட்டார அமைப்பாளர், தோழர் தனியரசும் மக்களிடம் போராட்டத்தின்  அவசியம் அதன் நோக்கம் அமைப்பாக இருந்தால் மட்டுமே உரிமையை பெற முடியும். மக்களின் வாழ்வை செழுமையாக்க வேண்டிய அரசு பஸ் கட்டணத்தை அவர்கள் தலையில் சுமத்தி உள்ளது. இதுவா மக்களுக்கான அரசு என பேசினார்.

போலீஸ் பறித்து வைத்திருந்த மெகாபோனை திருப்பி ஒப்படைத்தால் மட்டுமே நாங்கள் பெயர் (ம) முகவரிகளை தருவோம் இல்லையேல் நாங்கள் பெயர் முகவரி கொடுக்க மாட்டோம் என தோழர்கள் காவல் துறைக்கு தெரிவிக்கவும் வேறு வழியின்றி  நம்மிடம் மெகாபோனை ஒப்படைத்தனர். அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் என்னவெல்லாம் நாம் செய்ய முடியும் என மக்களுக்கு வெளிப்படுத்தியது இந்நிகழ்வு. மாலை 6 மணிக்கு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம் பகுதி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க