Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாரஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனை கட்டச் சொல்வீங்களா ? வினவு...

ரஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனை கட்டச் சொல்வீங்களா ? வினவு குறுஞ்செய்திகள்

-

லதா ரஜினிகாந்த் : எங்ககிட்டயே கடனைக் கட்டச் சொல்லுவீங்களா? சிஸ்டம் சரியில்லென்னு சும்மாவா சொன்னோம்!

ஜினி ஃபேமிலி : சிஸ்டம் சரியா இருந்தா எங்ககிட்டயே கடனைக் கட்டச் சொல்ல முடியுமா?

ரஜினியின் திருவளர்ச் செல்வி சௌந்தர்யா ரஜினி காந்த் அவர்கள் பொழுது போக்கிற்காக தயாரித்த பொம்மைப் படம் கோச்சடையான். இந்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்தார் என்றால் ஆட் பீரோ என்ற நிறுவனம் ரஜினி மனைவி லதாவிற்கு ரூ.10 கோடி கடன் வழங்கி தயாரிக்க உதவியது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது சென்னையில் ரஜினி வீட்டிற்கு தேநீர் குடிக்க வந்த மோடியிடம், இந்தப் பொம்மைப் படத்தைப் போட்டுத்தான் ரஜினி ஃபேமிலி அளவளாவியது.

பிரதமரே பார்த்த படமென்றாலும் கடன் கடன்தானே? இருப்பினும் மோடி ரசித்த மாதிரி ரசிகர்கள் ரசிக்கவில்லை என்றால் பொம்மைப் படம் பல்லாவரம் ஜோதியில் கூட பத்துக் காட்சிகளுக்குத் தாக்குப் பிடிக்காமல் தியேட்டரை விட்டு ஓடியது. வாங்கிய கடனில் 1.5 கோடி ரூபாய் மட்டும் திரும்ப செலுத்தி விட்டு, 8.5 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் லதா மீது வழக்கு தொடந்தது ஆட்பீரோ நிறுவனம்.

இதனை விசாரித்த நீதிமன்றம், வாங்கிய கடனை எப்போது திருப்பி கொடுப்பீர்கள், கடனை திருப்பி செலுத்தாதது ஏன் என்று லதா ரஜினியின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டது. பிறகு பாக்கித் தொகையான ரூ. 6.2 கோடியை 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தப் படம் ஏற்படுத்திய நட்டத்தினால் ஒரு விழாவிலேயே ரஜினி மகளை செல்லமாக விமரிசித்து பேசினார். இருப்பினும் இயக்குநர் ரஞ்சித்தை அப்பாவிடம் அறிமுகம் செய்து கபாலி உருவாகக் காரணமாக இருந்த சௌந்தர்யா ரஜினி அதற்கு பரிசாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜபி 2 படத்தை தனுசை வைத்து இயக்கினார். இப்போது அதே தனுஷ், இயக்குநர் ரஞ்சித்தை வைத்து ரஜினியின் காலா படத்தை தயாரிக்கிறார். எல்லாவற்றுக்கும் ஃபைனான்ஸ் சாட்சாத் மதுரை கந்துவட்டி கடவுளான அன்புச்செழியனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பிறகு அன்புச்செழியனுக்கு அன்பாக பாராட்டுப் பத்திரம் வழங்கி கூட்டம் நடத்தியவர் இதே கலைப்புலி தாணுதான்.

சரி, காலா, எந்திரன் 2.0 படங்களில் 50 அல்லது நூறு கோடி ரூபாய்களை ஊதியமாக பெறும் சூப்பர் ஸ்டாருக்கு இந்த தம்மாத்துண்டு கடனை அடைப்பதில் என்ன கேடு? அல்லது ஆஸ்ரம் பள்ளி கட்டிட உரிமையாளருக்கு வாடகை வழங்குவதற்கோ இல்லை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கோ என்ன கேடு?

இப்பேற்பட்ட ரஜினியெல்லாம் ஒரு கட்சி ஆரம்பிப்பதாகவும், அவர் ஆனானப்பட்ட நேர்மையாளர் என சுமன் சி ராமன் இன்னபிற பாஜக நிலைய வித்வான்களெல்லாம் ராகம் போட்டு பாடுகிறார்களே, இதிலிருந்து தெரியவில்லையா? இந்த சிஸ்டம் சரியில்லை என்று!

சிறையிலும் குத்துவதற்கு துடிக்கிறது ஒரு திரிசூலம் !

முப்பத்தி ஆறு வயது சம்பு லால் ரெய்காரை மறந்திருக்க மாட்டாம். ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 2017-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 48 வது அஃப்ரசல் எனும் தொழிலாளியை உயிரோடு எரித்துக் கொன்ற மனித மிருகம். லவ் ஜிகாத் அபாயத்திற்கு மேற்கு வங்க அரசு ஒன்றும் செய்யவில்லை என்று அஃப்ரசலைக் கொன்றது இந்த மிருகம்.

இதற்காக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்புலால் தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். சிறையில் இருந்து அவர் பேசும் இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

வீடியோவில் பாரத்மாதாகி ஜெய்யுடன் ஆரம்பிக்கும் ரெய்கார், சிறையில் அவருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஜிகாதிகள் அவரைக் கொல்ல விரும்புதாகவும், இந்துக்கள் அனைவரும் ஜிகாதிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டுமென்றும் கூறியுள்ளான்.

சங்க பரிவார வெறியன் ஒருவன் சிறையிலேயே இப்படிப் பிரச்சாரம் செய்யும் வசதி இருக்கிறது என்றால் ரெய்கர் ஏன் இப்படி முஸ்லீம்களை எரித்துக் கொல்லமாட்டான்? இவனுக்கு எப்படி ஃபோன் கிடைத்தது என்று ராஜஸ்தான் போலீசு விசாரணையை ஆரம்பித்திருக்கிறதாம்.

எப்படியும் அவன்  விடுலை அடைவதற்குள் விசாரணை முடிந்து விடும் என்று நம்புவோம்!

____________________

நரேந்திர மோடிக்கு ஸ்பான்சர் நீரவ் மோடி! போட்டுத்தாக்கும் சிவசேனா!

தேசபக்தரும், தேசத்தை கொள்ளையடிப்பதற்காக தேசத்தையே மாற்றி என்.ஆர்.ஐயாக அவதரித்தவரும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 12,000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டவருமான திருவாளர் நீரவ் மோடியின் லீலா வினோதங்கள் கடந்த 17.02.2018 சனிக்கிழமை முதல் வெளிவரத் துவங்கின.

உடனே பார்ப்பனிய பா.ஜ.க-வின் இளைய பங்காளியான சிவசேனா ஓடி வந்தது. உதவ அல்ல, உதைக்க! உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் எழுதிய தலையங்கத்தில்தான் இந்த உண்மையை போட்டு உடைத்துள்ளது.

பா.ஜ.க-வின் தேர்தல்களுக்கு பண உதவி செய்த முன்னணி புரவலர்களின் நீரவ் மோடியும் ஒருவர். அதாவது பா.ஜ.க-வின் சொத்துக்களை கூட்டுவதற்கு உதவியதோடு தேர்தலில் சீட்டுக்களை கைப்பற்றுவதற்கும் அன்னார் உதவியிருக்கிறார். ஊழலுக்கு முடிவு கட்டுவதாக வாக்குறுதி அளித்த நரேந்திர மோடியுடன் லாவோசில் போஸ் கொடுத்த நீரவ் மோடி குறித்து கவலை கொள்கிறது சிவசேனா.

இது போன்று பல நீரவ் மோடிகள் பா.ஜ.க-விற்கு உதவுதாகவும் கூறியிருக்கிறது சாம்னா. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நீரவ் மோடி எப்படி பிரதமரை சந்தித்தார் என்றும் சாம்னா கேள்வி எழுப்புகிறது. நீரவ் மோடி எஸ்கேப் ஆன பிறகே அமலாக்கத்துறை அவரது சொத்துக்களை முடக்குவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.

சாகன் புஜ்பால், லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் ஊழல் வழக்குகளுக்காக தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் போது, மோடியும், மல்லையாவும் அரசின் முகத்திற்கு நேரேயே வெளிநாடு தப்பியது எப்படி என்று கேட்கிறது சிவசேனா !

அதிகார பங்கீட்டில் பா.ஜ.க-விடம் தோற்றுப் போன சிவசேனா நேரம் பார்த்து குத்திக் காட்டினாலும் குத்து உண்மையானே? இதே சிவசேனாக்களும் அதே நீரவ் மோடி படியளக்காமல் இருந்திருக்க மாட்டார். இருப்பினும் பெரியண்ணன் வழித்து நக்கியது போக எச்சம் சொச்சம்தான் தாக்கரேவிற்கு கிடைத்திருக்கும்.

ஆக உத்தம கட்சியான பா.ஜ.க தனது தேர்தல் வெற்றிக்காக நீரவ் மோடி போன்ற கொள்ளையர்களிடம்தான் பண உதவி பெற்றிருக்கிறது என்பது சிவசேனாவின் மூலமும் வெளிவந்திருக்கிறது. ஓராண்டிற்குள் பா.ஜ.கவிற்கு மட்டும் கார்ப்ரேட் நிதியுதவி சுமார் 1000 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது என்றால் நீரவ் மோடி ஏன் தப்ப மாட்டார்?

கரடியே காறித் துப்பிவிட்டது? பிறகு என்ன?

____________________________

இணையுங்கள்: