Thursday, April 17, 2025
முகப்புசெய்திஇந்தியாசெல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்

செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்

-

ந்தியாவின் ஆறாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்செல். இதன் உப நிறுவனங்கள் ஏர்செல் செல்லுலர், டிஷ்நெட் வயர்லெஸ். இம்மூன்றும் திவால் என்று அறிவித்துவிட்டது ஏர்செல். புதன்கிழமை 28.02.2018 அன்று மும்பையில் இருக்கும் தேசிய நிறுவன சட்ட ஆணையத்தில் (National Companies Law Tribunal – NCLT) தனது திவால் மனுவை ஏர்செல் நிறுவனம் தாக்கல் செய்திருக்கிறது. கடன் மற்றும் ஏனைய நிறுவனங்களது போட்டி காரணமாக இந்த முக்தி நிலையை அடைந்திருப்பதாக ஏர்செல் தெரிவித்திருக்கிறது.

செல்பேசியை வைத்து இந்தியா வளர்கிறது, வாழ்க்கைத் தரம் முன்னேறி விட்டது என்று பேசுவார்கள், தனியார்மய ஆதரவு பக்தர்கள். அந்த செல்பேசி நிறுவனங்களில் இதுவரை ஏர்செல்லையும் சேர்த்து நான்கு நிறுவனங்கள் திவாலாகி விட்டன.

நார்வேயைச் சேர்ந்த டெலினார் தனது சொத்துக்களை இலவசமாகவே எர்டெல்லுடன் சேர்த்துவிட்டு பறந்துவிட்டது. டாடா தொலைத்தொடர்பு நிறுவனமும் அதே இலவசத் தன்மையோடு ஏர்டெல்லுக்கு மாற்றி விட்டது. முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் தனது 42,000 கோடி கடனுடன் தத்தளித்துவிட்டு இறுதியில் அண்ணன் முகேஷ் அம்பானியின் ஜியோவுடன் இணைந்து விட்டது.

புதிய நிறுவனத்தின் ஆக்கிரமிப்பு வரவு, சட்டபூர்வமான சவால்கள், மீள முடியாத கடன், அதிகரித்து வரும் நட்டம் எல்லாம் சேர்ந்து தங்களது வியாபாரத்தை பாதித்து நிறுவனத்தின் நற்பெயரையும் காலி செய்து விட்டதாக ஏர்செல் கூறுகிறது. செப்டம்பர் 2017-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு ஏர்செல் இணையும் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருக்கிறது. அது தோல்வி அடைந்தே தீரும் என்பது தற்போது அனில் அம்பானியின் நிறுவனமே சரணடைந்து விட்டதில் தெரிகிறது.

ஏர்செல்லின் முதன்மைச் செயல் அதிகாரி அனந்த கிருஷ்ணன்

எட்டரை கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்செல் நிறுவனம் குஜராத், ஹரியாணா, இமச்சாலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேவைகளை இந்த ஆண்டு ஜனவரி முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. மற்ற இடங்களில் சேவையை மேம்படுத்துவதாக அவர்கள் கூறியது நடைபெறவில்லை.

ஏர்செல் நிறுவனம் அளிக்க வேண்டிய டவர் கட்டணத் தொகைக்காக சேவை இடையில் நின்று போனது. கூடவே மற்ற தொலைபேசி நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏர்செல் சேவைகளை துண்டித்து வருகின்றன. தற்போது ஏர்செல் எண்கள் அனைத்திற்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கூறிய செய்தி  வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு, இணைய வங்கி பரிவர்த்தனை செய்பவர்களின் துயரங்கள் எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. ஒரு நிறுவனம் திவால் ஆகிறது என்றால் கூட அதை முறைப்படி மக்களுக்கு பாதிப்பின்றி செய்வதற்கு இவர்களால் முடியவில்லை. சொல்லப்போனால் கடைசி நேரத்தில் முடிந்த வரை சுருட்டலாம் என்பதால்தான் இந்த நட்டம் வாடிக்கையாளர் முதுகில் சுமத்தப் பட்டிருக்கிறது.

இதை முறைப்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டிய டிராய் நிறுவனமோ கண்ணை மூடிக் கொண்டு தூங்குகிறது. தமிழகத்தில்  கணிசமான வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவன சேவைகளை பெற்று வந்தனர். சென்னை கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் ஆகட்டும், நடிகர்கள் – கிரிக்கெட் வீரர்கள் ஏர்செல் விளம்பரங்களில் நடித்து கூறிய வாக்குறுதியாகட்டும் அனைத்தும் இப்போது நம்மைக் கேலி செய்கின்றன. இம்மாதம் ஏர்செல்லின் சேவை முடங்கிய பிறகு பல ஏர்செல் மையங்கள் தாக்கப்பட்ட போது கூட ஏர் செல் நிறுவனம் உண்மையை வெளிப்படையாக கூறவில்லை. பிறகு சேவைகள் அனைத்தும் தற்போது நிறுத்தப் படுவதாக கூறியிருக்கிறது.

மற்ற நிறுவனங்களுக்கு எண்களை மாற்றிக் கொள்ளும் சேவைகளையும் இவர்கள் முறைப்படி செய்யவில்லை. இப்படி எல்லாமே அலங்கோலத்தில் முடிந்திருக்கிறது.

ஒரு தனியார் நிறுவனம் திவாலானால் அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள், எப்படி தனியார் நிறுவனங்கள் கைகழுவி ஓடிவிடும், எப்படி அரசு நிறுவனங்கள் அதை கண்காணிக்காமல் கண்மூடும் என்பதற்கு ஏர்செல் நிறுவனத்தின் திவாலும் ஒரு சான்று!

இதெல்லாம் ஜியோ வருகைக்குப்பிறகுதான் என்று பலரும் ஆய்வு செய்கிறார்கள். முகேஷ் அம்பானி தனது அப்பா திருபாய் அம்பானியின் வர்த்தக ஆக்கிரமிப்பு, அரசை முறைகேடாக பயன்படுத்துதல் என சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஜியோ படையெடுப்பை நடத்தி வருகிறார். தனியார் நிறுவனங்கள் அதிகரித்தால் போட்டியும் அதிகரித்து கட்டணம் குறையும் என்று வாய் பிளந்தவர்கள் இன்று தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவால் ஆவதை பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.

இறுதியில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா என்று இந்த போட்டி குறுகி மேலும் ஒரிரண்டு திவால் நடவடிக்கைக்கு பிறகு ஜியோவோ இல்லை, இந்த நிறுவனங்களின் கார்ட்டலோ ஒன்றிணைந்து மீண்டும் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிப்பதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது.

முதலாளித்துவம் மக்களைக் கொல்லும் என்பதற்கு ஏர்செல்லின் திவால் ஒரு சான்று மட்டுமல்ல, எச்சரிக்கையும் கூட!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க