பொது மக்களின் அடிப்படையை நிறைவேற்ற, இலஞ்சம் இல்லையெனில் எந்த வேலையும் அரசு அலுவலங்களில் நடக்காது. இதற்கு காவல் நிலையமும் விதிவிலக்கல்ல. சில மாதங்களுக்கு முன்பு இசக்கி முத்து தன் குடும்பத்தோடு கந்துவட்டி கொடுமைக்காக மனு கொடுத்தும் பலன் இல்லை என்று குடும்பத்தோடு தீயில் கருகினர். இன்றோ பிரச்சனை தீர்த்து கொடுக்க வேண்டிய காவல் துறையே லஞ்சம் இல்லை எனில் செத்துபோ என்கிறது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவிற்கு உட்பட்டது, ஏரியூர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சாரப்பட்டி காடு கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆசைத்தம்பி, இவருக்கும் இவரது மனைவி பழனியம்மாளுக்கும் இடையே குடும்ப சண்டை இருந்துள்ளது. இது தொடர்பாக ஆசை தம்பி கடந்த ஒருவாரமாக காவல் நிலையம் சென்று மனு கொடுத்து முறையிட்டுள்ளார். இந்த பிரச்சனையை தீர்க்காத போலீசு, தொடர்ந்து பிரச்சனையை தள்ளிப் போட்டுள்ளனர். அதுபோக போலீசார் பிரச்சனையை தீர்க்க ஆசைதம்பியிடம் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக மனஉளைச்சலில் இருந்து வந்த ஆசை தம்பி, காவல் நிலையம் சென்று நான் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளார்.
அடுத்த நாளும் காசு இல்லை என்ற காரணத்திற்காக போலிசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் மேலும் மனஉளைச்சல் அடைந்த ஆசைதம்பி, மாலை 3.30 மணியளவில் பெட்ரோல் வாங்கி சென்று ஏரியூர் காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று தீ குளித்துள்ளார். இதனையெடுத்து காவல் நிலையத்தில் மக்கள் கூடுவதற்குள்ளாக கறிகட்டையான ஆசைதம்பி உடலை காவல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இவ்வளவு பயங்கரமான சம்பவம் பட்டபகலில் நடந்துள்ளது. இதனை எப்படி மூடிமறைப்பது என்ற கண்னோட்டத்தில் மட்டுமே போலீசு செயல்படுகிறது.
காசு இல்லையெனில் அரசு அலுவலகங்கள் எந்த பிரச்சனையும் தீர்க்காது என்பது நாம் அறிந்ததே. அது தற்போது நமது கண்முன்னே நிரூபணமாகி நாறுகிறது. காசுக்காக நடவடிக்கை எடுக்க மறுக்கும் போலீசு, மறுபக்கத்தில் பணம் கொழுக்கிறது என்றால் ரவுடிகளுக்கும் கேக் ஊட்டுவார்கள்.
காவல் நிலையம் என்றாலே அது பலதுறைகளாக பிரிந்து செயல்படுகிறது. மணல் திருட்டு, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, திருடர்களுடன் கூட்டு, லஞ்சம், என மேலிருந்து கீழ்வரை அனைத்தும் ஒன்றுபட்டதாக திகழ்வது காவல் நிலையமே என்பதுதான் உண்மை. இதனைப் பற்றி பேசுபவர்கள் சாதாரண குடும்ப சண்டைக்கு எல்லாம் இறக்கலாமா ? இதனை தவிர்த்திருக்கலாம். மேல் அதிகாரியை பார்த்திருக்கலாம், அவரை சந்திக்கலாம், இவரை சந்திக்கலாம் என்று மொக்கையான ஒரு விசயத்தை பேசி முடித்துக் கொள்கிறார்கள்.
இது ஒரு சம்பவத்தின் வெளிப்பாடு அல்ல. இது மொத்த சமூக அமைப்பே சீரழிந்து போனதன் வெளிப்பாடு. இதனை மாற்ற மக்கள் அதிகாரத்தோடு வழி தேடு.
தகவல்:
மக்கள் அதிகாரம்
பென்னாகரம், பேச: 8148573417