பிரேசிலைச் சேர்ந்த இடதுசாரி போராளி மரில்லா ஃப்ரான்கோ கடந்த 14.03.2018 அன்று அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரேசிலில் நடைபெற்றுவரும் போலீசு அத்துமீறல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர் மரில்லா என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரி கட்சியான சோசலிசம் மற்றும் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த மரில்லா ஃப்ரான்கோ பிரேசிலின் பழம்பெருமை வாய்ந்த நகரான ரியோவின் பெண் கவுன்சிலராக கடந்த 2016 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் ரியோவின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஃபாவெலாவைச் சேர்ந்தவர். ஃபாவெலா பகுதி இராணுவம் மற்றும் போலீசு கும்பலின் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகிய பகுதி. இந்தியாவின் குடிசைப் பகுதிகளைப் போல், ரியோவின் கருப்பின மக்களுக்காக ‘ஒதுக்கப்பட்ட’ பகுதி. இங்குதான் மக்கள் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும், போலீசின் கடுமையான தாக்குதல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தார் மரில்லா ஃப்ரான்கோ.
கடந்த ஜனவரி (2018) மாதத்தில் மட்டும் ரியோவில் சுமார் 154 பேர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைக் கடுமையாகக் கண்டித்தார் மரில்லா ஃப்ரான்கோ. பிரேசில் ஜனாதிபதி மிச்சேல் டெமெர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரியோ நகரின் பாதுகாப்புப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைத்தார். இராணுவம் விசாரணை என்ற பெயரில் ஃபெவலாசினுள் புகுந்து வெறியாட்டம் நடத்தியது.
சமீபத்தில் ரியோவில் வழிபாட்டுத்தலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருவரை போலீசு கொன்றது. அதனை ட்விட்டரில் கடுமையாகக் கண்டித்தார் மரில்லா. இந்தப் போர் முடிவடைய இன்னும் எத்தனை உயிர்கள் பலிகொடுக்கப்பட வேண்டும் எனத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 14.03.2018 அன்று இரவு 9.30 மணியளவில் தனது அலுவலக சந்திப்பை முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இரண்டு பேர் இவரது காரை நோக்கிச் சரமாரியாக சுட்டனர். இதில் காரில் முன் சீட்டில் அமர்ந்திருந்த மரில்லா ஃப்ரான்கோவும் அவரது கார் ஓட்டுனரும் உயிரிழந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருந்த அவரது உதவியாளர் காயங்களுடன் உயிர்தப்பினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு போராளியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக போலீசும் இராணுவமும் தான் கொன்றது எனக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என கொன்றவர்கள் கூறுகின்றனர். அதிகாரக் கொழுப்பெடுத்த போலீசு – இராணுவத்தையே அவர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார் என்பதால் கொன்றவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். பிரேசிலின் ரியோடி ஜெனிரா நகரில் பல்லாயிரம் மக்கள் அணிதிரண்டு மரில்லாவுக்காக போராடினர்.
இந்தியாவும், பிரேசிலும் இத்தகைய அரச வன்முறைக்கு ஆளான நாடுகள்தான். இராணுவத்தையும், போலீசையும் நாகரீகப்படுத்துவதற்கு ஒரே வழி மக்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை சாதிக்க வேண்டும். மரில்லா ஃபிரான்கோ எதற்கு கொல்லப்பட்டாரோ அதை நாம் தொடர்ந்து செய்வோம்.
மேலும் :