சோஷலிச கிழக்கு ஜெர்மனி இருந்த காலத்தில் பெர்லின் மதிலை “பாசிச எதிர்ப்பு மதில்” என்று அழைத்தனர். மேற்கத்தியர்கள் அதை நையாண்டி செய்து “கம்யூனிச பிரச்சாரம்” என்று புறக்கணித்தனர். இப்போது கிழக்கு ஜெர்மன் மக்கள் தாமாகவே “பாசிச எதிர்ப்பு மதில் இருந்தது நல்லதற்கே!” என்று கூறுகிறார்கள்.
“நாங்கள் பாசிச எதிர்ப்பாளர்களின் தாயகம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் பட வேண்டும்.” என்று சொல்லிக் கொள்கிறார்கள். (இதற்கு மாறாக, மேற்கு ஜெர்மனியில் நாஸிச கடந்த காலம் பற்றிய வெட்க உணர்வு இருக்கிறதே அல்லாமல், பாசிச எதிர்ப்புணர்வு இருக்கவில்லை.)
அங்கு இப்போதும் இரண்டு ஜெர்மனிகள் இருப்பதற்கு என்ன காரணம்? முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் படித்தவர்களின் சான்றிதழ்களுக்கு மதிப்பில்லை. அரச, தனியார் நிறுவனங்களில் பதவி வகிப்போரில் பெரும்பான்மையினர் மேற்கு ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள். அதனால் வேலயில்லாப் பிரச்சினை அதிகம். ஜெர்மனியின் பெரிய நிறுவனங்களில் ஒன்று கூட கிழக்கு ஜெர்மனியில் தலைமையகத்தை கொண்டிருக்கவில்லை.
ஜெர்மன் அதிபர் அன்கெலா மெர்கல் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்தவர். ஆனால், அங்கே அவருக்கு மதிப்பில்லை. கிழக்கு ஜெர்மனியருக்கு அவர் ஒரு துரோகி! பொருளாதாரப் பிரச்சினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தீவிரவாதக் கட்சிகளுக்கான ஆதரவு அதிகரிக்கின்றது. இஸ்லாமிய வெறுப்பை காட்டும் PEGIDA, அதனுடன் சேர்ந்து வெளிநாட்டவர் எதிர்ப்பு அரசியல் நடத்தும் AfD ஆகிய தீவிரவலதுசாரி கட்சிகளுக்கான ஆதரவு கிழக்கு ஜெர்மனியில் அதிகம்.

“ஜெர்மனியில் வெளிநாட்டவர் எண்ணிக்கை, பூர்வீக ஜெர்மனியரை விட அதிகம்” என்பன போன்ற தவறான நம்பிக்கைகளும் காணப் படுகின்றன. (முதலாளித்துவத்தை புரிந்து கொள்ளாமல், “வெளிநாட்டவரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.) இத்தனைக்கும் கிழக்கு ஜெர்மனியில் வெளிநாட்டவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
அதற்காக தீவிர வலதுசாரி சக்திகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று முத்திரை குத்துவது தவறு. அங்கே முக்கியமான பிரச்சினை பொருளாதார பின்னடைவே தவிர இனவாதம் அல்ல. அரசுக்கு அழுத்தம் கொடுத்து தங்களது குறைகளை கேட்க வைப்பது தான், தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் மக்களின் நோக்கமாக உள்ளது. இருப்பினும், இந்த வாய்ப்பை இனவாதக் கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
தீவிர இடதுசாரிக் கட்சியான Die Linke -க்கும் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அது முன்னாள் கிழக்கு ஜெர்மனியை ஆண்ட கம்யூனிச SED கட்சியின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. ஜெர்மன் ஒன்றிணைவின் போது, கிழக்கு ஜெர்மனியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக இருந்தது. அவை மேற்கத்திய பாணி ஜனநாயகம் கோரி நடந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல.
-கலையரசன்
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : The New York Times, (14 feb 2018) பத்திரிகையில் பிரசுரமானது. நான் சில இடங்களில் விரிவான விளக்கம் கொடுத்திருக்கிறேன்.
நன்றி : கலையகம்