Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

-

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை 09.03.2018 அன்று ‘தமிழ் இந்துவில்’ வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது.

ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி

கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து “ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது.

ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள்.

செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது.

இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை.

பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

நன்றி : வில்லவன்