Saturday, April 19, 2025
முகப்புசெய்திபார் கவுன்சில் தேர்தல் - 2018 : சாதி ... பணம் ... துட்டு ......

பார் கவுன்சில் தேர்தல் – 2018 : சாதி … பணம் … துட்டு … மணி … மணி !

-

பார் கவுன்சில் தேர்தல் – 2018 : நோட்டுக்கு ஓட்டு! வக்கீல் உரிமைக்கு வேட்டு!

பார் கவுன்சில் தேர்தல் எங்கும் பணம், பரிசு, சாதி, சரக்கு துள்ளி விளையாடுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலிலாவது தேர்தல் ஆணைய ரெய்டு, கெடுபிடி, கைது என்ற காமெடி நிகழ்ந்தது. நம் தேர்தலில் அதுவும் இல்லை. பணம், சாதி, கறிவிருந்து எனச் செல்பவர்கள் எவ்விதக் கூச்ச, நாச்சமும் இன்றி அதைச் செய்கின்றனர் என்பதுதான் மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. வழக்கறிஞர்களின் இந்தநிலை எதிர்காலத்தில் நம்மை நிரந்தர அடிமைகளாக மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கான நீதியின் பங்களிப்பில் வழக்கறிஞர்கள் பாத்திரம் முக்கியமானது, தவிர்க்க முடியாதது. சமூகத்திற்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பில் உள்ள நாம், ஓட்டுப்போட கோழி பிரியாணி, குவார்ட்டர் சரக்கு, ஊட்டி கோவா சுற்றுலா, பார்ட்டி , தங்க காசு, ரூ.5000, 10,000 கேட்பது சரியானதா?

பல கோடி செலவழித்து தேர்தலில் வெற்றி பெறுபவன் மீண்டும் எப்படிச் சம்பாதிப்பது என்றுதான் செயல்படுவான். அதுதான் பணம் என்ற முதலீட்டின் விதி. பணம், சாதிக்கு ஓட்டுப் போடுவது வெறுக்கத்தக்க அவமானம், இழிவு எனக் கருத வேண்டும். எங்களிடம் இத்தனை ஓட்டு உள்ளது எனச் சொல்லி பேரம் பேசும் ஏஜண்டுகளை வழக்கறிஞர் தொழிலிருந்தே விரட்ட வேண்டும்.

ஆர்.கே.நகர் மக்களையும், கூவத்தூர் எம்.எல்.ஏ. -க்களையும் விமர்சிக்கின்ற நாம் ஓட்டுக்களை விற்கலாமா? பணத்திற்கும், சாதிக்கும் நம்மை விலைபேசும், கேடி – கிரிமினல் வேட்பாளர்கள் கையில் வழக்கறிஞர் உரிமைக்கான அமைப்பை ஒப்படைக்கலாமா? அதன் விளைவுகள் நமக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே பேரிழப்பாக அமையும். தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகளின் துரோகத்தால் நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவரை இழந்தோம். இன்று நாம் பார்க்கும் சாதியும், வாங்கும் பணமும் எதிர்காலத்தில் நம் சகோதர வழக்கறிஞர்களின் உயிர் பறிப்பிற்கு காரணமாக இருக்கக் கூடாது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசின் அடக்கு முறையிலிருந்து மக்களைக் காக்க வழக்கறிஞர்களின் தொழிலுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்படுவதைத் தடுக்க நீதித்துறையின் தராசு சாயாமல் இருக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் பணம், சாதி என்ற ஊழலுக்கு உடன்பட மறுப்பதோடு எதிர்த்தும் போராட வேண்டும். அறிவிக்கப்படாத அவசரநிலை கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறைகள், அநீதிகளை நினைத்துப்பாருங்கள். 43 வழக்கறிஞர்களுக்கு தொழில்தடை, 126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட், உயர்நீதிமன்றத்தின் சர்வாதிகார 34(1) விதிகள், 25 வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள், மூன்றாண்டு, ஓராண்டு தடை, சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை!

நீதிமன்றங்களில் துண்டறிக்கை கொடுக்கக் கூடாது. ஆர்ப்பாட்டம், கூட்டம் நடத்தக்கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மண்டபத்தில் கூட கூட்டம் போடக் கூடாது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களை வீடியோ எடுத்து அனுப்பு என காவல்துறைக்கு பார் கவுன்சில் கடிதம்; நீதித்துறை, பார்கவுன்சில், காவல்துறையை விமர்சித்து யார் பேசினாலும் சஸ்பெண்ட் என இந்தியாவில் எங்கும் இல்லாதவகையில் அறிவிக்கப்படாத அவசரநிலை நம் மீது ஏவப்பட்டது. அதே சமயம், டெல்லி நீதிமன்றத்தில் ரவுடித்தனம் செய்து, உச்சநீதிமன்ற குழுவைத்தாக்கிய டெல்லி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய பார்கவுன்சில் எடுக்கவில்லை .

நாம் என்ன தவறு செய்தோம்? கட்டாய ஹெல்மெட் – போலீசு வசூலுக்கானது என்றோம்; இன்று திருச்சி உஷா கொலை அதைச் சரியென நிரூபித்துள்ளது. நீதித்துறை ஊழல் என்றோம்; இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் அதைப் பேட்டியாகவே சொல்லிவிட்டார்கள்.

எட்டப்பன் கூட்டமாய் மாறிப்போன பார்கவுன்சில்

நீதித்துறை உத்தரவின் பேரில் நம்மை நசுக்கியவர்கள் நாம் தேர்ந்தெடுத்த பிரபாகரன், செல்வம், அமல்ராஜ் தலைமையிலான பழைய பார்கவுன்சில் உறுப்பினர்கள்தான். நாம் பலமுறை கோரியபோதும் எந்த பார்கவுன்சில் உறுப்பினரும் ராஜினாமா செய்யவில்லை. மாறாக வழக்கறிஞர்களை ஒடுக்கத் துணை நின்றார்கள்.

தாய்ப்பால் கொடுத்த மார்பையே அறுத்த கயவர்களுக்கு ஒப்பான இவர்கள்தான், இன்று நான் உங்கள் சாதி, பணம் தருகிறேன், பார்ட்டி கொடுக்கிறேன் என ஓட்டுப்பிச்சை கேட்டு வருகிறார்கள். மானமும், சுயமரியாதையும், வழக்கறிஞர் தொழில் மீது அக்கறையும் கொண்ட பல வழக்கறிஞர் சங்கங்கள் பழைய உறுப்பினர்களை விரட்டியடித்துள்ளனர். பல சங்கங்களில் பழைய உறுப்பினர்கள் கால் வைக்கவே முடியவில்லை.

ஆனால் ஒரு சில வழக்கறிஞர்கள் கறிவிருந்து, ஓட்டுக் கேட்க தினக்கூலி, சாதிப் பார்ட்டி, பணப் பார்ட்டி எனச் செல்கின்றனர். இவர்களிடம் நாம் கேட்பது ஒன்றுதான்! இரண்டாண்டுகளாக தொடர் அடக்குமுறைகளை வழக்கறிஞர் சமூகம் சந்தித்தபோது இன்று தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டு வரும் கனவான்கள் எங்கு சென்றிருந்தார்கள்? பழைய பார் கவுன்சில் உறுப்பினர்கள் காட்டிக் கொடுத்தது தங்கள் சொந்த சாதிக்காரர்களையும்தானே?

என்ன செய்வது?

பழைய துரோகிகள், பணம், சாதியைச் சொல்லி ஓட்டுக் கேட்கும் வேட்பாளர்களை தூ…! எனக் காறி உமிழ்ந்து புறக்கணியுங்கள்! இல்லையேல், அடுத்த சஸ்பெண்ட் நீங்கள்தான்! அது உங்களுக்குப் பணம் கொடுத்தவனால்உங்கள் சாதிக்காரனால் நிகழும்! எனவே வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளில் யார் வழக்கறிஞர் போராட்டங்களில் முன் நின்றார்களோ, யார் நேர்மையானவர்களோ அவர்களைத் தேர்ந்தெடுங்கள்!

தகவல் :
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம்.
தொடர்புக்கு : 94434 56023, 97903 17864.