Monday, April 21, 2025
முகப்புசெய்திதிருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு !

திருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு !

-

திருச்சி : போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்து படுகொலையான உஷா வழக்கு !

  • கைது  செய்யப்பட்ட கொலையாளி ஆய்வாளர் காமராஜுக்கு இரண்டாவது முறையாக பிணை மறுப்பு!
  • அநீதிக்கெதிராக ஆர்த்தெழுந்த போராளிகள் பிணையில் விடுவிப்பு!

ஞ்சை – சூலமங்களத்தைச் சேர்ந்த உஷா – ராஜா தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஹெல்மெட் சோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டனர். வாகனத்தை திடீரென நிறுத்த முடியாமல் சற்று தள்ளி நின்ற நிலையில் அவசரப்பட்டு அவரது சட்டையைப் பிடித்து இழுத்தனர் அங்கிருந்த போலீசார். தாங்கள் செல்லும் நோக்கத்தையும் தனது மனைவியின் நிலையையும் கூறியதுடன்  “நாங்கதான் வண்டிய நிறுத்தறோமே, ஏன் திருடனைப்பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீ்ங்க” என்று கண்டித்து பேசி விட்டு புறப்பட்டனர்.

trichy5-1520447387
படுகொலை செய்யப்பட்ட உஷா

அடுத்த வாகனத்தை கவனிக்க சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், கீழ்நிலை போலீசார் அனுப்பி வைத்ததை ஏற்காமல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு 6 கி.மீ தூரம் விரட்டி வந்து எட்டி உதைத்ததால் வாகனத்தோடு கீழே விழுந்த தம்பதியினர் கடுமையாக காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே கர்ப்பிணியாக இருந்த உஷா மரணமடைந்தார். இதற்கு நீதி கேட்டு 3000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் நடத்தி போக்குவரத்தை முடக்கினர். அதன் பிறகே மேற்படி ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே நேரத்தில் போராடிய பொதுமக்களை மிருகத்தனமாக தடியடி நடத்தி கலைத்ததுடன் பலரது மண்டையை உடைத்து, 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான திருச்சி காவல்துறை.

  • சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு உயிரைப்பறித்த போக்குவரத்து ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் !
  • நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உண்மையை வெளியிட வேண்டும் !
  • வாகன சோதனை என்ற பெயரிலான அடாவடி வசூல் மற்றும் அராஜக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் !
  • கைது செய்த அனைவர் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் !

என்பன போன்ற கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் வைக்கப்பட்டது. ஆனால், இவற்றை கண்டுகொள்ளாமல் குற்றம் செய்த போலீசை பாதுகாப்பது எப்படி என்பதில்தான் மொத்த காவல்துறையும் அக்கறை செலுத்துகிறது.

பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட 23 பேர் சிறையில் வதைபட்டு வந்தனர். எதிர்பாராத வகையில் முதல் முறையாக கைதாகி திகைத்துப்போயிருந்த 23 பேருக்கும் ஆதரவாக இருக்கும் நோக்கில் முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்படாமலிருந்த மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர், தோழர் தண்டபாணி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சுரேஷ் ஆகிய மூவரும் தாங்களே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு சென்றனர். இது உள்ளேயிருந்த 23 பேருக்கும் புதுத்தெம்பு தருவதாக அமைந்தது.

இந்த நிலையில், மொத்தமுள்ள 26 பேருக்கு ஆதரவாக ஆஜராகி பிணை பெற்றுத்தர திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் முன்வந்தது. அதற்காக அமைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பி.சவுந்தரராஜன், இளமுருகு மற்றும் வழக்கறிஞர்கள் கனகராஜ், கமுருதீன் ஆகிய 4 பேர் குழு இதற்கான வேலைகளை முன்னெடுத்தது. மக்கள் உரிமைப்பாதுகாப்பு சங்கத்தின் செயலர் வழக்கறிஞர் முருகானந்தம், செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர்கள் திரு. போஜகுமார், ஆதிநாராயணமூர்த்தி உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் ஒத்துழைத்தனர்.

வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திரு. பன்னீர் செல்வம் தலைமையிலான பல வழக்கறிஞர்கள் தலையிட்டு வாதாடினர். மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் செயலர் வழக்கறிஞர் முருகானந்தம், செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர்கள் திரு. போஜகுமார், ஆதிநாராயணமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். இதனால், அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. இலட்சக் கணக்கில் சேதம் ஏற்படுத்தியதாகக் கூறி ஒவ்வொருவரும் காப்புத் தொகையாக (Deposit) ரூ.5000/= கட்ட வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதை மறுத்து வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில் இறுதியாக குறைந்த பட்ச காப்புத்தொகையாக ஒவ்வொருவரும் ரூ.500 செலுத்த வேண்டும். தினசரி சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் காலையில் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.

நியாயத்திற்காக போராடிய மக்கள் பக்கம் நின்று வழக்கறிஞர் சங்கம் வாதாடாமலிருந்திருந்தால் கைதான ஒவ்வொருவரும் பிணை பெறுவதற்கும் காப்புத்தொகை கட்டுவதற்கும் படாதபாடு பட்டிருக்க வேண்டும். பிணை கிடைக்கவும் மாதக்கணக்கில் ஆகியிருக்கும். அந்த வகையில் வழக்கறிஞர் சங்கத்தின் பங்கு மகத்தானது, பாராட்டுக்குரியது. பிணை கிடைத்து சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளை பாதிக்கப்பட்ட உஷாவின் கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் நேரில் வந்து சிறைவாசலிலேயே நன்றி தெரிவித்தனர். எனது மனைவிக்காக போராடி சிறைசென்ற உங்களுக்கு சாகிறவரை உண்மையாக இருப்பேன் என்று கலங்கியபடி பேசினார். நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் மிக்க இந்த சந்திப்பு போராளிகளைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அமைந்தது.

அன்றே குற்றவாளியின் பிணை மனுவும் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், வழக்கறிஞர் சங்கம் தனது தீர்மானத்திலேயே குற்றவாளிக்கு திருச்சி வழக்கறிஞர் சங்கத்திலிருந்து யாரும் ஆஜராகக்கூடாது என்றும் யாராவது பிணை மனு போட்டாலும் எதிர்த்து நின்று வாதிடுவது என்றும் குறிப்பிட்டிருந்ததால் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் தமது பிணை மனுவுக்கு வாய்தா வாங்கிக்கொண்டனர். அடுத்த வாய்தாவிலும் உஷாவின் கணவர் சார்பிலும், மக்கள் அதிகாரம் சார்பிலும் குறுக்கிட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவத்தையே திரித்து, போக்குவரத்து போலீசார் தடுத்ததை மீறி தப்பித்து வந்து தானே தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாகவும் இதில் உஷா மரணமடைந்ததாகவும் சித்தரித்தார்.  மேலும், மக்கள் அதிகாரம் அமைப்பு இந்த விபத்தை போலீசுக்கெதிரான கலகமாக்கி விட்டதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்காத நீதிபதி, மக்கள் அதிகாரம் அமைப்பு தடை பட்ட அமைப்பா? என்று கேள்வியெழுப்பியதுடன் பொது நியாயத்திற்காக போராடுவது தவறான செயல் அல்லவே! என்றும் கேள்வியெழுப்பினார். கொலையை விபத்து என்றும் கொலைகார இன்ஸ்பெக்டரை கடமை தவறாத உத்தமர் போல சித்தரித்தும், வாகனம் ஓட்டிய ராஜாவை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓட எத்தனித்த பெரும் குற்றவாளி போல சித்தரித்தும் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை நிராகரித்து மூன்றாவது கூடுதல் நீதிபதி லோகேஸ்வரன் பிணை மறுத்தார்.

மீண்டும் தாக்கல் செய்த பிணை மனு 22.03.2018 அன்று விசாரணைக்கு வந்த போதும் குறுக்கிட்டு பிணை தரக்கூடாது என வழக்கறிஞர்கள் பலரும் வாதிட்டனர். வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திரு. கனகராஜ், மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு. போஜகுமார், முருகானந்தம், ராஜாதமிழரசு, ஆனந்த நாராயணன் ஆகிய வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இதை ஏற்ற மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு அவர்கள் பிணை மறுத்து உத்தரவிட்டார்.

குற்றம் இழைத்து கொலையும் நடந்த நிலையில் தனது போலீசுத்துறை ஆய்வாளரைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து தகிடுதத்தங்களை செய்து வருகிறது காவல்துறை. 3000 பேருக்கு அதிகமாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியபோதும் கி.மீ கணக்கில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் ஒன்றின் கண்ணாடி கூட உடைபடவில்லை. ஆனால், தடியடி நடத்திய பின் பல வாகனங்களின் கண்ணாடி நொறுக்கப்பட்டுள்ளது. இதில் பலவும் காவல் துறையால் நொறுக்கப்பட்டதாக தகவல் இருக்கிறது. மெரினா போராட்டத்தின் போது பெண் போலீசே குடிசைக்கும் வாகனத்துக்கும் தீவைத்த சம்பவம் ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரித்தது போல இங்கு யாரும் வீடியோ எடுக்க வில்லையே தவிர அதை ஒத்த சம்பவங்களே நடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றவாளிகளாக சித்தரித்தும் கொல்லப்பட்ட பெண் கர்ப்பமாக இல்லை என்று பேசியும் அவர்களின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறது போலீசு. இறந்தவர் வயிற்றில் இருந்தது சிசுவா, கட்டியா, கர்ப்பமாகவே இல்லையா என்று பட்டிமன்றம் நடத்துகிறது போலீசு. கர்ப்பம் இல்லை என்றால் மட்டும் கொலை நியாயமாகிவிடுமா என்ன?

மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அந்தப் பொருள் கர்ப்பமா, கட்டியா என்பது தெரிய ஒரு மாதம் ஆகும் என்கிற நிலையில் இப்படி குரூர புத்தியுடன் செயல்படும் போலீசின் தில்லு முல்லுகளை முறியடித்து நியாயத்தை நிலைநாட்ட உஷாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் பிற ஜனநாயக சக்திகளும் ஒன்று பட்டு போராடி வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க