Saturday, April 19, 2025
முகப்புசெய்திமோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !

மோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !

-

திருப்பூர் பின்னலாடை தொழிலில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அரசு தரப்பிரிலிருந்து உதவிகள், உரிய வழிமுறைகளோ, வழிகாட்டுதல்களோ வரவில்லை. கூடுதலாக பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல் படுத்திய பொழுது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த வாக்குறுதி என்ன? ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட சலுகைகள் பெருமளவு குறைக்கப்படும். கட்டிய வரிகளை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு என்பதை ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு பின்னர் அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்த 7 நாட்களில் 90 % அளவிற்கான கட்டிய வரிகள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். மீதம் உள்ள 10% ஆவணங்கள் சரி பார்ப்பிற்கு பின்னர் 90 நாட்களில் வங்கிக்கு செலுத்தப்படும் என்ற உறுதியை அளித்திருந்தார்.

இவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை ஏனெனில் ஆவணங்களை இணைய வழியாக பதிவேற்றம் செய்யக்கூடிய வசதியே இன்று வரை ஏற்படுத்தப்படவில்லை, அதற்குரிய மென்பொருள் இன்று வரை உருவாக்கப்படவில்லை. ( இந்தியா, உலகின் மென்பொருள் உருவாக்கத்தின் தலைநகரம் என்று ஒரு புறம் மார்தட்டிக்கொள்கிறோம்)

நாடு முழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் தங்களது சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் வாயிலாக பல்வேறு வழிகளில் மத்திய அரசிடம் முறையிட்டதின் பலனாக கடந்த ஒரு மாதமாக மேனுவல் ஃபைலிங் முறையில் கட்டிய ஜி.எஸ்.டி வரிகளை திரும்ப அளிக்கும் உத்தரவை தொடர்ந்து ஆவணங்கள் பெறப்பட்டு வரிகள் திரும்ப வங்கி கணக்குகளுக்கு வர துவங்கியுள்ளது.

திருப்பூரில் மட்டும் மத்திய கலால் துறையில் பதிவு செய்த ஏற்றுமதியாளர்கள் 1500. ஆனால் அரசு மேனுவல் முறையில் ஜி.எஸ்.டி வரிகளை திரும்ப பெறலாம் என அனுமதித்தும் இன்று வரை 150 ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே ஆவணங்களை தாக்கல் முடிந்துள்ளன. அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பாதுகாப்புத்துறை அமைச்சராக மாறிச் சென்றுவிட்டார்.

ஒரு புறம் அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கினாலும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன.

ஏற்றுமதி தவிர்த்து இயங்கக்கூடிய உற்பத்திக்கு உதவக்கூடிய சார்பு நிறுவனங்கள் எனப்படும் ஜாப் ஒர்க் நிறுவனங்களான நிட்டிங், டையிங் , பிரின்டிங், எம்ப்ராய்டரி, சிறு தையல் நிலையங்கள், ஜி.எஸ்.டி வரிகளை எவ்வாறு திரும்ப பெறுவது என்ற வழிமுறையே தெரியாமல் தவிக்கின்றன. அதிகாரிகளும் தங்களுக்கு உரிய வழிமுறைகளோ, வழிகாட்டுதல்களோ வரவில்லை என்று தொழில் முனைவோரின் நிலை கருதி வருத்தத்தையே பதிலாக தருகின்றனர்.

புதிய வரி சூழல் இவ்வாறிருக்க, ஆயத்த ஆடை ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருகிறது, வங்கதேச நாட்டிலிருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது உள்நாட்டு ஆயத்த ஆடை வர்த்தகம். நமது நாட்டில் இயங்கும் பன்னாட்டு ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்த வாய்ப்புகளை தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வங்கதேசத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக சிறு, குறு, மத்திய தர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் வியாபார வாய்ப்புகளை தவறவிட்டு, தொழில் முனைய பெற்ற வங்கி மற்றும் வங்கி அல்லாத கடன்களுக்கான வட்டியை கட்ட இயலாத சூழல், வங்கி வட்டி, தொழில்சாலைக்கான வாடகை, பணிக்கமர்த்திய ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிலையான மாதாந்திர செலவீனங்களை தவிர்க்க இயலாது, நாளைய தினம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் இந்த செலவீனங்களை தங்கள் சேமிப்புகள், தங்க நகை அடமானம், தெரிந்தவர்கள், உற்றார், உறவினர் என்ற அளவில் கைமாற்று என்ற அளவில் சுழலும் தினங்கள் ஒரு கட்டத்தில் இயங்க இயலாத நிலையை அடைந்து, தொழில் முடக்கம் மட்டுமல்ல, பல்வேறு சட்ட சிக்கல், உறவினர்கள் நண்பர்களிடத்தில் பகை, கட்ட பஞ்சாயத்துகள், சட்ட நடவடிக்கைள் என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பின்னர் ஒரு நாள் அனைத்தையும் இழந்து வேறு ஊர் செல்லும் நிலை, அதையும் தாண்டி தற்கொலைகள்.

அரசு தான் காரணம்!

பொருளாதார சீர்திருத்தம் என்பது இங்கே முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நாட்டு மக்களை பாதிப்பதாகவும் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஃபைவ் ஸ்டார் சாக்லேட் மற்றும் கோவில்பட்டி குடிசையில் தயாராகும் கடலைமிட்டாயும் ஒரே தராசில் அளவீடு செய்து வரி சீர்திருத்தம் செய்தால் யார் வளர்வார்கள், யார் அழிவார்கள்?

மிட்டாய் என்பது ஒரு உதாரணமே, ஒட்டு மொத்த வரிவிதிப்பும் இவ்வாறு தான் கட்டமைக்கப்பட்டு பின்னர் மாதாந்திர கூட்டத்தில் இன்னாரின் கோரிக்கைகளுக்கு செவி மடுத்து வரிகள் குறைக்கப்பட்டது என்று பெருமையுடன் அறிவித்து அதற்கு பாராட்டும் பெற்றுக் கொள்வதெல்லாம் மக்களை ஆக சிறந்த முட்டாள்களாக நினைப்பவர்களால் மட்டுமே இயலும்.

ஏனெனில் வரிவிதிப்புகள் கள அளவில் ஆய்வு செய்து, மாநில அரசு, சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர், அதற்குரிய சங்கங்கள், தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் என அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அதிலிருந்து அரசுக்கும் வருவாய், தொழிலும் வளரவேண்டிய தேவை, வரிவிதிப்புக்கு வராதவர்களுக்கு அதற்குரிய ஆலோசனைகள், அதையும் மீறி எய்பவர்களுக்கு கிரிமினல் வழக்கின் அடிப்படையில் தண்டனை, என ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை விதித்து அதற்கு பிறகு சலுகைகள் குறைக்கப்படும் புதிய வரி சீர்திருத்தம் இவ்வாறு இருக்கும் என அனைவர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்பிறகு மிக நுட்பமாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டிய வரி சீர்திருத்தம் அவசரகதியில், பன்னாட்டு ஆலோசனை நிறுவனங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் இவ்வளவு நெருக்கடிகளுக்கும் காரணம்.

இந்த சீர்திருத்தங்கள் தொழிலை, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும், இதன் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றெல்லாம் கணக்குகள் சொல்லப்பட்டது, ஆனால் நிலையோ ஒவ்வொரு தொழில் முனைவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, தொழில் வாய்ப்புகள் இழப்பு, அதன் தொடர்ச்சியாக வேலை வாய்ப்புகள் இழப்பு, புதிய வாய்ப்புகள் உருவாகாத நிலை, எங்கு சென்று முறையிட்டும் எந்தவிதமான பதிலும் தீர்வும் இல்லாத நிலை, மொத்தத்தில் அனைத்தும் ஸ்தம்பிக்கும் ஒரு நிலையை நோக்கி செல்வதை மறுக்க இயலாது.

திருப்பூரை பொறுத்த வரை நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்பதெல்லாம் பழங்கதை. இன்று இன்றைய முதலாளி இன்றே தொழிலாளியாக வேண்டிய கதை. அந்த தொழிலாளி வாய்ப்பும் எத்தனை நாள் என்பதாக நிலைகள் மாறிவருகின்றன.

தற்சமயம் ஏற்பட்டுள்ளது ஒரு பொருளாதார சுனாமி, எண்ணற்றவர்களை வாரி சுருட்டி செல்ல தயாராக இருக்கும் இந்த சுனாமியின் முடிவில் எத்தனை பேர் தப்ப முடியும்?

ரயில் பயணி ஒருவர் கழிவறை சுத்தமாக இல்லை என்று டிவீட்டரில் மத்திய அமைச்சருக்கு செய்தி அனுப்புகிறார், அடுத்த ரயில் நிலையத்தில் கழிப்பறை சுத்தம்செய்யப்பட்டு டிவீட்டரில் பதில் அளிக்கப்படுகிற அதே அரசாங்கத்திடம்தான் நாடு முழவதும் உள்ள ஆயத்த ஆடை மற்றும் சிறு குறு மத்திய தர நிறுவனங்கள் நேரிலும், மின்னஞ்சலிலும், டிவீட்டர் உள்ளிட்ட இயன்ற வழிகளில் செய்திகளை , கோரிக்கைகளை அனுப்பியும் அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டுள்ளது.

வந்தாரை, வாழ்வில் வழி இழந்து நின்றவர்களை வாழவைத்த திருப்பூர் இன்று வலிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நெருக்கடி அனைவருக்குமானது, இதில் கட்சி, மத, இன, சாதிய வேறுபாடுகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றும் தருணம்.

இனி ஒரு தற்கொலை நடக்க கூடாது, இழந்த தொழிலை திரும்ப பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம், மத்திய மாநில அரசுகளின் பாராமுகத்தை மாற்றுவோம். திருப்பூர் சிறு முதலாளிகளும் , தொழிலாளிகளும் என்றுமே எதிர்மறையான காலசூழலை நேர்மறையாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர். தொடர்புக்கு : 99658 86810.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க