Saturday, April 19, 2025
முகப்புகளச்செய்திகள்காவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் !

காவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் !

-

மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்களுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத். மோடி அரசின் அடிமைகளாக ஆளும் தமிழக அரசோ நீதிமன்ற அவமதிப்பு என்று நாடகம் நடத்துகிறது.

கல்லானாலும் கணவன் என்ற புனிதக்கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.

“முறித்துக் கொண்டால் தண்ணீர் வந்துவிடுமா?“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.

பல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாநிலப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.

கூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.

இருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆகிய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.

தமிழகமெங்கும் ஒரு வாரமாக போராட்டம் தீவிரமடைந்திருக்கின்றன. விவசாய சங்கங்கள், தி.மு.க உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகள், வணிகர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்பினர் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

அந்த போராட்டச் செய்திகளோடு இன்றைய நேரலையை துவக்குகிறோம். போராட்டம் குறித்த செய்திகளை நீங்களும் (vinavu@gmail.com) அனுப்பலாம்.

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க