காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு கொடுமை முடிந்துவிடவில்லை. இதை கண்டித்த பிரபலங்களை குறிவைத்து இந்துமத வெறி டிரோல் படைகள் செயல்பட்டு வருகின்றார்கள்.

சிறுமி வன்கொடுமை-கொலை குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பு கருத்தை தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பாலிவுட் சினிமா உலகினர் “நான் இந்துஸ்தானத்தை சேர்ந்தவள். நான் வெட்கப்படுகிறேன். தேவிஸ்தான் கோவிலில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை. “ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டார்கள். இதன் மூலம் சிறுமி பாலியல் வன்கொடுமை/கொலைக்கு நீதி கோரிய போராட்டங்களுக்கு ஆதரவான பொதுகருத்து பரவலாக மக்களை சென்றடைந்தது.
இப்பின்னணியில் இப்பிரபலங்களையும் முசலீம்களையும் குறி வைத்து அவர்கள் ஒப்பந்தம் செய்திருக்கும் விளம்பர நிறுவனங்களுக்கும், படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அழுத்தம் தரும் வகையில் அந்நிறுவனங்களை புறக்கணிக்கும் பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்து வருகிறார்கள் இந்து மத வெறி அமைப்பினர்.
மேற்கண்ட போராட்டத்தில் பங்கு கொண்ட நடிகை ஸ்வரா பாஸ்கர் என்பவர் அமேசானை விளம்பரப்படுத்தும் விளம்பர படத்தில் இடம் பெற்றிருக்கிறார். இதை டிவிட்டரில் அறிவித்திருந்தது அமேசான் நிறுவனம். இதை தொடர்ந்து இந்து மத வெறியர்கள் அமேசானை புறக்கணிப்போம்(boycott amazon) என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். பத்மாவத் திரைப்படம் வெளியாகிய போது அத்திரைப்படம் குறித்து வயர் இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் பெண்களை வெறும் பெண்குறியாக சித்தரிப்பதைத் தாண்டி எதுவுமில்லை என்று எழுதியிருந்தார் ஸ்வரா.

பலர் தங்களது ஆர்டர்களை கேன்சல் செய்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தங்களது செல்போனில் இருக்கும் அமேசான் செயலியை நீக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்பிரச்சாரம் எந்த விதத்திலும் வியாபாரத்தை பாதிப்பதில்லை என்பது நிறுவனங்களுக்கு நன்றாக தெரியும். சீன பொருட்களை புறக்கணிப்போம் என எவ்வளவு கூவினாலும் சந்தை ஆதிக்கத்தில் அவர்கள் வேகமாக முன்னேறி வருவது அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும் இந்துமத வெறி ட்ரோல்களின் பிரச்சாரத்தை தொடர்ந்து அவ்விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியிருக்கிறது அமேசான் நிறுவனம். இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் அச்சமூட்டுவதாக அமீர்கான் தெரிவித்த போது அவர் ஒப்பந்தம் செய்திருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை எதிர்த்தார்கள் இந்துமத வெறியர்கள்.
இது ஒருபுறம் இருக்க இதே போன்று ஓலா நிறுவனத்தில் டாக்ஸி புக் செய்ததில் தனக்கு முஸ்லீம் ஓட்டுநனரின் வண்டி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி அதை கேன்சல் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அபிசேக் மிஸ்ரா என்ற வி.எச்.பி இந்துமத வெறியர். காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பிறகு இந்து மத கடவுள்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எழுதப்பட்டதாகவும் அதற்கு எதிராக தான் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இது சிறுமி ஆசபா மீதான் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியவர்கள் மீதான கோபம்.
வழக்கம் போல் இது அவரின் சொந்தக் கருத்து என்று கூறியுள்ளன, இந்து மத வெறி அமைப்புகள். சமூக வலைதளங்களில் பலரும் பார்ப்பன இந்துமதவெறியர்களது வன்மத்தினைக் கண்டித்து எழுதி வருகிறார்கள்.
Dear @Olacabs, if u don’t believe in racial or religious discrimination of your employees, please block this moron’s Ola account. https://t.co/OqhucFRNrK
— Kapil (@kapsology) April 22, 2018
@Olacabs requesting Ola to ban this guy immediately from ur passenger list and black list him 👇or Ola should tell us they encourage this behaviour o discrimination towards their drivers. https://t.co/HyiDSQyI64
— Midhat Kidwai (@midhatkidwai) April 22, 2018
இந்துமத வெறியர்களின் இச்செய்கைகளை கண்டிப்பதுடன் அவர்களைப் போல நாமும் தீவிரமாக செயல்படும் தேவை இருக்கிறத. தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் தினமலர் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. ஏன் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் போராடி வரும் பத்திரிகையாளர்களை பதவி நீக்கம் செய்யப் போவதாக செய்திகள் வருகின்றன. அப்படியான தருணங்களில் நாமும் இதுபோன்ற நிறுவனங்களை புறக்கணிக்க கோரும் பிரச்சாரங்களை மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும். எதிரி வைத்திருக்கும் ஆயுதத்தை பறித்து நாமும் அதை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
– வினவு செய்திப் பிரிவு
தரவுகள்: