தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் சந்திப்புக் கூட்டம் கடந்த வாரம் (ஏப்ரல் 3வது வாரம், 2018) டில்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் அதிகாரம் மிகவும் வரம்புக்கு உட்பட்டு இருப்பதால், முழு முனைப்புடன் செயல்பட முடியவில்லை என்றும், அதன் அடிப்படையில் தமக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை அணுகுவது என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

டில்லியில் பி.டி.ஐ. நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவ்வாணையத்தின் தலைவர் சையது கைருல் ஹஸன் ரிஸ்வி, ”தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய பழங்குடியினர் நல ஆணையம் ஆகியவை அரசியல் சாசன அந்தஸ்து பெற்றவைகளாக இருக்கின்றன. ஆனால் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு இதுவரை அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

மேலும், தற்போது ஆணையத்திற்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அதிகபட்சமாக தலைமைச் செயலர், போலீசுத் துறை தலைவர் போன்றோருக்கு நேரில் விளக்கமளிக்கும் படி அழைப்பாணை மட்டுமே வழங்க முடியும் என்றும் அவர்கள் ஆஜராகாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடிவதில்லை என்றும் கூறினார்.

இந்த அடிப்படையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கக் கோரவிருப்பதாகவும், அவ்வாறு வழங்கப்பட்டால் மட்டுமே தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்கவும், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கவும் முடியும் என்றும் பேட்டியளித்துள்ளார்.

இதற்கு முன்னால், சமூக நீதி மற்றும் அதிகாரத்திற்கான நிலைக்குழு (2017 -2018), சமர்ப்பித்த தனது 53-வது அறிக்கையில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அதன் தற்போதைய நிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைக் கையாளுவதற்கு திறனற்றதாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உடனடியாக அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சையது கைருல் ஹஸன் ரிஸ்வி (இடது), சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீயுடன்

ஆர்.எஸ்.எஸ்.-ன் பாபர் மசூதி இடிப்பு தொடங்கி, மோடி அரசின் பாதுகாப்பில் நடைபெறும் மாட்டுக்கறி கொலைகள் வரை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தாக்குதல்களில் எல்லாம் குற்றவாளிகள் எளிதாகத் தப்ப வைக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன்னால் அசீமானந்தா, பிரக்யா சிங், அமித்ஷா போன்ற முக்கியக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஒருவேளை தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் உண்மையல்ல. ஏனெனில் ஏற்கனவே அரசியல் சாசன அந்தஸ்து உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், தேசிய பழங்குடியினர் ஆணையமும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றம் கூட தைரியமாக வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்குமாறு உத்திரவிட்டது. ஆனால் குறைந்தபட்சமாக சிறுபான்மையின மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு கூட ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்பதை மோடி அரசு விரும்புகிறது.

நாம் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், மற்ற இரண்டு ஆணையங்களுக்கும் பல்லை பிடுங்கிவிட்டார்கள் என்றால், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் வாயையே தைத்து விட்டார்கள்!

– வினவு செய்திப் பிரிவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க