காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை சார்பில் கடந்த ஏப்ரல் – 21 அன்று கல்லணையில் இருந்து தொடங்கியது, மக்கள் அதிகாரம். கல்லணையில் தொடங்கிய இந்நடைபயணம் ஏப்ரல் – 30 அன்று பூம்புகாரில் நிறைவடைகிறது. நடைபயணத்தின் நிறைவையொட்டி, சீர்காழி பகுதியிலுள்ள திருமுல்லைவாசலில் நடைபெறும் என அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மனுவைக் கூட வாங்கிப் பார்க்காமல், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது சீர்காழி போலீசு. ‘’என்ன காரணத்துக்காக அனுமதி மறுக்கிறீர்கள்? எழுதிக் கொடுங்கள்’’ என வாதிட்டனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள். ‘’அய்யாகிட்ட பேசிட்டு சொல்றேன்… எஸ்.பி.கிட்ட பேசிட்டு சொல்றேன்’’னு ஏப்ரல்-18 முதல் போக்கு காட்டி வந்தது சீர்காழி போலீசு.

இந்நிலையில், பொதுக்கூட்ட அனுமதி தொடர்பாக போலீசு நிலையம் சென்ற மக்கள் அதிகாரத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி மற்றும் முன்னணியாளர் தோழர் ஸ்டாலின் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது சீர்காழி போலீசு.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியது; காசுமீரத்துச் சிறுமி ஆசிஃபா, பா.ஜ.க. கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சுவரொட்டி ஒட்டியது; ஆகிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும், மேலும் தொடர்ந்து அரசுக்கு எதிராக கலகம் செய்யும் விதமாக செயல்படுவதாலும் இந்தக் கைது நடவடிக்கை என்றது, போலீசு.

சீர்காழி மாஜிஸ்ட்ரேட் முன் தோழர்களை நேர்நிறுத்தியது போலீசு. ‘’போஸ்டர் ஒட்டுவது கூடக் கிரிமினல் குற்றமா?’’ என அங்கேயே வாதிட்டனர், தோழர்கள். சொந்தப் பிணையில் விடுவித்தார் மாஜிஸ்ட்ரேட்.

நெல்வயல்களைப் பாழாக்கும் ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு என்பதும்; பூமியைக் குடைந்து, வருங்காலத் தலைமுறையையே இல்லாதொழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களை கைவிடு என்பதும்; காவிரி நீரின் தமிழக உரிமையை மறுத்து, அரைகுறை வயித்துப்பாட்டுக்கும் வேட்டு வைக்கும் மத்திய அரசின் ஓரவஞ்சனையை கண்டிப்பதும் தேசவிரோதமாகத் தெரிகிறதாம் அரசுக்கு.

இது, தேசவிரோதம் என்றால்; இது கலகம் என்றால் அதைத் தொடர்ந்து செய்வோம்; துணிந்து செய்வோம்!

தகவல்: மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க