
கட்சிக் கொறடா உத்தரவை மீறி அதிமுக அரசுக்கு எதிராக ஓட்டளித்த ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜெயா மறைவுக்குப் பின் அதிமுகவை கையில் வைத்திருந்த சசிகலா கும்பலுக்கும், அதிமுக-வை கட்டுப்படுத்த நினைத்த பாஜக கும்பலுக்கும் இடையிலான யுத்தம், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயா சமாதியில் தியானமிருந்து தொடங்கிய போது பகிரங்கமாக வெளிப்பட்டது.
இந்த நாற்காலிச் சண்டையின் இடையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனையடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறி அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களையும் கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் பதவிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இன்று (27-04-2018) பிற்பகல் இந்த அமர்வு வழங்கிய தீர்ப்பில்,”சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தகுதிநீக்கி உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்ளும்போது, உயர் நீதிமன்றம் தலையிடலாம் என்ற தி.மு.க. தரப்பு வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 11 பேரும் எம்.எல்.ஏ.க்களாக பதவியில் நீடிக்கலாம் என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதே போல சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயாவின் உருவப்படத்தை சட்டசபையிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தொடுத்த வழக்கிலும் இன்று இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு, இவ்வழக்கிலும், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பெரிய கிரிமினல் ஜெயாவே (படம்) சட்டசபையில் இருக்கும்போது, சின்னக் கிரிமினல்களான இந்தப் பதினோறு பேரும் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே என்று நினைத்திருப்பார் போலும் நமது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
உச்சநீதிமன்றமோ உயர்நீதிமன்றமோ இரண்டிலும் நீதி கிடைக்காது என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு சான்று. உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா மூலம் நடைபெறும் முறைகேடுகள் மற்ற நீதிபதிகள் மூலமாக பகிரங்கமாக வெளிவந்து விட்டது. எனில் மற்ற நீதிமன்றங்களில் நிலைமை அதன் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும் என்பது வெள்ளிடை மலை.
இவர்கள் உருவாக்கும் சட்டத்திற்கு கட்டுப்படுவதோ, மீறுவதோ இரண்டுமே இவர்கள் சொல்லும் விளக்கத்தை பொறுத்துத்தான் என்பதால் நீதிபதிகள் அடித்து விளையாடுகிறார்கள். தற்போது தமிழகத்தில் பா.ஜ.க-வின் பினாமி ஆட்சிக்கு இடையூறு வரக்கூடாது என்பதால் தீர்ப்பு இப்படி வந்திருக்கிறது. ஒருவேளை பா.ஜ.க இந்த ஆட்சியை கலைக்க நினைத்திருந்தால் தீர்ப்பு சபாநாயகரின் உத்திரவில் தலையிட்டிருக்கும்.
கடந்த ஒரு ஆண்டாக தமிழ் ஊடகங்கள இந்த எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, பா.ஜ.க அழுகுணி ஆட்டத்தைத்தான் பேசி வருகின்றன. இனி இன்னும் ஒரு வருடம் அதை பேசி அறுப்பதற்கும் இந்த தீர்ப்பு நிச்சயம் உதவும். நீதிக்கான போராட்டம் நீதிமன்றத்திலேயே தோற்றிருக்கும் போது டி.வி விவாதமும் வெட்டி வாதமாகத்தானே இருக்கும்?
ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும் ஜெயாவின் படத்தை அரசு அலுவலங்களில் பூஜை செய்யும் சபாநாயகர் உத்திரவில் தலையிட மாட்டேன் என்கிறார் நீதிபதி. இதையே பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் படத்தை வைத்தால் பா.ஜ.க-வும் நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளுமா? இல்லை சபாநாயகர் உத்தரவுக்கு ஏற்ப ஆட்டோ சங்கர், தாவுத் இப்ராஹிம், ஹிட்லர் போன்றவர்களின் படத்தை வைப்பதைத்தான நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? ஜெயலலிதா எனும் குற்றவாளி பார்ப்பனியம் போற்றும் முதல் வரிசைத் தலைவர் என்பதால் அவரை ஊடகங்கள் முதல் நீதிமன்றம் வரை சிறப்பு சலுகை கொடுத்து வணங்குகின்றனர். இந்த அடிமைத்தனம்தான் சாதாரண மக்களுக்கான ஜனநாயகத்தை மறுக்கும் சர்வாதிகாரமாக உருவெடுக்கிறது.
சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் எனும் நீதித்துறையை மாற்றுவதற்கு மற்றுமொரு வழக்கு தேவையில்லை. மக்களின் முடிவில் தலையிட வாய்ப்பில்லை எனுமளவுக்கு மக்கள் போராட்டங்கள் நடக்கும் போது மட்டுமே ஜெயா எனும் குற்றவாளியின் படங்கள் குப்பைத் தொட்டிக்கு போக முடியும்.
– வினவு செய்திப் பிரிவு.