பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. அங்கே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பதிவுக் கட்டணம், அறை வாடகை போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்தியும் முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கும் கட்டணங்களை நிர்ணயித்தும் நவம்பர், 2017-ல் ஆளும் பா.ஜ.க அரசு அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உபகரணங்களை பராமரிப்பதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவருவதற்கும் இந்த கூடுதல் கட்டணம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிகரித்துள்ள செலவை ஈடுகட்ட இக்கட்டண உயர்வு தேவை என மகாராஷ்டிர அரசு வாதிட்டுள்ளது.
ஆனால், இது தனியார் மருத்துவமனைகளுக்கு போகமுடியாமல் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்களின் மீது கடும் சுமையை ஏற்றியுள்ளது. ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியதோடு அரசு மருத்துவமனைகளின் கட்டணங்களையும் உயர்த்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க மத்திய மாநில அரசுகள்.
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் :
நோயாளிகளுக்கான பதிவு கட்டணம் ரூ. 10-லிருந்து ரூ.20-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டணமும் ரூ.200-லிருந்து ரூ.400-க்கு இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கட்டண முறை உள்ள அறைகளுக்கான வாடகை 7 நாட்களுக்கு மேல் தங்குவோர்க்கு நாளொன்றுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2000-ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான நோய் கண்டறியும் சோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கான கட்டணம் ரூ.350-லிருந்து ரூ.1100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சி.டி ஸ்கேன், மற்றும் எம்.ஆர்.ஐ பரிசோதனைகளுக்கான கட்டணம், ரூ.120 ஆக இருந்தது, தற்போது ரூ.600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பல், கண், எலும்பு அறுவை சிகிச்சைக்கான கட்டணமும் ரூ.1000 என்றிருந்தது போய், தற்போது ரூ.11,000-ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கான மகளிர் மருத்துவம், மகப்பேறியல் போன்ற சேவைகளுக்கான கட்டணமும் ரூ.50-திலிருந்து ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுவிட்டது.
இவற்றைப் போலவே, மருத்துவ சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம், ரூ.50-திலிருந்து ரூ.500-ஆக மாற்றப்பட்டு விட்டது. மேலும், இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களுக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும்.
சரி, மகாராஷ்டிரா அரசு சுகாதாரத்துறைக்கு இதுவரை எவ்வளவு செலவு செய்திருக்கிறது?
2017-18 ஆம் ஆண்டு மொத்த மாநில வருவாயில் 0.46 சதவீத்தை மட்டுமே சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிகக்குறைவாகும். தேசிய சராசரியே குறைவு எனும் போது மகாராஷ்டிர அரசின் ஒதுக்கீடு இன்னும் குறைவாகும்.
மராத்திய அரசு சுகாதார துறைக்கு சராசரியாக இந்தியாவின் தனிநபர் வருவாயில் (Per Capita) ரூ. 763-ஐ ஒதுகீடு செய்துள்ளது. ஆனால், மக்கள் செய்யும் சுகாதாரத்திற்கான செலவானது தனிநபருக்கு 2684 ரூபாயாக உள்ளது. அதாவது, அரசு ஒதுக்கீடு செய்வதை விட, கூடுதலாக 3.5 மடங்கு அதிகமான தொகையை மக்கள் தங்கள் சொந்த காசில் இருந்து செலவழித்தே தங்களது உடல் நலத்தை பேணி வருகிறார்கள்.
தேசிய சுகாதார புள்ளிவிவரம் 2017-ன் படி, சராசரியாக ஒரு நபருக்கு 3000 முதல் 6600 ரூபாய் வரை சுகாதாரத்திற்கென்று ஒதுக்கி, இந்த துறையில் ஓரளவு சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக லட்சத் தீவு, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், அந்தமான், கோவா ஆகியன உள்ளன. இவையெல்லாம் சிறிய மாநிலங்கள், மக்கள் தொகையும் குறைவு.
நேர் மாறாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உ.பி, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தனிநபர் சராசரியில் 1043 ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யவில்லை. இம்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர பா.ஜ.க. தான் ஆள்கிறது.
சுகாதாரத்துறையில் ஒட்டு மொத்த இந்தியாவுமே பின் தங்கிதான் உள்ளது
2014-15 க்கான தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின் படி, சுகாதாரத்திற்கான தனிநபர் செலவு சராசரியாக 3,826 ரூபாய் இருந்தது. இதில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது 1108 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள தொகையை மக்கள் தங்கள் கைகளில் இருந்தே கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் அரசு மிகக் குறைவான தொகையையே சுகாதாரத்திற்கு செலவிட்டு வருவதும், மக்கள் தாங்களாகவே தங்களின் சுகாதாரத்தை பேணி வருவதும் தெரிய வருகிறது.
அரசின் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு 2004-05 ஆண்டு தனிநபர் வருவாயில் 22.5 சதவீதமாக இருந்தது 2014-15 ஆண்டில் 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் மக்கள் பணத்தை தனியாருக்கு வாரியிறைத்தது பெருமளவு அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் 1.6%-ஆக இருந்த ஒதுக்கீடு 2014-15-ம் ஆண்டில் 3.7%-மாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் அடிப்படை வசதியின்றி 61% சதவீத பழங்குடிகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றார்கள். இவர்கள் பொது சுகாதார நிலையங்களையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர்.
கல்வி, சுகாதாரம், தண்ணீர் போன்றவை மக்களுக்கான அடிப்படை உரிமைகள். மக்களுக்கு அரசு உத்திரவாதப்படுத்த வேண்டிய சேவைகளில் மருத்துவம் அத்திவாசியமான ஒன்று. இவற்றை விற்பனைக்கான சரக்காக சந்தையில் திறந்துவிட வேண்டும் என்பதுதான் காட்ஸ் ஒப்பந்தத்தின் சரத்து. இது அமல்படுத்தப்படுவதைத் தான் இக்கட்டண உயர்வும், நிதிக் குறைப்பும் காட்டுகிறது. இதில் ஜி.எஸ்.டி வரியையும் சேர்த்து அமல்படுத்தி மக்களின் மீது பல்முனைத் தாக்குதல் நடத்திவருகிறது பா.ஜ.க அரசுகள்.
– வினவு செய்திப் பிரிவு.
மேலும் படிக்க: