”தின்னவும் மாட்டேன்; தின்னவிடவும் மாட்டேன்” என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி முன்வைத்த பிரபலமான முழக்கம். அந்த மேடையிலேயே லேசாக முடை நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. காரணம் பின் வரிசையில் அமர்ந்திருந்த அவரது பரிவாரங்களின் புளித்த ஏப்பம் தான். இந்த உண்மை இப்போது அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றது.

மோடிக்குப் படியளந்த முதலாளிகளின் வங்கிக் கடன் மோசடிகள், அமித்ஷா புத்திரனின் சொத்துக்களுடைய 16,000 மடங்கு வளர்ச்சி, நீரவ் மோடி உள்ளிட்ட 31 கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டு வெளிநாடுகளுக்குப் பறந்தது என ஊழல் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புகழ்மிக்க வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் பாரதிய ஜனதாவின் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
வங்கிக் கொள்ளையில் கூட்டாளியாக பியூஷ் கோயல்
ப்யூஷ் கோயலும் அவரது மனைவி சீமா கோயலும் மும்பையைச் சேர்ந்த ஷீர்டி இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் ஜூலை மாதம் 2010ம் ஆண்டு வரை இயக்குநராக இருந்துள்ளனர் . இந்தக் காலகட்டத்தில் அந்த நிறுவனம் வங்கிகளிடம் பல நூறு கோடி கடன் வாங்கியதும் இல்லாமல், அதற்கான வட்டியையும் கட்டாமல் இழுத்தடித்து வந்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் சேமநிதியையும் கட்டாமல் நிலுவை வைத்துள்ளது. 2010ம் ஆண்டு இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் பங்குதாரராகத் தொடர்ந்துள்ளார் பியூஷ் கோயல்.
வங்கிகளிடமிருந்து ஷீர்டி நிறுவனம் வாங்கிய கடன்களுக்கான தவணையைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்த நிலையில், 2014ம் ஆண்டு அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கடனில் 670 கோடி வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. (உத்தமர் மோடி பதவிக்கு வந்த ஆண்டு 2014 என்பதை நினைவிற்கொள்க)
வங்கிக் கடனுக்கு தவணை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்த ஷீர்டி நிறுவனம், இண்டர்கான் அட்வைசர்ஸ் எனும் கம்பெனிக்கு எந்த உத்தரவாதமும் பெறாமல் ஒன்றரை கோடி கடன் கொடுத்தது. கடன் வாங்கிய அந்த இண்டர்கான் கம்பெனி பியூஷ் கோயலின் மனைவி சீமா கோயலுக்குச் சொந்தமானது. பியூஷ் கோயலின் மனைவிக்கு “கடன்” கொடுக்கப்பட்ட கையோடு, மேற்படி ஷீர்டி கம்பெனியார், தேசிய கம்பெனிச் சட்டத் தீர்பாயத்திடமிருந்து பரிந்துரை ஒன்றைப் பெற்று அதனடிப்படையில் வங்கிக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தையும் கடன் வழங்கிய வங்கிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். உடனே கடன் கொடுத்த வங்கிகள் ஷீர்டி நிறுவனத்தின் 60 சதவீத கடன்களைத் தள்ளுபடி செய்தன. அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது.
அமைச்சரின் மனைவிக்கு எப்படி எந்த உத்தரவாதமும் இல்லாமல் (Unsecured) “கடன்” கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அது ”நட்பு ரீதியாக” கொடுக்கப்பட்ட கடன் என்றாராம் அந்நிறுவனத்தின் முதலாளி ராகேஷ் அகர்வால், தள்ளுபடி கூட நட்புரீதியான தள்ளுபடிதான்.
பியூஷ் கோயலின் பேக்கரி டீலிங்
உப்புமா கம்பெனிகளைத் துவங்குவதும், அதைக் கொண்டு கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதையுமே முழுநேரத் தொழிலாக கொண்டவர் பியூஷ் கோயல். பிளாஷ்நெட் இன்போ சொல்யூசன்ஸ் எனும் நிறுவனத்தைத் தனது மனைவியுடன் சேர்ந்து 2000வது ஆண்டு துவங்குகிறார் பியூஷ் கோயல். ரூ. 10 முகமதிப்பு கொண்ட 50,070 பங்குகளுடன் துவங்கப்பட்ட இந்த உப்புமா கம்பெனி, ஆரம்பத்தில் தனது தொழில் நடவடிக்கைகளாக இணையத் தொழில்நுட்பம், மென்பொருள் சேவை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தது.
எனினும் 2012-13 நிதியாண்டில் இந்தக் கம்பெனி தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையின் படி மென்பொருள் சேவைத் தொழிலில் இருந்து சுமார் 4 கோடி வருவாய் கிடைத்ததாகவும், பிற முதலீடுகளின் மூலம் சுமார் 4.53 கோடி அளவுக்கு ஈவுத்தொகை கிடைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. அதே ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் படி இந்தக் கம்பெனியின் இருப்பு மற்றும் உபரி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 13.62 கோடி.
மறு ஆண்டின் (2013-14) நிதியறிக்கையின் படி, மென்பொருள் சேவை மூலம் வந்த வருவாய் முற்றாக நின்று போயிருந்தது. அதாவது வருவாயைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரே தொழில் நடவடிக்கையும் முற்றாக முடங்கிப் போனது. 2014ம் ஆண்டு மே மாதம் பிளாஷ்நெட் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து பியூஷ் கோயல் விலகுகிறார் – எனினும், அந்நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை கோயல் தம்பதியின் வசமே உள்ளன. (மோடியும் மே மாதம்தான் பிரதமராகிறார்). இரண்டே மாதத்தில் (ஜூலையில்) மேற்படி நிறுவனத்தை அஜய் பிரமல் எனும் முதலாளிக்குச் சொந்தமான பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனம் 48 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதாவது எந்த வருமானமும் இல்லாத, எந்த தொழில்நடவடிக்கையிலும் ஈடுபடாத, வெறும் உப்புமா கம்பெனியான பிளாஷ்நெட்டின் பங்குகளை சுமார் 1000 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார் அஜய் பிரமல். (அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்குத்தான் தன் மகள் இஷாவைக் கட்டிக்கொடுக்கிறார் முகேஷ் அம்பானி)
மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் முதலீடுகள் இருந்தாலோ, பிற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவை குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும். ஆனால், 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பிரதமர் அலுவலகத்திற்கு பியூஷ் கோயல் சமர்பித்த விவரங்களில் அவர் பிளாஷ்நெட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவராக இருந்ததையோ, அதன் பங்குகளை விற்றதன் மூலம் லாபமீட்டியதையோ குறிப்பிடவே இல்லை. தனக்கு ஒரு பெண்டாட்டி இருப்பதையே மறைத்தவர் பிரதமராக இருக்கும்போது, அவருடைய அமைச்சர் தனக்கு சொந்தமாக ஒரு கம்பெனி இருப்பதை மறைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
கோயல் – பிரமல் பரிவர்த்தனையை பார்க்கும்போது ஒன்று கோயல் வியாபாரத்தில் விஞ்ஞானியாகவும் பிரமல் அடிமுட்டாளாகவும் இருந்திக்க வேண்டும் அல்லது இந்த பரிவர்த்தனை வேறு காரணங்களுக்காக நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? ஆனால் முகேஷ் அம்பானியின் சம்பந்தி முட்டாளாக இருக்க வாய்ப்பில்லையே. ஆம், இந்த கொடுக்கல் வாங்கல்கள் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் பிரமல் நிறுவனம் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி (Renewable energy) துறைகளில் நுழைகிறது. நுழைந்த வேகத்திலேயே ஒரு பில்லியன் டாலருக்கு முதலீடுகளை ஈர்த்துக் கொள்ளும் பிரமல் குழுமம், நிறைய ஒப்பந்தங்களையும் வெல்கிறது. அதற்குத் தேவையான அரசு உதவிகளையும் பெற்றுக் கொள்கிறது. அந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருந்தவர் பியூஷ் கோயல்.
சுருக்கமாகச் சொன்னால், இடது கையில் வாங்கிய லஞ்சத்துக்கு விசுவாசமாக வலது கையால் அஜய் பிரமலுக்கு உதவியுள்ளார் பியூஷ் கோயல். ஆனால், அனைத்தும் ”சட்டப்பூர்வமாகவே” நடந்தேறியுள்ளது என்பது தான் விசேசம். ஐம்பதாண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரசின் ’தொழில்’ நுணுக்கங்களையும் லாவகங்களையும் ஒரு சில மாதங்களிலேயே கற்றுத் தேர்ந்ததுதான் 64 அங்குல மார்பழகரின் “ஆட்சித் திறமை”!
– வினவு செய்திப் பிரிவு
மேலும்