Wednesday, April 16, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !

துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்திருப்பதன் காரணம் ஒன்றேதான் - அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.

-

ராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகாஜன் என்ற அரசு அதிகாரி, தன் மீது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சக ஊழியர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட அவரது கோரிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதய் உமேஷ் லலித் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாஜன் மீது வழக்குப் பதியப்பட்டது சரி என்றோ, தவறு என்றோ தீர்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அந்த எல்லையையும் தாண்டி, இந்தத் தனிப்பட்ட வழக்கைப் பொதுமைப்படுத்தி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே திருத்தி எழுதியிருக்கிறார்கள். தங்களது தீர்ப்பில் பல இடங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வன்மத்தைக் கக்கியுள்ளனர். குறிப்பாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், பணத்திற்கு ஆசைப்பட்டுப் பொய்ப் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுத் திருத்தங்களை நியாயப்படுத்தியிருக்கின்றனர்.

தீண்டாமைக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, இனி சாதிவெறியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதே இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிக முக்கியமாக, இனி இந்தச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுள் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதுவே குற்றம் சாட்டப்படுபவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவர் சார்ந்த துறையின் உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் அனைத்திலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரைக் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக விசாரணை அதிகாரி கருதும்பட்சத்தில் மட்டுமே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லையெனில் வழக்கே பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தங்களது தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18- பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கினால், அவர் சாட்சிகளை மிரட்டிக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் முன் பிணை வழங்குவதைத் தடை செய்கிறது. ஆனால், அதனையும் திருத்திக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கலாம் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சமூக நீதியின்பாற்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களோ, மாற்றங்களோ கொண்டுவர வேண்டுமென்றால், அத்திருத்தங்களை ஏற்பது அல்லது மறுப்பது தொடர்பாக விவாதங்களை நடத்தி, அவற்றைச் செய்வதற்குத் தகுதியும் அதிகாரமும் கொண்ட இடம் நாடாளுமன்றம் மட்டும்தான்.

ஆனால், இரண்டு நீதிபதிகள் தங்களது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

காகித அளவில்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கக் கூடாது எனச் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இந் நீதிபதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் ‘‘வன்கொடுமை குறித்து அலசும் முன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், தாக்குதல்களையும் தடுக்க 1955 ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதுவே 1977 குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், இப்பழைய சட்டங்களின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தீண்டாமைக் குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ முடியவில்லை.
தமிழகத்தில் இம்மானுவேல் சேகரன் கொலை, அதனைத் தொடர்ந்து நடந்த முதுகுளத்தூர் கலவரம், கீழ்வெண்மனியில் 44 தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஆதிக்க சாதி நிலவுடமைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் குற்றவாளிகளை பி.சி.ஆர். சட்டத்தின்படித் தண்டிக்க இயலவில்லை.

பி.சி.ஆர். சட்டம் பரிந்துரைத்த தண்டனைகளின் அளவும், அதனை ஒத்த கிரிமினல் குற்றங்களுக்கு மற்ற இந்தியச் சட்டங்கள் அளித்த தண்டனைகளை விடக் குறைவாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தீண்டாமைக் குற்றங்களும் புதுப்புது வடிவங்களை எடுத்து, பழைய சட்டங்களின் கீழ் தண்டிக்க முடியாத நிலைமை உருவானது.

தங்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் இழைக்கும் வன்கொடுமைகள் குறித்துத் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியையும், கோபத்தினையும் எதிர்கொள்ளவியலாத நிலையில்தான், மைய அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 1989- ஆண்டு கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் விதிகள் அனைத்தும் 1969- ஆண்டு அமைக்கப்பட்ட இளையபெருமாள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட வரலாறு கொண்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத்தான் இந்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் மூலம் செல்லாக் காசாக்கியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் தலித் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் அரசின் அடக்குமுறையைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் தீர்ப்புக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினரின் வீடு உட்பட போராட்டத்தின் முன்னணியாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளால் சென்னையில் நடத்தப்பட்ட பேரணியைக்கூட நகர்ப்புறத்து ஆதிக்க சாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்பேரணி மீது வன்மத்தைக் கக்கினர்.

தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிற சாதியினர் மீது பொய்வழக்குப் போடுகிறார்கள் என்று இராமதாசு போன்ற ஆதிக்க சாதித் தலைவர்கள் வீண்பழி சுமத்தி வருவதைத் தங்களது தீர்ப்பில் பிரதிபலித்துள்ள நீதிபதிகள், அதனை நியாயப்படுத்தும்விதமாகத் தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளி விவரங்களைக் காட்டியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 2016- ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 15,638 வழக்குகளில், 11,024 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4,119 வழக்குகளில் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் பெரும்பாண்மை வழக்குகள் போலி வழக்குகள் என்றும் கூறுகின்றனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு நீதிபதிகள் பிரயோகித்துள்ள அதே அளவுகோலின்படி பார்த்தால், இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் பதியப்படும் பெரும்பாலான வழக்குகளையும் பொய் வழக்குகள் எனக் கூறலாம்.

இழிபுகழ்பெற்ற தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுள், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் அச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், அந்தச் சட்டத்தைக் கைவிட ஆளும் வர்க்கமும் போலீசு அதிகாரிகளும் விரும்பவேயில்லை.

பிரிட்டிஷ் காலத்திய ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் புனையப்பட்ட வழக்குகளுள் பெரும்பாலானவை போலி வழக்குகள்தான். டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடியதற்காக ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் மீது ராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தனது முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது பாசிச ஜெயா கும்பல்.

துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்வதன் காரணம் ஒன்றேதான் அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.

தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை வழக்காகப் பதிவு செய்யவே தாழ்த்தப்பட்டவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. உள்ளூர் ஆதிக்கச் சாதி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு அதிகாரிகள் எப்போதும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடுவர்.

வழக்கைப் பதிவு செய்ய வேண்டிய போலீஸ் அதிகாரிகள் வழக்கே பதியாமல் தவிர்த்து விடுகின்றனர். அப்படியே பதிந்தாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய வேண்டி போராட்டங்கள் மூலம் நிர்பந்திக்கும் போதும்கூடச் சரியான பிரிவுகளின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி வழக்கு பதியப்பட்டாலும், விசாரணையின் போக்கில் வழக்கை வலுவிழக்கச் செய்யும் உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது போலீஸ் அதிகாரிகளும் அரசு தரப்பு வழக்கறிஞரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, வழக்கை மிகவும் அலட்சியமாகக் கையாண்டு வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவர். இதன் காரணமாகவே பெரும்பாலான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்துள்ள நீதிக்கான சபை என்ற அமைப்பைச் சேர்ந்த வல்ஜிபாய் படேல், குஜராத் மாநிலத்தில் 1995 முதல் பதியப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 450 வழக்குகளை எடுத்துக் கொண்டு, அவற்றில் 95% வழக்குகளில் போலீசும், அரசு தரப்பும் போதுமான ஆதாரங்களைக் கொடுக்காமல் வழக்கை ஏனோ தானோவென்று நடத்தியதுதான் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

மீதமுள்ள 5% வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு மதிக்காததன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாதிச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்ற மொன்னையான காரணத்தைக் கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு குஜராத் மாநிலத்தை மட்டும் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக வன்னிய சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையர் வழக்கில் குற்றவாளிகள் இதுநாள் வரை தண்டிக்கப்படவில்லை. சாட்சிகளை மிரட்டி பிறழ்சாட்சிகளாக மாற்றி, அவ்வழக்கைப் பொய்வழக்காக மாற்றும் அபாயம் உருவாகியிருக்கிறது. தர்மபுரி இளவரசன் திவ்யா வழக்கின் அடிப்படையே வன்கொடுமைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் 94% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2011 முதல் 2016 வரையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,934 வழக்குகளில் 108 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் இது மேலும் குறைவாக வெறும் 1.6 சதவிதமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மை வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கை முறையாக நடத்தாததுதான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் தாழ்த்தப்பட்ட போட்மாங்கே குடும்பத்தினர் 2006 ஆண்டு ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்வழக்கில்கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

இந்த வழக்கிலும் சரி, 2002 ஆண்டு செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, அரியானவில் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் சரி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததற்கு நீதிபதிகள் கூறும் காரணம் அயோக்கியத்தனமானது. ‘‘பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்று குற்றவாளிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிடுகின்றனர்.

இவ்விரு படுகொலைகளின் போதும் கொல்லப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒட்டுமொத்த கிராமத்திற்கும் தெரிந்திருந்தது, அவர்கள் கொல்லப்பட்டதன் காரணமும் உலகத்துக்கே தெரிந்திருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளுக்குக் கொல்லப்பட்டவர்களின் சாதி தெரியாது என்று நீதிபதிகள் கூறுவது அப்பட்டமான பொய். உள்நோக்கம் கொண்டது.

இனி தாழ்த்தப்பட்டவர்களைக் கொலை செய்யும் போதோ, பாலியல் வல்லுறவு செய்யும்போதோ அத்தகைய குற்றங்களை இழைக்கும் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியபடியே அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அதனை வன்கொடுமையாகக் கருதமுடியும் என்று நீதிபதிகள் கருதுகின்றனர் போலும்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடுமையாக இருப்பதாகக் கூறப்படும்போதே இதுதான் நிலை. தற்பொழுது உச்ச நீதிமன்றம் செய்திருக்கும் திருத்தங்களின்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் மீது அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பார்க்க வேண்டும்; அல்லது அரசு உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இவையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை அலைக்கழித்து, வழக்குப் பதிவதை முளையிலேயே கைவிடச் செய்துவிடும் சதித்தனம் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் ஆகப் பெரும்பான்மை நீதிபதிகள் ஆதிக்க சாதியினராகத்தான் இருக்கின்றனர். இவர்களின் கண்ணோட்டமும் ஆதிக்க சாதிப் பணக்கார வர்க்க கண்ணோட்டமாகத்தான் இருக்கிறது. தீண்டாமையை இயல்பாகப் பார்ப்பது இவர்களது கண்ணோட்டத்திலேயே ஊறியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அதிகரித்து வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலும், சட்ட வரம்புகளை மீறி உச்ச நீதிமன்றம் வன்கொடுமைச் சட்டத்தின் மீது தொடுத்திருக்கின்ற இந்தத் தாக்குதலும் வேறு வேறானவை அல்ல. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகளின் ‘‘மன் கி பாத்”!

-அழகு

-புதிய ஜனநாயகம், மே 2018

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க