Monday, April 21, 2025
முகப்புதலைப்புச் செய்திநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்

நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்

கோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்ஸ்சிஜன் இல்லாமல் குழந்தைகள் மரணித்த போது தலைமை மருத்துவர் மீது பழியை போட்ட யோகி தற்போது உயர்நீதிமன்றத்தின் சிற்சில சீர்திருத்தங்களை கூட ஏற்காமல் உச்சநீதிமன்றம் ஓடியிருக்கிறார்.

-

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

த்திரப்பிரதேச மாநில பொது சுகாதாரத்துறையில் பாரிய அளவிலான சீர்த்திருத்தங்கள் செய்யவும் தணிக்கை ஆய்வுகள் நடத்துவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதற்கெதிராக கடந்த சில வாரங்களாகவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு உ.பி அரசு முயன்று வருகிறது.

மாநில பொது சுகாதார செலவீனங்கள் மீது தணிக்கை ஆய்வுகளை மேற்கொள்ளுதல், நோயாளிகளுக்கும் அவர்களை பராமரிப்பவர்களுக்கும் விலையிலா உணவு வழங்குதல், விலையிலா மருத்துவ ஊர்தியை உத்தரவாதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அலகாபாத் நீதிமன்றம் மார்ச் மாதம் அளித்திருந்த இந்த தீர்ப்பினை எதிர்த்து தான் உ.பி அரசு மூன்று முறை உச்சநீதிமன்ற கதவைத் தட்டியிருக்கிறது

அரசு மருத்துவ சேவைகளையே அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான செலவீனங்களை அரசு ஏற்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் முதல் விசாரணையிலேயே இவ்வழக்கிலிருந்து விலகி விட்டார். அதன்பிறகு உ.பி அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீர்திருத்தங்களுக்காக வழக்குத் தொடுத்தவர்களை உச்சநீதிமன்றம் இதுவரை அழைக்காத நிலையில் அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்த ஆதித்யநாத் அரசு விரும்புகிறது.

தவறான வாக்குமூலங்களை தந்ததற்காக மாநில மருத்துவக்கல்வி முதன்மை செயலரான இரஜினீஷ் துபே மற்றும் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் பதியவில்லை என்று காரணம் கேட்டு அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீசு அனுப்பியது தான் ஆதித்யநாத் அரசின் பீதிக்கு முதன்மையான காரணம்.

கொள்கை மற்றும் நிதி முறைக்கேட்டிற்காக மூத்த அரசு ஊழியர்களை நீதிமன்றத்திற்கு இழுப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று. உயர்நீதிமன்றம் வழங்கிய 21 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் தவறான வாக்குமூலங்கள் அளித்தது தான் உ.பி அரசின் இந்த நாட்டாமைத்தனத்திற்கு காரணம்

தன்னுடைய மூத்த அரசு அதிகாரிகளில் ஒருவரான இரஜினீஷ் துபேக்கு நோட்டீசு அனுப்பியதன் மூலம் உயர்நீதிமன்றம் தவறிழைத்து விட்டது என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்த முயற்சிக்கிறது ஆதித்யநாத் அரசு. கடந்த பத்தாண்டுகளுக்கான தணிக்கை ஆய்வுகளை சுகாதாரத்துறையில் நடத்தவியலாது என்றும் அது கூறியிருக்கிறது. வழக்கு தொடுத்தவரின் வேண்டுகோளுக்கும் கூடுதலான சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் உ.பி அரசு கூறியிருக்கிறது.

ஆனால் “இந்த ஆணையில் பொருத்தமில்லாத எதையும் அரசு காணும் பட்சத்தில் அதற்கான விவரங்களுக்கோ அல்லது மாற்றங்களுக்கோ நீதிமன்றத்தை அணுகலாம்” என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் நீதிமன்ற உத்தரவை நிறுத்துவதிலேயே ஆதித்யநாத் அரசு குறியாக இருக்கிறது.

கோரக்பூரின் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் இல்லாததால் குழந்தைகள் மரணத்த அவலத்திற்கு உ.பியின் பொது சுகாதாரத்துறையின் மோசமான செயல்பாடுகளே காரணம்.

சினேஹ் லதா சிங்கின் வழக்கு

உ.பி அரசு தடுக்க நினைக்கும் அந்த தீர்ப்பானது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சினேஹ் லதா சிங் என்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்டது. லதாவிற்கு 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-வது குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக சிறுநீர் போகும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை உள்ளிட்ட குறைந்தது 10 மருத்துவமனைகளுக்காவது சிகிச்சைக்காக அலைந்து திரிந்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

அவரது சிகிச்சைக்காக 250 ரூபாய் போன்ற சிறுதொகையைக் கூட அவரது குடும்பத்தினர் கடன் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த துன்பத்திலும் அரசு அதிகாரிகள் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

கடைசியாக லக்னோவின் பிரபலமான கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில்(KGMU) அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு தேவைப்படும் ஒரு அறுவை சிகிசைக்கு படுக்கை வசதி இல்லை என்று கைவிரித்து விட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு 2008-பிப்ரவரி மாதத்தில் தான் அவருக்கு படுக்கை வசதி கிடைத்தது. மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகே அவரது உடலிலிருந்து செயற்கை சிறுநீர் வடிக்கும் குழாய் நீக்கப்பட்டது. மகப்பேறுக்குப் பிறகு சிறுநீர் போக்கு பிரச்சினை ஏற்பட்டு 12 மாதங்களாக அலைந்து திரியும் நிலைக்கு லதா தள்ளப்பட்டார்.

அதன் பிறகு நட்ட ஈடு 50,000 ரூபாய் மற்றும் இழப்பீடு 5 இலட்சம் ரூபாய் கேட்டு உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை லதா தொடுத்தார். ஆனால் அதில் பெரும்பாலும் மாநில சுகாதார அமைப்பிற்கான சீர்திருத்தங்களை தான் கோரியிருந்தார்.

“மகப்பேறு மருத்துவத்திற்காக வரும் ஏழைப்பெண்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் அனைத்தும் அவை எத்தகையதாக இருந்தாலும் விலையில்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்பது அவரது 8 கோரிக்கைகளில் ஒன்று. மேலும் கருவுற்ற போதும், பேறுகாலத்தின் போதும் பேறுகாலத்திற்குப் பிறகும் தேசிய ஊரக சுகாதார சேவை கிடைப்பதை கறாராக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதன்மை சுகாதார நிலையங்கள், சமூக நல மையங்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் உரிய சிகிச்சைக்கான பதிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். குறைகளை சரி செய்ய ஒரு குழுவை உருவாக்கி பேறுகாலங்களில் நடந்த மரணங்கள் குறித்து தணிக்கை ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கடைசியாக லதா கேட்டிருந்தார்.

உ.பி சுகாதார மேம்பாட்டிற்காக அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள்

இலதாவின் கோரிக்கைகளை முன் வைத்து அலகாபாத் நீதிமன்றத்தின் சுதிர் அகர்வால் மற்றும் அஜித்குமார் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சிறப்புமிக்க அந்த 96 பக்க தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பில் உ.பி அரசுக்கு 21 வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளின் உள்ள காலி இடங்களை நிரப்புவது முதல் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்துதல் வரைக்குமான பல்வேறு தீர்ப்புகள் அந்த பக்கங்களில் நிறைந்திருந்தன.

அலகாபாத் உயர்நீதிமன்றம்

“வசதிவாய்ப்பு மிக்க உயர் அதிகாரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கிடைக்ககூடிய அதே மருத்துவ வசதி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் மேலும் ஏழ்மை, படிப்பறிவின்மை மற்றும் ஏனையத் தடைகளால் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஏழை மக்கள் அல்லலுற கூடாது என்றும் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அரசுக்கு வழிகாட்டியிருந்தது.

அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்புகளில் சில,

  1. தவறான வாக்குமூலங்களை அளித்ததற்காக மருத்துவக்கல்வித் தலைமை அதிகாரிக்கும் மோதிலால் நேரு மருத்துவக்கல்லூரி தலைவருக்கும் நோட்டீசு அனுப்ப வேண்டும்.
  2. அனைத்து அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும் அவர்களுக்கென்று தனிச்சிறப்பான வி.ஐ.பி சிகிச்சை கிடையாது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கான சிகிச்சை செலவீனங்கள் அரசு ஏற்றுக் கொள்ள கூடாது.
  3. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியாதாரம் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தால் துறை சார்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஏனெனில் “பயன்படுத்தப்பாடாத நிதி என்பது தேவைப்படும் சிகிச்சை மறுக்கப்பட்டதாகவே ஆகும்”.
  4. மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) மூலம் தணிக்கை ஆய்வுகள் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நிதியாதாரங்களை அந்த தணிக்கைகள் ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில், குற்றவியல் அல்லது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  5. மாவட்ட மருத்துவமனைகள், சமூக நல மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்கள் அனைத்திலும் ஒராண்டிற்குள் தணிக்கை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
  6. அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் தீர்ப்பு வந்த ஏழு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும்.
  7. கர்ப்பிணிப் பெண்களுக்கு சேவை செய்ய பெண் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.
  8. அரசு மருத்துவர்கள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளையும் ஊடுகதிரியல் (radiodiagnosis) மற்றும் நோயியல் (pathology) சோதனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை பரிந்துரைக்கும் அவர்களது போக்கையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
  9. கருக்கலைப்புகளை மருத்துவ அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட கூடாது. அங்கு நடக்கும் தவறுகளுக்கு மருத்துவ அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
  10. மருந்துகள், கருவிகள் மற்றும் சிகிச்சை அரங்கங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
  11. மருத்துவ ஊர்திகள் எளிதில் செல்லுமளவிற்கு போக்குவரத்து வசதிகள் மேம்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வண்டி நிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். குடிமக்கள் புதிய வண்டிகளை வாங்கும் போது குடியிருப்புகளில் வண்டி நிறுத்த அவர்களுக்கு இடம் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
  12. நோயாளிகளுக்கும் அவர்களை பரமரிப்பவர்களுக்கும் விலையில்லா உணவு வழங்க வேண்டும்.
  13. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள புல்வெளிகளை திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும் இரவு பத்து மணிக்கு மேல் சத்தமான எந்த கொண்டாட்டமும் கூடாது.
  14. இந்த அனைத்து நடவடிக்ககைகளையும் உ.பி யின் தலைமைச்செயலாளர் கண்காணித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இப்பட இருந்தாலும் அவை வழிகாட்டுதல்கள் மட்டுமே. நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் வாழ்வுரிமைகளுக்கும் எதிரானதாக இருக்கும் போது ஓடோடி வந்து அதை நிறைவேற்றும் இந்த அரசுகள் ஏழைகளுக்கு சாதகமாக ஒன்னுரெண்டு தீர்ப்புகள் வரும் போது காகிதத்திற்கான மதிப்பினை கூட அவற்றிற்கு கொடுப்பதில்லை என்பது  இந்த தீர்ப்பின் மூலம் தெரிகிறது.

-வினவுச் செய்திப் பிரிவு

நன்றி: thewire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க