“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற முழக்கத்தின் கீழ் தருமபுரியில் இரண்டு நாட்கள் இருசக்கர வாகன பிரச்சார பேரணியை நடத்தியது மக்கள் அதிகாரம். பென்னாகரத்தில் மே-15 அன்று தொடங்கிய இப்பேரணியை மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் (தே.தெ.ந.இ.வி) பாப்பாரபட்டி தலைவர் பழனிசாமி, பாப்பாரபட்டி செயலர் பெருமாள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

மக்கள் அதிகாரத்தின் இருசக்கர பேரணி பாப்பாரபட்டி வழியாக பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, கம்மைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி, கடத்தூர், நல்லம்பள்ளி, வழியாக சென்று இறுதியில் தருமபுரி நகரம் தந்தி அலுவலகம் அருகில் மே-16 அன்று நிறைவுற்றது.
எட்டு தாலூகா மற்றும் மூன்று தேர்வுநிலைப் பேரூராட்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் என சற்றேறக்குறைய முன்னூறு கிலோ மீட்டர் தூரம் இப்பேரணி நடைபெற்றது.
தோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக, பாலக்கோட்டில் தே.தெ.ந.இ.வி சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி, நவலை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலர் கோவிந்தராஜ், அரூரில் தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் தோழர் முகமது அலி, சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் தோழர் குமரன், நம்மாழ்வர் வழியை பின்பற்றும் விவசாய பெருங்குடி மக்கள் சார்பாக இருளப்பட்டி கிராமத்தினர், இருளப்பட்டி விவசாய சங்க தலைவர் இராமசாமி உள்ளிட்ட மாற்றுக்கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் என வழி நெடுகிழும் தங்கள் சொந்த முயற்சியில் மக்களை அணிதிரட்டியிருந்தனர்.
தாம் வசிக்கும் பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்ததோடு, அக்கூட்டங்களில் பங்கேற்றும் உரையாற்றினர். மோரும் தேனீரும் உணவும் கொடுத்து இரவு தங்குவதற்கு இடமும் கொடுத்து பேரணி சென்ற தோழர்களை உற்சாகப்படுத்தினர்.

இது காவிரி பிரச்சினை தஞ்சை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை என்று தருமபுரி மாவட்ட உழைக்கும் மக்கள் ஒதுக்கவுமில்லை; மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு நடத்துகிற பேரணி என்று மாற்றுக் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் ஒதுங்கி நிற்கவுமில்லை; தமிழினத்தின் பிரச்சினை தமது சொந்தப் பிரச்சினை என்ற உணர்வோடு ஆரத்தழுவிக் கொண்டனர் தருமபுரி மாவட்ட மக்கள்.
தருமபுரி மாவட்டத்தின் தெருக்கள்தோறும் செங்கொடி பறக்க, தோழர்கள் எழுப்பிய முழக்கங்களும், பேரணி சென்ற வழிநெடுகிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றன.
தகவல்:
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 8148573417