சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த கர்நாடக மாநிலத்தின் அரசியல் நிலவரம் மணிக்கொரு ‘திடுக்கிடும்’ திருப்பங்களைச் சந்தித்து வருகின்றது.
எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது காங்கிரசு கட்சி. அன்று 17-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் ‘ஜனநாயகத்தைக் காக்கும்’ முனைப்போடு பஞ்சாயத்தைக் கூட்டிய நீதிபதிகள், சுமார் மூன்றரை மணி நேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் ஜனநாயகத்தின் கழுத்தில் பா.ஜ.க மாட்டிய சுருக்கின் கண்ணியை இறுக்குமாறு உத்தரவிட்டது.
ஆளுநரின் முடிவெடுக்கும் உரிமையில் தலையிட முடியாதெனவும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் வழங்கியுள்ள கால அவகாசம் குறித்து 18-ம் தேதி முடிவெடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், 18-ம் தேதி இரு தரப்பினரும் தங்களது ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலையும், அவர்களின் ஒப்புதல் கடிதங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, 18-ம் தேதி இரு தரப்பினரும் தங்களது ஆதரவு உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பித்தனர். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதரவுக் கடிதங்களின் படியே பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை. ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் படியும், பொம்மை வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்பின் படியும், முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கையும், அதற்கடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பெரும்பான்மை எண்ணிக்கையும், அதற்கடுத்ததாகவே தனிப்பெரும் கட்சியையும் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்க வேண்டும்.
ஆனால், உச்சநீதிமன்றமோ பா.ஜ.க ஆளுநரின் அதே முடிவை கொஞ்சம் மாறுதலோடு தனது உத்தரவாக அறிவித்தது. அதாவது, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களுக்குப் பதில் 2 நாட்கள் (19-ம் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது. இருபத்து நான்கு மணி நேர அவகாசமே இருந்த நிலையில் பாரதிய ஜனதா தனது புரோக்கர்களை களமிறக்கியது.
கனிம மாஃபியா ஜனார்தன் ரெட்டியும், முரளிதர் ராவும் நேரடியாக காங்கிரசு மற்றும் ம.ஜ.த உறுப்பினர்களிடம் பேரம் பேசினர். இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த காங்கிரசு, தனது தரப்பில் இருந்து பெரு முதலாளியும் கர்நாடக காங்கிரசு தலைவரும், எம்.எல்.ஏ கடத்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வல்லவரான டி.கே. சிவகுமாரை களமிறக்கி விட்டது.
அனைத்து காங்கிரசு உறுப்பினர்களின் கைபேசிகளிலும் உரையாடலைப் பதிவு செய்யும் செயலியை நிறுவிய டி.கே.சிவகுமார், பா.ஜ.க நடத்திய பேரங்களை நேரலையாக ஒலிபரப்ப ஏற்பாடு செய்து விட்டார். கர்நாடகத் தேர்தலும், அதைத் தொடர்ந்து நடந்து வரும் கூத்துகளும் இந்திய ‘ஜனநாயகத்தின்’ மேல் ஒப்புக்காவது ஒட்டிக் கொண்டிருந்த கிழிந்த ஆடைகளை மொத்தமாக உருவி தனது நிர்வாண நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக குத்தாட்டத்தில் சுவாரசியமான சில துளிகளை மட்டும் பார்க்கலாம்.
- தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் பெரும்பான்மைக்குப் போதுமான உறுப்பினர் எண்ணிக்கையை பாரதிய ஜனதா பெற முடியாது என்பது தெளிவானது. டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் விவாதம். அதில் பாரதிய ஜனதாவின் பொதுச் செயலாளர் ராம் மாதவிடம், “பெரும்பான்மைக்கு குறைவான தொகுதிகளே வென்றுள்ளீர்களே, அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” எனக் கேட்கிறார் நெறியாளர் நாவிகா குமார்.
“ஹஹ்ஹஹ்ஹா… நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், எங்களிடம் அமித்ஷா இருக்கிறார்…” என ராம் மாதவ் பதில் சொல்கிறார். பதிலைக் கேட்டு நாவிகாவும் வெடித்துச் சிரிக்கிறார்.
#KarnatakaVerdict:
Navika: BJP slightly short of majority, now what…❓
Ram Madhav: (Laughs) …Don’t Worry, We have Amit Shah… (Laughs)
Navika: (Laughs)
This was when BJP was 109, finally ended even lower at 104. Everyone can Judge about BJP’s Ways… #BJPMurdersDemocracy pic.twitter.com/WzPcWRwEJB— Jairaj P (@jairajp) May 16, 2018
- தமிழ் செய்தித் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாரதிய ஜனதா சார்பில் கலந்து கொண்ட நபரை நோக்கி, ”உங்களிடம் தான் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லையே, வாக்கெடுப்பின் போது 8 உறுப்பினர்களின் ஆதரவை எப்படி பெறப் போகிறீர்கள்?” என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. தோள்களைக் குலுக்கிக் கொண்டே, “இதென்ன கேள்வி, காங்கிரஸ் அல்லது ஜனதா தளம் கட்சிகளிடம் இருந்து தான் பெறுவோம்” என்கிறார்.
- நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார் பா.ஜ.க.-வின் கே.டி.ராகவன். கோவாவில் பின்பற்றப்பட்ட அதே முறையை ஏன் கர்நாடகாவில் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ராகவன், கவர்னருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், கோவாவில் எடுத்த முடிவும் சட்டரீதியானது, அதற்கும் முன் உதாரணங்கள் இருக்கிறது என்றும், கர்நாடகாவில் எடுத்த முடிவும் சட்டரீதியானது, அதற்கும் முன் உதாரணங்கள் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். பூ விழுந்தால் தோல்வி உனக்கு, தலை விழுந்தால் வெற்றி எனக்கு என்கிற இந்த விளக்கத்தைக் கேட்டு மற்ற பங்கேற்பாளர்கள் விழித்தனர்.
பூ விழுந்தால் தோல்வி உனக்கு, தலை விழுந்தால் வெற்றி எனக்கு கேடி ராகவனின் லாஜிக். - பல்வேறு விவாதங்களில் காங்கிரசு கட்சியை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதே பா.ஜ.கவினர் முன்வைக்கும் வாதம். ஆனால், பாரதிய ஜனதாவை ஏன் தெரிவு செய்யவில்லை என்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதே போல் காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டு வைப்பதை சந்தர்பவாதம் என்பது வாதம். ஆனால், அதே மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் நீங்கள் கூட்டு வைப்பது சந்தர்பவாதமில்லையா எனக் கேட்டால் பதில் இல்லை.
- பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் கோரினார் எடியூரப்பா – ஆளுநருக்கு எடியூரப்பாவின் வியாபார நுணுக்கங்களில் நம்பிக்கை இல்லாததாலோ என்னவோ 15 நாட்கள் அவகாசம் வழங்கினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரசு கட்சி. ஆனால், அமித்ஷாவின் தொழில் திறமைகளை நன்கு அறிந்திருந்த நீதியரசர்கள் ஒரே நாள் அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளனர்.
- உச்சநீதிமன்றத்தில் அரசின் சார்பில் வாதாடினார் அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால். பா.ஜ.கவிடம் 104 உறுப்பினர் ஆதரவு மட்டும் தானே இருக்கிறது, மற்ற கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயுமே என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்படுகிறது. அதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், உறுப்பினர்கள் பதவி ஏற்றதற்குப் பின் கட்சி மாறினால் தான் அந்தச் சட்டம் பாயுமென்றும், உறுப்பினராக பதவி ஏற்பதற்கு முன்பே கட்சி தாவினால் மேற்படி சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஒரு விளக்கத்தை முன்வைத்தார்.
- எடியூரப்பா 19-ம் தேதி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்கிற உத்தரவை 18-ம் தேதி பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாதாடிய முகுல் ரோத்தகி, வாக்கெடுப்பில் நாங்கள் வெல்லப் போவது உறுதி ஆனால் அந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறார். ஏற்கனவே ஜனநாயகம் நிர்வாணமடைந்துள்ள நிலையில் அதற்கு மேலும் உரித்தெடுக்க தோலைத் தவிர வேறில்லை என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்து ஜனநாகத்தின் ‘மாண்பை’க் காப்பாற்றுகின்றனர் நீதியரசர்கள்.
- பாரதிய ஜனதாக் கட்சியினர் காங்கிரசு மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100 கோடி வரை விலை பேசுகின்றனர். ஜனார்தன் ரெட்டி நேரடியாக காங்கிரசு உறுப்பினர் ஒருவரிடம் அமைச்சர் பதவியும் 150 கோடியும் பேசிய ஆடியோ வெளியானது. இதற்கு பதிலடியாக “அவர்கள் எங்களிடம் இருந்து ஒருவரைத் தூக்கினால், பதிலுக்கு அவர்களிடமிருந்து இரண்டு பேரைத் தூக்குவேன்” என சவால் விட்டார் குமாரசாமி.
- எடியூரப்பா முதல்வராக பதவியேற்று விட்டார். பெங்களூருவில் கேளிக்கை விடுதி ஒன்றில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அப்படியே கொத்தோடு கேரளாவுக்கு விமானம் மூலம் ஓட்டிச் செல்வது திட்டம். இதற்காக இரண்டு தனியார் விமானங்களையும் வாடகைக்குப் பிடித்தாகி விட்டது. இறுதி நேரத்தில் அந்த விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை வழங்க மறுக்கிறது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம். அவர்கள் விடாக்கண்டர்கள் என்றால், இவர்களும் கொடாக்கண்டர்கள் ஆயிற்றே – கடைசியில் உறுப்பினர்கள் அத்தனை பேரையும் 18-ம் தேதி வால்வோ சொகுசுப் பேருந்தில் அள்ளி அடைத்து ஆந்திராவுக்கு தூக்கிச் சென்றன எதிர்க்கட்சிகள்.
- நம்பிக்கை வாக்கெடுப்பை 19-ம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்ற வேகத்திலேயே வால்வோ பேருந்துகள் திரும்பின. புலனாய்வுப் புலிகளான ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள், சம்பந்தப்பட்ட வால்வோ பேருந்துகள் “ஷர்மா” எனும் நிறுவனத்திற்கு சொந்தமானதென்றும், அவற்றின் முதலாளி காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவரென்றும் ‘கண்டுபிடித்து’ வருவாய்த்துறைக்கு குறிப்பால் உணர்த்திக் கொண்டிருந்தன. இதே சமயத்தில் கர்நாடக உள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகளில் பா.ஜ.க நடத்திய பேரங்கள் குறித்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
- இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க-வைச் சேர்ந்த போப்பையா நியமிக்கப்படுகிறார். பொதுவாக சபையின் மூத்த உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்கிற விதியை மீறுகிறது பா.ஜ.க. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற காங்கிரசின் மனுவை நிராகரித்து மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தின் புட்டத்தில் எட்டி உதைக்கிறது உச்சநீதிமன்றம்.
- நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 19-ம் தேதியன்று காலையே பாரதிய ஜனதாவுக்கு முடிவு தெரிந்து விட்டது. எப்படியும் எடியூரப்பா வெல்ல மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்ய அனுமதியளிக்கிறது. அதாவது, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பாவை உணர்ச்சிகரமாக பேச வைத்து (அதை மக்கள் பார்த்த பின்) இராஜினாமா செய்ய வைப்பது திட்டம். இதன் மூலம் லிங்காயத்து சாதி மக்களின் அனுதாபத்தையாவது பெற்று விடலாம் என்பது கணக்கு.
எடியூரப்பா பதவி விலகி விட்டார். பா.ஜ.கவின் அனைத்து இராஜதந்திரங்களும் தோற்றுப் போய் விட்டதாக பத்திரிகையாளர்கள் சிலர் சொல்கின்றனர். ஆனால், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு சில நாட்கள் இருப்பதால் அதற்குள் மீண்டும் ஏதாவது சித்து வேலைகள் செய்ய பா.ஜ.க முயலக்கூடும் என்று வேறு சிலர் சொல்கின்றனர். எடியூரப்பா பதவி விலகியதால் கிடைத்த அனுதாபம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கைகொடுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர் – பேரம் பேசிய ஆடியோக்கள் வெளியானதால் அனுதாபம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என சிலர் மறுக்கின்றனர்.
ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில் நழுவிப் போனதால், பா.ஜ.க.-வின் பதவி வெறி முன்னெப்போதைக் காட்டிலும் தீவிரமாக இருக்கும். ஆகவே காங்கிரசு – குமாரசாமி ஆட்சியைக் கலைப்பதற்கும், கட்சிகளை உடைப்பதற்கும், எம்.எல்.ஏக்களை வாங்குவதற்கும் பா.ஜ.க தீவிரமாக சதி செய்யும்.
முடிவு என்னவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் ’மாண்பு’ ஆறடிக் குழிக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
கருத்துக் கணிப்பு :
- பா.ஜ.க. 20 மணி நேர முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமாவை அடுத்து என்ன நடக்கும் ?
- பதவிவெறி பிடித்த பா.ஜ.க. மீண்டும் முறைகேடான வழியில் முயலும்.
- காங்கிரசு, மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்து உறுதியாக நீடிக்கும்.
- என்ன நடக்குமென்று தெரியவில்லை.
பா.ஜ.க. 20 மணி நேர முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமாவை அடுத்து என்ன நடக்கும் ?
— வினவு (@vinavu) May 21, 2018
யூடியூப்பில் வாக்களிக்க : https://www.youtube.com/channel/UCECxTVipw2fCQ10ROo6vbsA/community?lb=Ugw5tgMaDde7rFZo6cJ4AaABCQ
– சாக்கியன்.