Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு - இலண்டன் போராட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மூடு ! பெங்களூரு – இலண்டன் போராட்டம் !

தூத்துக்குடியில் போலீசு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இலண்டன் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டையும் பெங்களூருவில் வேதாந்தா அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

-

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பெங்களூருவில் இன்று – 24.05.2018 – போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையும் அதைத் தொடர்ந்து அங்கு நடந்து வரும் போலீசு வெறியாட்டத்தையும் கண்டித்து மாலை 3.00 மணியளவில் பெங்களூரு ‘மாயோ கோர்ட் ஹால்’ அருகில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் மெரிடியன்’ கட்டிடத்தில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் இருக்கும் தமிழ் மக்களும், கன்னட மக்களும்சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்வர்கள், மோடி அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுப்பதற்காக எவ்வாறு சட்டங்களை மாற்றியமைத்தது என்பதையும் காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வேதாந்தா நிறுவனம் படியளப்பதை அம்பலப்படுத்தி பேசினர்.

இதனை அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைவரும் சூழ்ந்திருந்து கவனித்தனர்.  உங்கள் கட்டிடத்தின் 8வது மாடியில் இருப்பவர்கள்தான் (வேதாந்தா நிறுவனம்) குற்றவாளிகள் என போராட்டக்காரர்கள் அவர்களை நோக்கிக் கூறினர்.

மாலை 4:20 மணியளவில் வேதாந்தா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கீழே வந்து மன்னிப்புக் கேட்கும் வரை அங்கேயே அமர்ந்திருப்பது என திட்டமிட்டிருப்பதாக அங்கு களத்தில் இருக்கும் எழுத்தாளர் ரகு கர்னாட் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர, இலண்டனில் வாழும் தமிழர்கள், ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள், “ஸ்டெர்லைட்டை தடை செய் ! தூத்துக்குடியைக் காப்பாற்று !
இந்திய அரசே, தமிழர்களைக் கொல்வதை நிறுத்து !
காவல்துறை காவல்துறை, இந்தியாவின் கூலிப்படை !
இந்தியா இந்தியா தமிழர்களைக் கொல்வதை நிறுத்து !” என ஆங்கிலத்திலும் தமிழிலும் முழக்கமிட்டனர்

மேலும் அனில் அகர்வாலின் மகன் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பத்திரிகையாளர் சபீர் அகமது தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.