தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதியாக போராடிய மக்கள் மீது, “ஸ்னைப்பர்” எனும் குறிபார்த்துச் சுடும் போலீசு அடியாட்களை வைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மூலம் விசாரணை செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பாவேந்தன் மற்றும் பார்வேந்தன் ஆகியோர் 23.05.2018 அன்று பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் போதே,
- 1. காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்வர்களை மறு உடற்கூராய்வு (Re-Postmortem) செய்யவும்,
- 2. காவல் துறையினரால் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும்,
- 3. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் சட்ட உதவி வழங்கவும் மற்றும் விசாரணை செய்ய அனுமதி மறுக்கும் காவல்துறை நடவடிக்கைகளை தடை செய்யக்கோரியும்,
- 4. திரு.வெங்கடேஷ் மற்றும் திரு.மகேந்திரன் ஆகியோர் முறையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணி செய்ய தடைவிதிக்கக் கோரியும் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கை, 23.05.2018 அன்று அவசர வழக்காக விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதாடினார். அரசுக்கும், தனிநபர்களாக குறிப்பிடப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு வழங்கி, இவ்வழக்கினை 30.05.2018-க்கு ஒத்தி வைத்துள்ளது.
அதுவரையில்,
- 1.இறந்தவர்களின் உடல்களை பாதுகாத்து வைக்கவும்,
- 2.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு சட்ட உதவி செய்யவும் மற்றும் ஆய்வு செய்யவும் வழக்கறிஞர்களை எந்த வகையிலும் தடுக்க கூடாதென்றும் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
தகவல்:
ச. பார்த்தசாரதி (மனுதாரர்கள் வழக்கறிஞர்)
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
சென்னை.
(கடைசி தகவல்: எனினும் இந்த உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்களை அழிக்க இந்த ஜனநாயக உரிமைகள மறுப்பது அரசுக்கு அவசரத் தேவையாக இருக்கிறது.)
வழக்கின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு அளித்த பேட்டி