சவ நாயகம்

கொலை செய்வதையே
கலையாகக் கற்றவர்கள்
சொல்கிறார்கள்,

”வெளியிலிருந்து வந்தவர்கள்
தூண்டி விட்டார்கள்”

வெளியிலிருந்து வந்து
தூண்டியவன் வேதாந்தா
உள்ளிருந்து
குறிபார்த்து சுட்டது போலீசு

வெளிப்படையான
இந்த உண்மைக்கு
முகம் கொடுக்க முடியாமல்,
கொலை நடுக்கம்
கொஞ்சமும் இல்லாமல்,
”சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்”
என பிணங்களின் மீதேறி
பேசுவதுதான் அரசு!

உண்மையில்
சமூக விரோதிகள்
ஊடுருவவில்லை
அரசாங்க கொலைக் கருவியுடன்
உயிர் உருவி நிற்கிறார்கள்.

சமூக விரோதிகளால்
சமூக விரோதிகளுக்காக
நடத்தப்படும் அரசாட்சியில்
நிலைமை கட்டுக்குள்.
இந்த நிலைமை மீறினால்
சுட்டுக் கொல்!
இது ஜனநாயகமல்ல
சவ நாயகம்!

சிங்கள இனவெறிக்கு
சிதைந்தது ஈழத்தமிழினம்
வேதாந்தாவின் லாபவெறிக்கு
அழிவதோ தமிழினம்!
உங்களை ஆளவிட்டது
எங்களை கொலை செய்யவா?

உப்பளத்து பறவைக்கு கூட
கொப்புளம் வராமல்
உறவாடும் மண்ணில்
எத்தனை படுகொலைகள்
எங்கள் வாசலில்..

பேசித் தீர்த்துக்கொள்வதுதான்
ஜனநாயகம் என்றிருந்தோம்,
பேசினாலே தீர்த்து விடுவதுதான்
ஜனநாயகம் என்பதை
எம் பெண்ணின்
வாயைச் சிதைத்த குண்டு
வரும் தலைமுறைக்கு சொல்கிறது!

மூச்சடக்கி முத்தெடுத்த
முத்துநகர் பரம்பரை
மூச்சிழந்து மூளியாகி
தெருப்பிணமாய்
இ‍ழுபடவோ எம் தலைமுறை

பயிர்க் கலையும்
பண்டை துறைமுகத்தை
உயிர் கலையுமாக்கிய
உழைக்கும் மக்களை
உயிர்க்கொலை புரிந்தவன்
மனித இனத்துக்கே கறை.
மன்னிக்காது வரும் தலைமுறை!

கொடிது! கொடிது
குடிமக்களை
கொலை செய்வது
அதனினும் கொடிது
போராடும்
உயிர்ப் பண்புடையோரை
ஒரு தேசம் இழப்பது.

போராட்ட குணமுள்ள
மக்களை மாய்ப்பது
தேசத்துரோகம்.

எதிர்ப்பவர்களை எல்லாம்
எரிப்பது என்றால்
இது தமிழ்நாடா?
இல்லை,
வேதாந்தா சுடுகாடா?

எண்ணி மாளா தோட்டாக்கள்…
எடுத்து மாளா துப்பாக்கிகள்…
கணக்கில்லாத கைத்தடிகள்..
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேண்டிய
இராணுவக் கம்பெனிகள்…
எல்லாம் இருக்கலாம்
உங்களிடம்,
ஆனால்,
உங்களிடம் நீதி இல்லை!

அதனால்தான்,
நினைத்த வேகத்தில்
உங்களை புதைக்க விடாமல்,
போராடும் பிணங்களைப் பார்த்தும்
உங்களுக்கு பயம்.
இருப்பவர்களை பார்த்தாலோ
இன்னும் பயம்.
மனிதர்களே இல்லாத
மயான அமைதிக்கு
விகாரமாய் விரிகிறது
உங்கள் மனம்!

எம் தலைமுறைக்கோ
புரிகிறது,
போராடினால்
கொல்லப்படுவோம்,
போராடாவிட்டால்
சாகடிக்கப்படுவோம்.

சாவதை விட
போராடுவதே மேல்!

போராடுவதே
வாழ்க்கை என்பதால்
நாங்கள்
வாழத் துணிந்துவிட்டோம்!
இணையத்தை முடக்கலாம்
மக்களின் இதயத்தை
முடக்க முடியாது!

மனித உணர்வெங்கும்
துடிக்கிறது தூத்துக்குடி!

– துரை. சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க