Monday, April 21, 2025
முகப்புதலைப்புச் செய்திஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை மூடு ! இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி அரசு பயங்கரவாதப் படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடந்த சனிக்கிழமை (26-05-2018) அன்று போராட்டம் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

-

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இலண்டனில் கடந்த 26 மே 2018 சனிக்கிழமையன்று மாலை 3-5 மணிவரை போராட்டம் நடைபெற்றது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் வேதாந்தாதாவிற்கு எதிரான நடவடிக்கைகள்  எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் நட்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர். இதனைக் கண்டித்து இலண்டன் ,அல்டுவிச்சில்( Aldwych, London) இந்திய தூதரகத்தின்( Indian High Commission) முன்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டமானது ஃபாயில் வேதாந்தா(Foil Vedanta) , இங்கிலாந்திலுள்ள தமிழ் மக்கள், பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம், தெற்காசிய ஒருமைப்பாட்டு குழுமம், பறை:விடுதலைக்கான குரல், மற்றும் வீரத் தமிழர் முன்னணி ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த ‘பாயில் வேதாந்தா’ அமைப்பைச் சார்ந்த சமரேந்திர தாஸ் கூறுவதாவது: “கடந்த 15 வருடங்களாக இந்தியா மற்றும் சாம்பியாவில் வேதாந்தா செய்துகொண்டிருக்கும் குற்றவியல் செயல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம். சூழலியல் போராட்டத்தில் நடைபெற்ற இந்த கார்ப்பரேட் கொலையானது கடைசியாக இருக்க வேண்டும் . பிரித்தானிய அரசு இதை விசாரித்து, வேதாந்தா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற இலண்டனில் உள்ள தமிழரான கார்த்திக் கமலக்கண்ணன் கூறுவதாவது, “ஒரு பிரித்தானிய கம்பெனியின் இலாபத்திற்காக மக்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியாவதும், சுத்தமான காற்றுக்கும், நீருக்கும் அவர்கள் அழுவதும் அருவறுக்கத்தக்கது. இந்த குற்ற பின்னணியுள்ள நிறுவனத்தை காக்க ஸ்னைப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம். சூழலியல் போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் தலைவர்கள் குறிவைக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை, ஏனெனில் வேதந்தாவை எதிப்பவர்களை  அவர்கள் இவ்வாறுதான் எதிர்கொள்கிறார்கள். தூத்துக்குடியில் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது இது ஜனநாயகத்திற்கு எதிரானது. தமிழ் மக்களுக்கு இது ஒரு சோகமான காலம்” என்றார்.

வேதாந்தாவை இங்கிலாந்து பங்குச் சந்தையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டோர் இங்கிலாந்து அரசுக்கு முன்வைத்தனர்.

தகவல்:
சமரேந்திரதாஸ்
(+44) 07941 475103

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க