Monday, April 21, 2025
முகப்புசெய்திஇந்தியாஎழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி

எழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி

கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.

-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து இதுவரை வாயே திறக்காத ஒரே முக்கியமான பிரமுகர் இந்தியாவில் மோடி மட்டும்தான். வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 13 பேர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் பிரதமர் மோடி அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

ஏனெனில் வேதாந்தா முதலாளியான அனில் அகர்வால் கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க-விற்கு அளித்திருக்கும் அதிகாரப் பூர்வமான நன்கொடையே ரூ 15 கோடியைத் தாண்டுகிறது. கருப்பில் கொடுக்கப்பட்டது நமக்குத் தெரியாது. இது போல மோடி இலண்டனுக்கு பயணம் செய்தால் அங்கே அனைத்து செலவுகளையும் அனில் அகர்வாலே பார்த்துக் கொள்வார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மோடியின் பா.ஜ.க. இப்போதே அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. 26.05.2018 அன்று வெளிவந்த முன்னணி தமிழ், ஆங்கில பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் ‘ Saaf Niyat, Sahi Vihas –  நாட்டின் எழுச்சி நம்பிக்கை அளிக்கிறது’ என்ற முழுப்பக்க விளம்பரத்தை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வெளியிட்டது மோடியின் அரசு.

மேலும் இந்த விளம்பரத்தின் ஒரு அங்கமாக 28.05.2018 அன்று ’உஜ்வாலா’ திட்டம் என்ற ஏழைகளுக்கான இலவச எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளை இந்திய அளவில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் சந்தித்து உரையாடினார் மோடி. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரம்மா என்பவரும் ஒருவர்.

தமிழ்நாடு என்று மோடிக்கு முன்னால் உள்ள திரையில் வந்ததும் மோடி வணக்கம் என்று ருத்ரம்மாவின் பெயரைச் சொல்லி அழைக்கிறார். எழுப்புதல் கூட்டங்களில் தன்னுடைய ஆளை வைத்து தான் அழைக்க இருக்கும் நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து அழைக்கும் போதகர் போல மோடி இங்கே காட்சியளிக்கிறார்.

இலவச கேஸ் கிடைத்ததால் என்ன பயனென்று மோடி கேட்க அந்தப் பெண், விறகிலிருந்து சமைச்சிட்டிருந்தோம், இப்ப கேஸ் கெடச்சதுனால ரொம்ப யூஸ்புல்லா இருக்கு என்கிறார். இப்படி இன்ன கேள்வி கேட்கப்படும், அதற்கு இன்ன மாதிரி பதில் கொடுக்க வேண்டும் என்று ருத்ரம்மாவை பாடாய்ப் படுத்தியிருப்பார்கள் அதிகாரிகள்.

அடுத்த கேள்வியாக இதுக்கு முன்னாடி தோசா, இட்லியெல்லாம் சாப்பிட்டீங்களா என மோடி கேட்க ’ இல்ல சார்..புகையினால இருமல் வந்து முன்னல்லாம் செய்யவே முடியாது சார்… ஆனா இப்பல்லாம்  ஈசியா செய்ய முடியுது’ என பதிலளிக்கிறார்.

உடனே மோடி, அடுத்த முறை  நான் தமிழ்நாடு வரும்போது எனக்கு இட்லி தோசை சுட்டு தருவீங்களா எனக் கேட்க ருத்ரம்மாவும் சரி எனக்கூற மோடி மறுபடியும் ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறார். ஏற்கனவே மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன்களை நிறைய கொடுத்தார்கள் தமிழ்மக்கள். அதற்கு பயந்தே அவரும் வானிலேயே பறந்து இறங்கி நிகழ்வுகளில் கலந்து கொண்டு எஸ்கேப் ஆனார்.

தூத்துக்குடியில் நடந்த மனிதாபிமானமற்ற பச்சைப் படுகொலைகளுக்கெதிராக தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழ் பேசாத மற்ற மாநில மக்கள் என மனிதாபிமானம் கொண்ட பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வரும் நிலையில், பெயரளவிற்குக் கூட வருத்தமோ கண்டனமோ தெரிவிக்காத மோடி இட்லி, தோசை வேண்டுமென்று எந்தத் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொன்றொழிக்க முற்படுகிறாரோ அந்த தமிழர்களிடமே வாய்கூசாமல் கேட்கிறார் .

வேண்டி விரும்பிக் கொலை செய்தவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது தான். ஆனால் கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.

  • வினவு செய்திப்பிரிவு

மேலும் படிக்க