Monday, April 21, 2025
முகப்புகளச்செய்திகள்தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?

தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?

தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.

-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலை வட்டம், ஆரியபட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் அவர்களின் மறைவு அப்பகுதி முழுக்கவே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இழப்பின் துயரத்தில் இருக்கும் அப்பகுதி மக்களிடம் பேசினோம்.

பாண்டி

சமூக அநீதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடக்கூடியவர். அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று அதன் வழி நடக்கக்கூடியவர். மக்களிடம் துண்டு பிரசுரம் கொடுப்பது, புத்தகம் கொடுப்பது என்று கொள்கை வழி நடக்கக்கூடியவர்.

ஜெயராமன் அதிகம் பேசக்கூடிய நபர் இல்லை. தேவையை ஒட்டி மட்டும் பேசக்கூடியவர். ஜெயராமன் சொல்லும் கருத்து எல்லாம் சரியாக இருக்கும். மறுக்க முடியாததாக இருப்பதால் நாங்கள் அனைவரும் போராட்டங்களுக்கு போவோம்.

நேற்று நடந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலை என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவருடைய நோக்கம் நிறைவேறும் வரை, கம்பெனியை மூடும் வரை பாடியை வாங்கக் கூடாது. நிச்சயம் போராட்டம் வலுப்பெறவேண்டும். தமிழ்நாடே போர்க்களமாக மாற வேண்டும்.

அரசு எப்படி இயங்குதுனே தெரியல. எதை மக்கள் விரும்புகிறார்களோ அது நடைமுறையில் இல்லை. எதை மக்கள் எதிர்க்கிறார்களோ அதை மீண்டும் மீண்டும் திணிக்கிறது. ஏறக்குறைய தமிழ்நாடு ஒரு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது. நான்கு திசைகளிலும் தமிழ்நாடு ஒரு சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நைட் ஒரு மணியானாலும், ரெண்டு மணியானாலும் சரி கூப்பிட்டதும் வண்டியை எடுத்துனு வருவார். ஆர்ப்பாட்டம்னா திருச்சி, மதுரை எங்க இருந்தாலும் சாப்பாடு எல்லாம் கட்டிக்கொண்டு குடும்பத்தோடு வந்து விடுவார். அப்படி ஒரு பண்பு உள்ளவர். தோழரை இழந்தது பெரும் பேரிடியாக உள்ளது.

கெயில், நியுட்ரினோ, கூடங்குளம் என்று தமிழ்நாட்டையே சுற்றி வளைத்து விட்டார்கள். கேட்டால் வேலை வாய்ப்பு என்கிறார்கள். எண்பது சதவீத மக்கள் விவசாயம் செய்கிறார்கள். அந்த விவசாயத்தை அழித்துவிட்டு யாருக்கு வேலை கொடுக்கப்போகிறார்கள்?

ஒட்டு மொத்த கவர்ன்மென்ட்டை நினைத்தாலே வெறுப்பு வருகிறது. கர்நாடக தண்ணீர் பிரச்சனை, நியூட்ரினோ, கெயில் என்று எல்லா பிரச்சனைகளையும் ஒட்டு மொத்தமாக கையில் எடுக்க வேண்டும். இன்னிக்கு ஒரு முப்பது பேர், நாளைக்கு நியுட்ரினோவுக்கு எதிராக போராடி முப்பது பேர் சாக வேண்டி வரும், கூடங்குளத்தில் சாக வேண்டி வரும்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவன் சுட்டது சரி என்று பேசுகிறான். சுட்டுவிட்டு இழப்பீடு தருகிறார்களாம். உன் இழப்பீடு யாருக்கு வேண்டும். நாட்டில் உள்ள எல்லா பன்னாட்டு கம்பெனிகளையும் விரட்டியே தீர வேண்டும்.

பால்சாமி

மக்களுக்காக போராடக்கூடியவர். மக்களுக்கு எது நல்லதோ அதற்காக போராடுபவர். எங்களையும் போராட்டத்திற்கு கூப்பிடுவார். எங்கு அக்கிரமம், அநியாயம் நடக்கிறதோ அங்கே முன்னே நிற்கக் கூடியவர். அவரோடு என் மகன்களையும் போராட்டங்களுக்கு அனுப்பி வைப்பேன். நல்ல கொள்கையுடைய மனுஷன்.

செவந்தம்மாள், குணசுந்தரி, சுப்பம்மாள்

கூலி வேலை செஞ்சு குடும்பத்தை நடத்தினவரு. டி.வி.-ல பாத்து தான் தெரிஞ்சிகிட்டோம். என்ன இருந்தாலும் மக்களை சுட்டது தப்பு. கூட்டம் கூடிருச்சின்னா அடிச்சி விரட்டிருக்கலாம். இல்ல ஸ்டேசன்ல புடுச்சி போட்டிருக்கலாம். ஆனா, சுட்டிருக்க கூடாது. இந்த மாதிரி சம்பவத்தை எங்க வாழ்க்கையில மொத முறையா பார்க்கிறோம்.

சின்ன சின்ன கலவரம் வந்திருக்கு இந்த மாதிரி சுட்டதில்லை. இனி மக்களுக்கான போராட்டம்னா எல்லா எடத்துலயும் போராடனும். அந்த ஆலையை உடனே மூடனும். இல்லன்னா மீண்டும் மீண்டும் போராட்டம் நடக்கும்.

ஒச்சாத்தேவர்

பிரிட்டிஷ் ஆட்சியில கூட இந்த மாதிரி நடந்தது இல்ல. இது ரொம்ப மோசமான செயல். அரசு, அரசினுடைய அதிகாரிகள்தான் இதற்கு காரணமா இருக்க முடியும். துப்பாக்கி எடுத்து சுடுறவங்க ஆத்திரப்பட்டு கையிலயும், கால்லயும் சுடலாம்.

ஒரு வேன்ல ஏறி சுடுற மாதிரி படம் இருக்கு. அது திட்டமிட்டு சுட்டது. வண்டியில ஏறி நிண்டு சுடுறது, உடம்பு, நெஞ்சு, மண்டை எல்லாம் தானே பாதிக்கும். மக்கள் வெறுங்கையில போராடுறவங்க. கல்லு எடுத்து எறியத்தான் தெரியும் அடுத்த கட்டம் என்னன்னு தெரியாது. அப்படி இருக்கும்போது உயிர் சேதம் ஏற்படுகிற ஒரு வேலையை செய்யக்கூடாது இல்லையா? அதுக்கு அரசுதான் காரணம். இது கண்டிக்கத்தக்கது. அரசு தவறான பாதையில போயிட்டு இருக்கு. இதை மன்னிக்கவே முடியாது. இப்படியே போனா மக்கள் வாழ முடியாது.

தென்னரசு, வி.சி.க. மாநில துணைச்செயலர்.

அரசு பயங்கரவாதத்தை கையில் எடுக்கும்போது பொதுமக்கள் என்ன செய்வார்கள்?  இந்த அரசு எந்த சட்டத்தையும் மதிக்கவில்லை. உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை மதிக்கவில்லை. இது இரண்டும் எந்த மனித உரிமை சட்டத்தையும் மதிப்பதில்லை.

இப்படி இருக்கும்போது இந்த அரசிடம் அகிம்சை ரீதியில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பொதுமக்கள் இந்த அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட வேண்டிய நிர்பந்தத்தை அரசு உருவாக்கி உள்ளது. தோழர் ஜெயராமன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ இல்லை. தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பெயரை வைத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அதில் ஜெயராமனும் ஒருவர்.

தோழர் வீரன்

மக்களுடைய போராட்டம் எல்லாத்துலயும் கலந்துக்குவார். கலந்துகொள்ள முடியாத போராட்டத்துக்கு தோழர்களை சந்திச்சி வருத்தம் தெரிவிப்பார். நைட் ஒரு மணியானாலும், ரெண்டு மணியானாலும் சரி கூப்பிட்டதும் வண்டியை எடுத்துனு வருவார்.

மக்கள் தன்னிச்சையாக எங்கு போராட்டம் நடத்தினாலும் நாங்கள் கலந்து கொள்வோம். அந்த உணர்வில் தான் இந்த போராட்டத்திலும் கலந்து கொண்டோம்.

ஆர்ப்பாட்டம்னா திருச்சி, மதுரை எங்க இருந்தாலும் சாப்பாடு எல்லாம் கட்டிக்கொண்டு குடும்பத்தோடு வந்து விடுவார். அப்படி ஒரு பண்பு உள்ளவர். தோழரை இழந்தது பெரும் பேரிடியாக உள்ளது. கார்ப்பரேட் கம்பெனிக்கு அடிபணிஞ்சி மத்திய மாநில அரசுகள் ஒரு போரை நடத்தி உள்ளது.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க