Wednesday, April 16, 2025
முகப்புபார்வைட்ரெண்டிங் வீடியோபாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா

பாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும், காவிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் உள்ள கள்ளக்கூட்டு குறித்தும் அம்பலப்படுத்துகிறார் ஊடகவியலாளர் வினோத் துவா.

-

ஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ

உரையின் தமிழ் வடிவம்

நமஸ்கார்,

இன்னும் ஒரு தடவை, அவரது வழக்கப்படி, அவரது பாரம்பரியப்படி பாரத நாட்டின் பிரதான சேவகர் (மோடியை இந்தியில் பிரதான் மந்திரி என்று சொல்லாமல் பிரதான சேவகர் என்றே வினோத் துவா குறிப்பிடுகிறார்) எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்.

11 பாரத குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பாரத போலீசின் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஒரு பாரத பிராந்தியத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த பிராந்தியத்தின் பெயர் தமிழ்நாடு. ஆனால், மோடி இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இந்த நகரத்தை தமிழில் தூத்துக்குடி என்று அழைக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கம்பெனி அங்கு ஒரு தொழிற்சாலை அமைத்திருக்கிறது, அதன் முதலாளி அகர்வால் என்பவர், அனில் அகர்வால். அந்த கம்பெனியின் பெயர் வேதாந்தா.

அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு இது தொடர்பாக அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றியும், நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றியும் தொடர்புடைய பல பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல நாட்களாக போராடி வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் பெருமளவு தாது கலந்த மண்ணிலிருந்து தாமிரம் எடுத்து பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

வேதாந்தா அங்கு உருக்கு ஆலை அமைத்த பிறகு தண்ணீர் மாசுபடுதல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது, மக்களின் உடல்நிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டன, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது, (உச்சநீதிமன்றத்தில்) தடை விலகிய பிறகு இவர்கள் என்ன செய்தார்கள்? இந்தத் தொழிற்சாலையை இன்னும் பெரிதாக்குவதற்கு திட்டமிட்டார்கள். இதை மக்கள் இன்னும் அதிகமாக எதிர்த்தார்கள். 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தியது, துப்பாக்கிச் சூட்டில் 11 (தற்போது 13) பேர் கொல்லப்பட்டனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூடு என்பது கொல்வதற்காக நடத்தப்படுவதில்லை. இதற்கான முழுமையான ஒரு நெறிமுறை (ப்ரோட்டக்கால்) இருக்கிறது. போலீஸ் எப்படி இதில் செயல்பட வேண்டும் என்று, நான் உங்களுக்கு இந்த நெறிமுறை பற்றி சொல்கிறேன்.

இது போலீசுக்கான விதிமுறை.
  • முதலில் கூடியிருக்கும் மக்களை சட்டத்துக்குப் புறம்பான கூடுகை என்று அறிவிக்க வேண்டும். இங்கு 100-வது நாள்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டது, 99 நாட்கள் வரை எந்தத் தடையும் போடப்படவில்லை.
  • இரண்டாவதாக, கூடியிருக்கும் மக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும். (பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீஸ் கலைந்து போகும்படி சொன்னது. அப்போது அனைவரும் கலைந்து போய் விட்டார்கள். அப்போதுதான் ராம்தேவ் பெண்களுக்கான சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு தப்பி ஓடினார். உங்களுக்கு நினைவிருக்கும்). அது போல போலீஸ் “நீங்கள் தாமாகவே கலைந்து போய் விடுங்கள், திரும்பிப் போய் விடுங்கள்” என்று சொல்ல வேண்டும். அப்படி செய்தார்களா இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை.

அப்படி சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்றால், அதன் பிறகு கூட்டத்தை கலைந்து போக வைக்க மாவட்ட ஆட்சியருக்குத்தான் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவிடும் அதிகாரம் உள்ளது.

  • முதல் கடுமையான நடவடிக்கை கண்ணீர் புகை பயன்படுத்துவது
  • இரண்டாவது நடவடிக்கை மெலிதான பேட்டன் தாக்குதல் அல்லது பிரம்பு தாக்குதல் நடத்த வேண்டும். தடியடி இல்லை. பிரம்பு தாக்குதல்தான், அதுவும் மெலிதான தாக்குதல் நடத்த வேண்டும்.
  • மூன்றாவது கடுமையான நடவடிக்கை தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் கூட்டம் கேட்கவில்லை என்றால், இந்த மூன்றும் பலனின்றி போய் விட்டால், அப்போதுதான் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.
  • அதுவும் முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். “நாங்கள் சுடப் போகிறோம்” – “வீ வில் ஓப்பன் ஃபயர்” என்று ஒலிபெருக்கி மூலம் சொல்ல வேண்டும். “இதனால் உயிரிழப்பு நேரிடக் கூடும்” என்று எச்சரிப்பதும் போலீசின் கடமை.
  • அதன் பிறகு ஒரு கலவர கொடி ஏற்ற வேண்டும், அதாவது துப்பாக்கிச் சூடு நடக்கப் போகிறது கலைந்து போய் விடுங்கள் என்று காட்டுவதற்கு ஒரு கொடியை ஏற்ற வேண்டும். இங்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை.
  • விதிமுறைகளின்படி இவ்வளவுக்கும் பிறகு போலீஸ் துப்பாக்கி சூடு ஆரம்பித்தால், முதலில் விண்ணை நோக்கி காற்றில் சுட வேண்டும்.
  • அதன் பிறகும் கூட்டம் கலைந்து போகவில்லை என்றால் இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும், காயப்படுத்தும் வகையில் சுட வேண்டும். கொல்லும் வகையில் சுடுவதற்கு போலீஸ் எப்போதும் சுடக் கூடாது.

இங்கு இன்சாஸ் ரைஃபிள் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இதை ஸ்னைப்பர் துப்பாக்கி என்று நான் சொல்ல மாட்டேன். ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு வகையில் இருக்கும்.

இன்சாஸ் ரைஃபிள் ராணுவம், பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் பயன்படுத்தும் துப்பாக்கி. வழக்கமாக போலீஸ் கையில் பழைய 303 துப்பாக்கி இருக்கும். ஆனால், இங்கு இந்த இன்சாஸ் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் தென்படுபவர்கள் குறி வைத்து சுடுகின்றனர். இது அனைத்தும் தெளிவாக உள்ளது.

வேதாந்தா மிகப்பெரிய கம்பெனி. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யாரும் கீழ்நிலை அதிகாரியால் முடியாத ஒன்று. ஏனென்றால், இந்த நிறுவனம் பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருக்கிறது.

இது போன்ற கம்பெனிகளுக்காகத்தான் பட்ஜெட்டில் FCRA சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 1976 முதல் இப்போது வரை எந்தெந்த வெளிநாட்டு கம்பெனிகள் நமது நாட்டு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தனவோ, 1976 முதல் அதாவது, எமர்ஜென்சி அமலில் இருந்த போது, திருமதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது பா.ஜ.க அரசு. அப்போது ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்தெந்த வெளிநாட்டு கம்பெனி எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தார்களோ காங்கிரசுக்கு, பா.ஜ.க-வுக்கு அதற்கு எந்த பரிசீலனையும் செய்யப்பட மாட்டாது.

இது நமது நிதி மந்திரி திரு அருண் ஜெட்லி பாரத வர்ஷத்துக்கு வழங்கிய கொடை. இதை நிதி மசோதாவில் ஒரு அடிக்குறிப்பின் வடிவில் சேர்த்து விட்டிருந்தார். இதன் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஏன்? ஏனென்றால் இரண்டு தரப்புக்கும் இதில் ஆதாயம் இருக்கிறது. காங்கிரசுக்கும் சரி, பா.ஜ.கவுக்கும் சரி, பிற கட்சிகளுக்கும் சரி.

11 பாரத குடிமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு கல் எறிந்தவர்கள் மீது மட்டுமோ, அல்லது அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது மட்டும் ஏன் நடக்கிறது? இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த தருணத்தில் வேதாந்தாவின் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது, இந்த கம்பெனி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

FCRA-ல் அடிக்குறிப்பின் வடிவில், 1976 முதல் இப்போது வரை வெளிநாட்டு கம்பெனிகள் கொடுத்த நன்கொடை தொடர்பாக எந்த பரிசீலனையும் கிடையாது என்பது நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மக்களுக்கானது, கார்ப்பரேட்டுகளுக்கானது இல்லை என்று நிரூபிக்கப்படும்.

டிரிக்கிள் டவுன் உண்மையில் வேலை செய்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்த வரை இந்த கம்பெனி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், ஒடிசாவிலும் நடத்தப்பட வேண்டும், ஜாம்பியாவிலும் இந்த கம்பெனி மீது விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கம்பெனி வேதாந்தா, இந்திய வங்கிகளுக்கு சுமார் 22,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கிறது.

நன்றி : new-democrats

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க