பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு பேரைக் கைது செய்திருக்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசு. அவர்களை விசாரிக்க பன்னிரண்டு நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
கடந்த 2017-ம் ஆண்டு செப்டெம்பர் 5 அன்று பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மறுநிமிடமே அதனை சமூக வலைத்தளங்களிலும் வீதிகளிலும் கொண்டாடி, தாம்தான் கொலையாளிகள் என்பதை சொல்லாமல் சொல்லினர் இந்துத்துவ வெறியர்கள்.

இந்துத்துவா கிரிமினல் நவீன்குமார்
அதனைத் தொடர்ந்து, கர்நாடக போலீசின் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இந்துமத வெறியன் நவீன்குமாரை கடந்த 2018 பிப்ரவரி 18 அன்று கைது செய்தது போலீசு. முதல்கட்ட விசாரணையில் நவீன்குமார், ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதியின் உதிரி அமைப்பான ஹிந்து யுவ சேனாவை சேர்ந்தவர் என்றும், சனாதன் சனஸ்தா அமைப்பின் நேரடியான தொடர்பில் இருப்பவர் என்றும் தெரியவந்தது.
தற்போது மேலும் நான்கு பேர் இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டியத்தைச் சேர்ந்த அமோல் காலே, கோவாவைச் சேர்ந்த அமித் டெக்வேகார், கர்நாடகாவைச் சேர்ந்த மனோகர் எடவே மற்றும் சுஜீத்குமார் ஆகியோரைக் கைது செய்துள்ளது சிறப்புப் புலனாய்வுக் குழு.
தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் எழுத்தாளர் கே.எஸ். பகவானை, மைசூருவில் அவரது வீட்டில் வைத்து கொல்ல திட்டமிட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் நால்வரையும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி 12 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது சிறப்புப் புலனாய்வுக் குழு. எழுத்தாளர் கே.எஸ். பகவான் கொலை முயற்சி வழக்கின் விசாரணையிலிருந்துதான் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்த நால்வரின் பங்கு குறித்தும் கண்டறியப்பட்டது. இக்கொலை தொடர்பாக இவர்களை கர்நாடகா, மராட்டியம் மற்றும் கோவாவின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.
இவர்களைக் கைது செய்த இடத்தில் இருந்து சுமார் 43 சிம்கார்டுகளைக் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே இவர்கள் சட்டவிரோத, இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு போதுமான சான்று என்கிறார் ஒரு விசாரணை அதிகாரி.

கவுரி லங்கேஷ் கொலையில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது கொலை வழக்கிலும், தற்போது கவுரி லங்கேஷ் கொலை வழக்கிலும், கே.எஸ். பகவான் கொலை முயற்சி வழக்கிலும் சனாதன் சன்ஸ்தா, ஹிந்து ஜன்ஜக்ருதி சமீதி, ஹிந்து யுவ சேனா ஆகிய அமைப்புகள் ஈடுபட்டிருப்பது தற்போது பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.
ஆனாலும் இந்த அமைப்புகள் மீது எவ்வித நடவடிக்கையோ தடையோ விதிக்கப்படவில்லை. இவர்கள் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சிகளில் வந்து காட்சியளிக்கிறார்கள். சர்வ சாதாரணமாக செயல்படுகிறார்கள். இந்துத்துவக் கும்பலை எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக நம் முன்னே உலவுகிறார்கள்.
இதுதான் ‘சட்டத்தின்’ ஆட்சி நடக்கும் ‘ஜனநாயக’ நாட்டின் இலட்சணம்.
மேலும் படிக்க:
Gauri Lankesh murder case: SIT names three more as key accused, gets custody for 12 days
– வினவு செய்திப்பிரிவு