Monday, April 21, 2025
முகப்புசெய்திஇந்தியாபுவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.

-

ருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 70 ஆண்டுகளில் அதிவேகமாக அதிகரித்து வருவதை உறுதி செய்திருக்கிறது.

1951-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இரு வெவ்வேறு வெப்பநிலை தரவுகளிலிருந்து, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையேயான வெப்பநிலை அதிகரிப்பைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும், 395 வானிலை ஆய்வு மையங்களில் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன. கோடை, பருவ மற்றும் குளிர் காலகட்டங்களின் அன்றாட சராசரி வெப்பநிலை தரவுகளைக் கொண்டு அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

வடமேற்கு இந்தியாவில் 1970-களில் தொடங்கிய வெப்பமயமாதல், 2000-களிலும், 2010-களிலும் அதிவேகத்தில் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் – மே மாதங்களில் நிலவும் தினசரி அதிகபட்ச வெப்பநிலையின் பத்தாண்டு சராசரியானது, 2010-களில் 40°செல்சியஸ் முதல் 42°செல்சியஸ் அளவிற்கு இருந்துள்ளது. 1950-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியிலுள்ள ஒரு சிறு பகுதியில் மட்டுமே இத்தகைய அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்துள்ளது. அதுவும் அதிகபட்சமாக 41°செல்சியஸ் அளவுக்கு மட்டுமே வெப்பநிலை இருந்தது. 1970-களில் தான் பெருமளவு நிலப்பரப்புகள் 40°செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையைத் தொட்டன.

1990களில் ஒரு குறுகிய காலகட்டத்திற்கு வெப்பநிலை தணிவடைந்தது. பின்னர், 2000-களிலும் 2010-களிலும் பெருமளவிலான நிலப்பரப்புகள், 40ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை அடைந்தன. அதேபோல 41ºசெல்சியசுக்கு அதிகமான வெப்பநிலையை தொட்ட பகுதிகளும் அதிகமாகின. 2010-களில் மத்திய இந்தியாவின் தென்பகுதியில் பெருமளவு பரப்புகள் 42ºசெல்சியஸ் வெப்பநிலை நிலையைத் தொட்டன.

மறுபுறம், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் மெதுவாகவே வெப்பமடைந்து வந்தன. இன்னும் சொல்லப்போனால் அவை குளிர்வடைந்தே இருந்தன.

இதுகுறித்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ராபர்ட் ராஸ் கூறுகையில், “உலகளாவிய பருவநிலை மாற்றத்தினால் நிகழும் உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவிலும் வெப்பமயமாதல் நிகழ்கிறது” என்கிறார். புவனேஸ்வர் ஐ.ஐ.டி.-யைச் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் இந்திய வானியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை ராபர்ட் ராஸ் மேற்கொண்டிருக்கிறார்.

மேலும், மத்திய இந்தியாவில் ஏற்படும் பரப்பு குளிர்தலுக்கும், குறைவான வெப்பமயமாதலுக்குமான காரணங்கள் குறித்து அவர் விவரிக்கையில், அது மத்திய கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும், மத்திய இந்தியாவையும் பாதிக்கும், தூசுப் படல மாசின் காரணமாகவே ஏற்படுகிறது என்றும், இந்த தூசுப்படலத்தை பருவகாலமல்லாத பிற மாதங்களில் கவனிக்க முடியும் என்றும் கூறினார்.

மாசுபட்ட காற்றுப் படலம் உருவாகும் இடங்களில்தான், இந்தியாவில் இருப்பது போன்ற வெப்பநிலை அமைவுகள் (Temperature Pattern) ஏற்படுகின்றன. அதிகரிக்கும் வளிமண்டல கரியமிலவாயு, உலக வெப்பமயமாதலை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட காற்றுப் படலம் பகுதிவாரியாக அதை மாற்றியமைக்கிறது.

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியிலும், தெற்காசியாவிலும் காணப்படும் மாசுபட்ட காற்றுப்படலமானது தூசுப் படலத்தால் உருவானது. அது சூரிய கதிர்வீச்சை உள்வாங்கிக் கொண்டு குளிர்ச்சியான சூழலை உருவாக்குகிறது. ஒருவேளை மாசுபட்ட காற்றுப்படலம் தமது புவியியல் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளுமானால் இந்த குளிர்ச்சியான சூழலும் இடம்பெயரும் என்கிறார் ராபர்ட் ராஸ்.

ஆனால், வேறு சில வல்லுனர்கள் இந்தியாவின் வெப்பநிலை அமைவுகள் (Temperature Pattern) குறித்து ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில் பரப்பு குளிர்வடைதலுக்கு இந்த மாசுபட்ட காற்றுப் படலத்தைக் காரணமாக்குவதை ஏற்றுக் கொள்வதில்லை. ”சிந்து – கங்கை சமவெளியைப் பொருத்தவரையில், மாசுபட்ட காற்றுப் படலத்தை விட தீவிரமான நீர்ப்பாசன முறைதான் நிலப்பரப்பு குளிர்தலுக்கு முக்கியக் காரணம் என நாங்கள் நிருபித்துள்ளோம்” என்கிறார் காந்திநகர் ஐஐடியின் நீர் மற்றும் பருவநிலை ஆய்வகத்தைச் சேர்ந்த விமல் மிஷ்ரா.

மேலும், அவர் இதற்கு முன்பு ஈடுபட்டிருந்த ஆய்வில், பல பயிர் சாகுபடி முறை கொண்ட வட இந்தியாவில், நிலப்பரப்பு குளிர்தலுக்கான முக்கியக் காரணம்,  நிலத்தடி நீரைக் கொண்டு செய்யப்படும் தீவிரமான நீர்ப்பாசன முறைதான் எனக் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

பரப்பு குளிர்தல் குறித்த அர்த்தமுள்ள அனுமானங்களுக்கு வந்தடைவதற்கு முன்னர் அது குறித்த மேலதிகமான ஆய்வு தேவை.  அதே வேளையில் வெப்பமயமாதலும்  தொடர்கிறது.

  • தினேஷ் சர்மா, தி வயர் இணைய தளத்திற்காக எழுதிய அறிவியல் கட்டுரையின் தமிழாக்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க