நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற 17 வயதான பிளஸ் டூ மாணவன், மே 1 அன்று நள்ளிரவில் சங்கரன்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.

தினேஷ் நல்லசிவன்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த தனது தந்தை மாடசாமியை மீட்டெடுக்க, அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போனதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் தினேஷ்.

ரயில்வே மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த தினேஷின் சடலத்தை மீட்டபோது, அவனது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில், “தனது சாவாவது தன் தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும்” என எழுதியிருந்ததோடு, “குடிப்பழக்கத்தை நிறுத்த இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? எனப் பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்” என்ற தனது ஆதங்கத்தையும் மனவேதனையையும் கொட்டியிருந்தான், அச்சிறுவன்.

ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன் – தினேஷ் எழுதிய கடிதம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்து தினேஷின் தற்கொலை அனுதாபத்தோடு பார்த்துவிட்டுக் கடந்துபோய்விடக் கூடிய விசயமல்ல. தினேஷின் தற்கொலை, குடிநோய் என்ற படுகுழிக்குள் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதே, அச்சீரழிவிற்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் கலகம்.

மருத்துவராகும் கனவைக் கொண்டிருந்த அனிதாவின் தற்கொலையையும் அதே கனவைக் கொண்டிருந்த தினேஷின் தற்கொலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அனிதாவும், தினேஷும் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொண்டிருந்தாலும், அவையிரண்டுமே தமிழகத்தைக் கவ்வியிருக்கும் இரண்டு அபாயங்களை எதிர்த்து நடத்தப்பட்டவை என்பதை மறுக்கமுடியுமா? எனினும், அனிதாவின் மரணத்திற்குத் தீவிரமாக எதிர்வினையாற்றிய தமிழகம், தினேஷின் மரணத்தையடுத்து டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தவில்லை. அச்சமயத்தில் கனன்று கொண்டிருந்த காவிரி பிரச்சினை தினேஷின் மரணத்தை இரண்டாம்பட்சமாக்கிவிட்டது. இந்த துரதிருஷ்டம் எடப்பாடிக்கு அடித்த அதிருஷ்டம்.

தினேஷ் தற்கொலை செய்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே, அதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெகதீஷ் துரை, நம்பியாற்றுப் பகுதியில் நடந்துவரும் மணல்கொள்ளையைத் தடுக்க முயன்றபொழுது, மணல் மாஃபியாக்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு ஆற்றுப் படுகையிலேயே படுகொலை செய்யப்பட்டார்.

தினேஷின் தற்கொலை அரசின் சாராயக் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரையின் கொலை அரசின் மணல் கொள்கையின் விளைவு. ஜெகதீஷ் துரை அரசு ஊழியர் என்பதால், அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கி முதலைக் கண்ணீர் வடித்திருக்கும் எடப்பாடி அரசு, மாணவன் தினேஷின் மரணத்திற்கு அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. அதேசமயம், தமிழகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகளில் – குடிநோய், மணல் கொள்ளை – காயத்தில் உப்புத்தாளைப் போட்டுத் தேய்க்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.

*      *      *

2015, 2016 ஆம் ஆண்டுகளில் தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் வீச்சாக எழுந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க முயன்று தோற்றுப் போன ஜெயா, தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவேன் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் துணையோடு பல தில்லுமுல்லுகளைச் செய்து, 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடித்த அவர், 500 டாஸ்மாக் கடைகளை மூடும் நாடகத்தை அரங்கேற்றினார். மூடப்பட்ட அந்தக் கடைகள் அனைத்தும் கல்லா கட்டுவதில் தேறாத கடைகள் என்பது அவர் கையெழுத்துப் போட்ட மறுநிமிடமே அம்பலமானது.

ஜெயாவும் செத்து, சசிகலாவும் ஜெயிலுக்குப் போன பிறகு, முதலில் தினகரன் தயவிலும், பின்னர் பா.ஜ.க.வின் தயவிலும் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தன் பங்குக்கு மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடவிருப்பதாக அறிவித்தார். இப்படியாக 1,000 கடைகளை மூடிவிட்டதாக அ.தி.மு.க. அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், டாஸ்மாக் கொள்முதலும் குறையவில்லை, அதன் மூலம் அரசிற்குக் கிடைக்கும் வருமானமும் குறையவில்லை என்ற புதிரைப்  பத்திரிகைகள் அம்பலப்படுத்தின.

இந்தப் புதிருக்கான விடை எளிதானது. மற்ற டாஸ்மாக் கடைகளின் விற்பனை இலக்கைக் கூட்டியதன் மூலம் டாஸ்மாக் வருமானம் சரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டது அ.தி.மு.க. அரசு.

இந்தச் சமயத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்துள்ள மதுபானக் கடைகளையும், பார்களையும் ஏப்ரல் 1, 2017 முதல் மூடிவிட வேண்டும் என உத்தரவு போட்டது, உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக ஏறத்தாழ 2,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது அ.தி.மு.க. அரசு. ஆனாலும், நெடுஞ்சாலையைப் பார்த்து இருந்த கடைகளின் முன்புற வாசல் கதவுகளை மூடிவிட்டு, புறவாசல் வழியாக விற்பனையை நடத்தி, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பெப்பே காட்டியது தமிழக அரசு.

இதனிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், ஐந்து நட்சத்திர விடுதி அதிபர்களும் உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றக் கோரி மேல்முறையீடு செய்தனர். குறிப்பாக, யூனியன் பிரதேசமான சண்டிகர் நகர நிர்வாகம், தனது நகர எல்லைக்குள் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையும் உள்ளாட்சி சாலைகளாகப் பெயர் மாற்றி, அச்சாலைகளையொட்டி இயங்கிவந்த மதுபானக் கடைகளையும், விடுதிகளையும் மூடாமல் தொடர்ந்து நடத்தத் தொடங்கியது.

அஞ்சு சுத்து சுத்திட்டு வா… 501 வது மீட்டருல வந்துரும் பாரு…

நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும், கடைகள் குறித்த விளம்பரப் பலகைகள்கூட நெடுஞ்சாலைகளில் இருக்கக் கூடாதென்றும் நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டிருந்ததை, மாநில ஆட்சியாளர்கள் காமெடி பீஸாக மாற்றினார்கள். நெடுஞ்சாலைகளையொட்டியிருந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தாமலேயே, கடைகளுக்குச் செல்லும் பாதையைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மாற்றியமைத்துக் கல்லா கட்டினார்கள்.

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தனது உத்தரவின் மீது சாணியை அடித்துவிட்டதைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், “நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர பார்களை மூடியதால் சுற்றுலாத் துறை படுத்துவிட்டது” என்ற பொருளாதாரக் காரணியைப் பிடித்துக்கொண்டு, சண்டிகர் நகர நிர்வாகம் செய்த மாற்றத்திற்கு அனுமதி அளித்தது.

சண்டிகர் நகர நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் சலுகை அளித்த மறுநிமிடமே, நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றி, அச்சாலைகளில் இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முயன்றது எடப்பாடி அரசு. இந்த இழிமுயற்சிக்கு எதிராக பா.ம.க. தொடுத்த வழக்கில், நெடுஞ்சாலைகளைப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தடை விதித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தத் தடை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே,  சண்டிகருக்கு மட்டும் அளிக்கப்பட்ட தளர்வைத் தேசியமயமாக்கி, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே சவக்குழியைத் தோண்டியது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவைப் பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதி எல்லைகளின் வழியே செல்லும் நெடுஞ்சாலைகளில் 1,700 கடைகளைத் திறப்பதற்கான ஆணையை வெளியிட்டது. நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை எடப்பாடி அரசு கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிக்கவில்லை.

இப்புதிய கடைகளைத் திறப்பதற்கு எதிராக பா.ம.க. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தமிழக அரசால் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்பட்ட  அந்த வழக்கில், ஒருபுறம் அந்த 1,700 கடைகளைத் திறப்பதற்குத் தடைபோட்டுவிட்டு, இன்னொருபுறத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றினால், கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ற சலுகையைத் தமிழக அரசிற்கு வழங்கியது, உயர் நீதிமன்றம்.

ஆனால், எடப்பாடி அரசோ நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றுவது என்ற சாதாரண நிர்வாக நடவடிக்கையை எடுக்கக்கூடத் தயாராக இல்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியாக, அதனை ரத்துச் செய்யக் கோரும் மேல்முறையீட்டு வழக்கை திங்கள்கிழமையே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தது. நீட், காவிரி விவகாரங்களில் காணப்படாத வேகமும் அக்கறையும் டாஸ்மாக் விவகாரத்தில் பொங்கி வழிந்தது.

அம்மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தடையுத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி மதுபானக் கடைகளைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்திருக்கும் உத்தரவுப்படி அறிவிக்கை வெளியிட்டுவிட்டு, கடைகளைத் திறந்து கொள்ளலாம்” என்றவாறு நயவஞ்சகமான தீர்ப்பை அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்.

இத்தீர்ப்பினையடுத்து, நெடுஞ்சாலை பகுதிகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும், ஏற்கெனவே இயங்கிவந்த டாஸ்மாக் கடைகளின் உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் ஏதுவாக புதிய அரசாணையொன்றை கடந்த மே 21 அன்று – கவனிக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் நாள் – வெளியிட்டு, அதனை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது, தமிழக அரசு.

“எங்களது கருத்தைக் கேட்காமல் இந்த அரசாணையை அங்கீகரிக்கக் கூடாது” என்று பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவை உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால், இந்த வாதத்தின் பின்னுள்ள நியாயத்தைக் காண மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா அமர்வு, “தமிழக அரசின் அரசாணை, நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைத் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தளர்த்தப்பட்ட தீர்ப்பின்படி அமைந்திருப்பதாக”க் கூறி, தமிழக அரசின் குடிகெடுக்கும் அரசாணைக்கு உடனடியாக அங்கீகாரம் அளித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹா.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம், “குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதே தடுப்பதுதானேயொழிய, உரிமம் பெற்று இயங்கும் மதுபானக் கடைகளின் வியாபாரத்தை ஊத்தி மூடுவது அல்ல” என விளக்கமளித்து, சாராய வியாபாரிகளுக்கான நீதியை நிலைநாட்டினர். இனி நீதிமன்றங்களை நம்பி, டாஸ்மாக் கடைகளை மூடும் சட்டபூர்வ போராட்டங்களை நடத்த முடியாது என்பதுதான் நீதிபதிகள் அளித்திருக்கும் விளக்கத்தின் பொருள்.

ஏப்ரல் 2017-க்கு முன்பாகத் தமிழகத்தில் ஏறத்தாழ 6,200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. “நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் நீர்த்துப் போன தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால்கூட, தமிழகத்தில் 2,502 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்க முடியும். ஆனால், தற்பொழுது தமிழகத்தில் 4,000 கடைகள் நடந்துவருவதாக”க் கூறுகிறது, பா.ம.க. “தமிழகத்தில் தற்பொழுது 3,000 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கிவருவதாக”க் கூறுகிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை செல்வராஜ். எண்ணிக்கை நாலாயிரமோ, மூவாயிரமோ, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள சலுகையினைப் பயன்படுத்திக் கொண்டு எடப்பாடி அரசு புதிதாகத் திறக்க முயன்றுவரும் 1,700 கடைகளையும் சேர்த்துக் கொண்டால், “படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவது” என்ற அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஒரு மாபெரும் மோசடி என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

*      *      *

ட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது கட்சியிலுள்ள அனைத்து கோஷ்டிகளுக்கும் அரசு காண்டிராக்டு உள்ளிட்ட அனைத்து சன்மானங்களையும் கொள்ளையிடுவதற்குச் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிதான். அந்த வகையில் எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க.வில் ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கெல்லாம் மணல் காணப்படுகிறதோ, அதனைக் கொள்ளையடிக்கும் உரிமை வட்டார வாரியாகப் பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெயா உயிரோடு இருந்தபோது, சேகர் ரெட்டி தலைமையில் ஏகபோகமாக நடந்துவந்த ஆற்று மணல் கொள்ளை, எடப்பாடியின் ஆட்சியில் உள்ளூர் அல்லது வட்டார அ.தி.மு.க. பிரமுகர் தொடங்கி மணல் லாரி உரிமையாளர்கள் ஈறாகப் பலரும் பங்குபோட்டுக் கொள்ளும் வண்ணம் பங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகப் பொதுப்பணித்துறை நடத்தி வரும் மணல் குவாரிகளில் ஆற்று மணல் விற்பனை ஆன்-லைன் மூலம் நடத்தப்படுவதால், முறைகேடுகள் ஒழிந்துவிட்டதாக வாய்ப்பந்தல் போடுகிறது, எடப்பாடி அரசு. மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.1,100, மூன்று யூனிட் மணல் ரூ.1,575/- க்கு விற்கப்படும்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு யூனிட் மணல் ரூ.35,000-க்கும், மூன்று யூனிட் மணல் ரூ.50,000-க்கும் விற்கப்படுகிறது. விலையில் காணப்படும் இந்த மாபெரும் வேறுபாடே மணல் விற்பனையில் ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதை நிரூபிக்கிறது.

“மணல் குவாரிகளில் முன்னைப் போல மணல் தாராளமாக விற்கப்படுவதில்லை. அதேசமயம், கிராக்கியோ அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்த வேறுபாடு” எனச் சமாளிக்க முயலுகிறார்கள், அ.தி.மு.க. அடிவருடிகள். ஆனால், இலஞ்சமும், செயற்கையான விலை நிர்ணயமும்தான் இந்த அசகாய விலைக்குக் காரணம்.

“மணல் குவாரிகளில் இரண்டு யூனிட் மணலுக்கு டி.டி. எடுத்துக் கொடுத்தால், மூன்று யூனிட் மணலை வாரிக் கொட்டுவார்கள். கூடுதலாகக் கொட்டப்பட்ட ஒரு யூனிட் மணல் கணக்கில் வராது. அதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரூ.5,000/- இலஞ்சம் கொடுத்துவிட வேண்டும். அடுத்து, மணல் குவாரியிலிருந்து வெளிவரும் லாரி, மணல் குவாரி அமைந்துள்ள கிராமத்திற்கு ரூ.5,000/- தர வேண்டும். சென்னை நகரத்திற்குள் மணலை எடுத்துக்கொண்டு வரும் லாரிகள் ஒவ்வொன்றும் போலீசு துறைக்குக் கொடுக்க வேண்டிய மாமூல் ரூ.1,500/-. சுங்கச்சாவடிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, அதற்குத் தனியாக மாமூல்” என 1,100 ரூபாய் மணல் 35,000 ரூபாய் வரை விற்கப்படும் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்கள், மணல் லாரி உரிமையாளர்கள்.

இந்தக் கொள்ளையில் மற்ற யாரும் பங்குக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், ஒரு தனியார் நிறுவனத்தால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைத் தமிழகத்தில் விற்பதற்குத் தடை போட்டிருக்கிறது, எடப்பாடி அரசு. இந்தத் தடையை நீக்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை, தனது உத்தரவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் இயங்கிவரும் மணல் குவாரிகள் அனைத்தையும் மூடிவிட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது எடப்பாடி அரசு.

அவ்வழக்கில் மணல் குவாரிகளை மூடிவிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது, உச்ச நீதிமன்றம். இந்த இடைக்காலத் தடையைப் பயன்படுத்திக் கொண்டு காவிரிப் படுகை உள்ளிட்டு, தமிழகமெங்கும் புதிதாக 21 மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை எடுத்திருக்கிறது, தமிழக அரசு. காவிரி, கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமிக்க முயலாத எடப்பாடி அரசு, மணல் கொள்ளைக்காக காவிரியில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவிருக்கிறது.

திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் இயங்கி வந்ததாகவும், தற்பொழுது திருச்சி மாவட்டப் பகுதியில் மூன்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றும் என நான்கு குவாரிகள் மட்டுமே இயங்குவதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து இந்த நான்கு குவாரிகளைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்படுவதில்லை என நாம் புரிந்துகொண்டுவிடக் கூடாது.

ஜெயாவின் ஆட்சியில் சட்டபூர்வமாகத் திறக்கப்பட்ட மணல் குவாரிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளை நடந்தது. எடப்பாடி ஆட்சியிலோ சட்ட விரோதமாக மணல் அள்ளுவதுதான் சட்டபூர்வமாகிவிட்டது என்பதை நம்பியாற்றுப் படுகையில் காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்பட்ட சம்பவம் நிரூபிக்கிறது.

சட்டபூர்வமாக குவாரிகள் திறக்கப்படாத ஆற்றுப் படுகைகளில் சொந்தப் பயன்பாட்டுக்கு என்ற பெயரில் மாட்டு வண்டிகளைக் கொண்டு மணல் கடத்தப்படுவதாக ஆங்கில இந்து நாளிதழ் குறிப்பிடுகிறது. (13.05.2018)

சவுடு மணலை அள்ளுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு, பல்வேறு மாவட்டங்களில் ஏறத்தாழ 10,000 லோடு வரை ஆற்று மணல் திருடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார், மணல் லாரி உரிமையாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம். (இந்து, 13.05.2018)

2003-ஆம் ஆண்டிலேயே நம்பியாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், அவ்வாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் ஒவ்வொரு டிராக்டருக்கும் ரூ.4,000 வரை அப்பகுதியிலுள்ள போலீசு நிலையங்களுக்கு இலஞ்சம் தரப்படுவதாகக் கூறுகிறார், சி.பி.எம். கட்சியின் நெல்லை மாவட்டச் செயலர் பாஸ்கரன்.

நம்பியாற்றில் நடக்கும் இந்தச் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற செல்லப்பா என்பவர், காவலர் ஜெகதீஷ் துரை கொல்லப்படுவதற்கு பத்து நாட்கள் முன்னதாகத்தான் லாரி ஏற்றுக் கொல்லப்பட்டார். ஆனால், இக்கொலையை விபத்து என வழக்குப் பதிவுசெய்து, மணல் மாஃபியாக்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டிருக்கிறது, நெல்லை மாவட்ட போலீசு.

மேலும், ஜெகதீஷ்துரையின் படுகொலைக்கு, அவர் பணியாற்றிவரும் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளே உடந்தையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் மட்டுமல்ல, ஜெகதீஷ் துரையின் மனைவியே குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

ஆற்று மணல் மட்டுமின்றி, சவுடு மண் தொடங்கி ஏரி, குளம், கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் சேர்ந்துள்ள வண்டல் மண்ணையும்கூட விட்டுவைக்காமல், ஒரு மாபெரும் கொள்ளை நடந்துவருவதைத் தமிழகப் பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன.

தோப்பு வெங்கடாசலம்.

“மேட்டூர் அணையைத் தூர்வருவது என்ற பெயரில் வண்டல் மண் கொள்ளை நடந்திருப்பதாக”க் கூறும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்த வண்டல் மண்ணில் பெரும்பகுதி திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இயங்கிவரும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக விற்கப்பட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். (தமிழ் இந்து, 13.03.2018)

தோப்பு வெங்கடாசலத்தின் பினாமிகளான கே.ஆர்.சேனாதிபதி, டி.சி.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் பெருந்துறைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிபந்தனை பட்டா முறையில் வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து கிராவல் மண்ணைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து விற்றது குறித்து நடைபெற்ற விசாரணையில், 2.35 இலட்சம் கனமீட்டர் மண் கொள்ளையடித்திருப்பது நிரூபிக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் எட்டுக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையை வெளிக்கொண்டுவந்த அப்பகுதியைச் சேர்ந்த சி.கே.நந்தகுமார், “உண்மையில் 100 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 46.5 இலட்சம் கன மீட்டர் மண் திருடப்பட்டிருப்பதாக”க் கூறுகிறார். (ஜூனியர் விகடன், 18.03.2018)

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில், மக்களின் எதிர்ப்பை மீறி, போலீசு பாதுகாப்புடன் திறக்கப்படும் மணல்குவாரி.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை வெட்டியெடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, அம்மாவட்டங்களில் குடிமராமத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது, எடப்பாடி அரசு. இந்தத் திட்டம் மாபெரும் மணல் கொள்ளைக்கான திறவுகோல் என்கிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.

மூன்று அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு மாறாக, 30 அடி ஆழத்துக்கு மண்ணை வெட்டியெடுத்து, அதனை விவசாயிகளுக்குத் தராமல், வெளிச்சந்தையில் விற்றுக் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையடித்திருக்கின்றனர், என்கிறார், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் ஆறுபாதி கல்யாணம்.

நாகை மாவட்டத்தில் மட்டும் இந்தக் குடிமராமத்துத் திட்டத்தின் வழியாகத் தோரயமாக 2,251 கோடி ரூபாய் பெறுமான வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என அம்பலப்படுத்துகிறது, ஜுனியர் விகடன் வார இதழ். (09.05.2018)

அரசின் திட்டங்களில் ஊழல் என்பதை மாற்றி, ஊழலுக்காவே திட்டம் என்றும் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி என்றும் கொண்டுவந்தார் புரட்ச்ச்சித் தலைவி ஜெயா. இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் அம்மா வழியிலேயே ஆட்சி நடத்துவதாக உரிமை பாராட்டி வருகிறார்கள். அது உண்மைதான் என்பதை டாஸ்மாக்கிலும், மணல் விற்பனையிலும் நடந்துவரும் கொள்ளைகளும்; குட்கா தடை, சொட்டு நீர்ப்பாசன மானியம், குரூப் 1 அதிகாரிகள் நியமனம் ஆகியவற்றில் நடந்துள்ள ஊழல்களும் நிரூபிக்கின்றன.

*      *      *

பாகிஸ்தானில் ஊழல் குற்றஞ்சுமத்தப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தேர்தல்களில் போட்டியிடுவதை நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜாகோப் ஜுமா ஊழல் குற்றச்சாட்டிற்காகப் பதவி விலக நேர்ந்தது. தென் கொரியா அதிபராக இருந்த பார்க் கியூன் ஹே, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுச் சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டார்.

ஆனால், இந்தியாவிலோ, சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட பார்ப்பன பாசிச ஜெயாவின் படம் சட்டமன்றத்தில் திறக்கப்படுகிறது. அவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படுகிறது. அவர் பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதனைப் பிரதமர் முன்னின்று தொடங்கி வைக்கிறார்.

படத் திறப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவ்விசயத்தில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் ஒதுங்கிக் கொள்கிறது. அதோடு, எடப்பாடி அரசிற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற உண்மை ஊருக்கே தெரிந்த பின்னும், அச்சட்டவிரோத சிறுபான்மை ஆட்சி தொடருவதை உத்தரவாதப்படுத்தி, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும் மூத்திரத்தை விடுகிறது, உயர் நீதிமன்றம்.

இன்னொருபுறத்திலோ, தானும் தின்னமாட்டேன், மற்றவர்களைத் தின்னவும் விடமாட்டேன் என ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு வரும் பிரதமர் மோடியும், குருமூர்த்தி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பனக் கும்பலும் இந்தக் கொள்ளைக்கார ஆட்சி தொடருவதற்குப் பூனைப் படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்க இந்திய ஜனநாயகம்! பாரத் மாதா கீ ஜெய்!

  •  திப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க