
திருமண நிகழ்ச்சிக்காக சென்ற சிறுவர் சிறுமியரை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி மராட்டிய போலீசு, போலி மோதல் படுகொலை செய்தது ஏற்கனவே வினவில் வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் கிராமத்திற்கு சென்று ’தி வயர்’ ஊடகம் நடத்திய கள ஆய்வின் தமிழாக்கம் இங்கே.
“எங்களது குழந்தைகள் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் எங்களது கிராமத்திற்கு போலீசு வரும் போதும் அல்லது எங்களை போலீசு நிலையத்திற்கு வரச் சொல்லும் போதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதாவது எங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என போலீசு சொல்ல வேண்டும்” என கட்டெபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கடந்த ஜூன் 18 அன்று தி வயர் இணையதளத்திற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமது கிராமத்திற்கு அருகே 40 ‘மாவோயிஸ்டுகளை’ சுட்டுக் கொன்றதாகக் கூறிய அதே காலகட்டத்தில் தனது பிள்ளையை இழந்த பெற்றோர் இவர்.

மராட்டியத்தின் எடப்பள்ளி (Etapalli) வட்டத்தின் கட்டெபள்ளி (Gattepalli) கிராமத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கசன்சூர் கிராமத்திற்கு சென்றிருந்தனர். அடுத்த நாள் (ஏப்ரல் 22) காலை கசன்சூர் கிராமத்துக்கு வெளியே இந்திராதேவி ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்தாகக் கூறப்படும் 50 ‘நக்சல்கள்’ கட்ச்ரோலி (Gadchiroli) கமாண்டோ படையினரால் சுடப்பட்டதில் 34 பேர் அங்கேயே பலியானார்கள். மேலும் அறுவர் இராஜாராம்-கான்ட்லா (Rajaram-Khandla) காட்டுப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஊடகங்களில் வெளியான செய்திகளும், மோதல் படுகொலை செய்த இடத்திலிருந்து போலீசு வெளியிட்ட புகைப்படங்களும் ஆற்றங்கரையினில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு பேர் காணாமற் போன சிறுவர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்தன. அவ்விரண்டு பேரில் ஒருவரது உடலை மட்டுமே போலீசு ஒப்படைத்துள்ளது. மற்றொரு சிறாரின் உடல் குறித்து போலீசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று கிராமத்துவாசிகள் கூறுகின்றனர்.
காணாமல் போன குழந்தைகள் பற்றிய புதிர் ஒருபுறம் தொடர, அவர்கள் மாவோயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு பெற்றோர்கள் மிரட்டப்படுவதாகவும் கிராமத்துவாசிகள் தெரிவிக்கின்றனர். “எங்களைப் பயன்படுத்தி எங்கள் குழந்தைகளின் படுகொலைகளை போலீசு நியாயப்படுத்த முயல்கிறது” என்று பெற்றோர்களில் ஒருவர் ‘தி வயர்’ இணையதளத்திடம் தெரிவித்திருக்கிறார்.
கிராமத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிமில்லி(Perimili) துணை போலீசு நிலையத்திற்கு ஜூன் 18-ம் தேதி அன்று 5 பேர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன தங்களது குழந்தைகள் பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று அறிய அந்த ஐவருடன் மேலும் பத்துப் பேர்கள் துணைக்கு சென்றனர். போலீசு நிலையத்தை அடைந்தவுடன் அந்த ஐந்து பேர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு மீதி நபர்களை வெளியேறுமாறு போலீசார் மிரட்டினார்கள். “எங்களுக்கு என்ன நடந்தேன்றே தெரியவில்லை. ஒரு அறையில் அடைக்கப்பட்டதும் சத்தம் போடக்கூடாது என்று நாங்கள் மிரட்டப்பட்டோம்” என்று அவர்களில் ஒருவர் பின்னர் கூறினார். போலீசார் அவர்கள் ஐவரையும் மிரட்டி கையெழுத்து வாங்கினர்.
அந்த ஆவணங்கள் மராத்தி மொழியில் கையால் எழுதப்பட்டிருந்தன. கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் கசன்சூர் (Kasansur) கிராமத்திலிருந்து கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக அந்த ஆவணம் கூறியது. “நான் கையெழுத்துப் போட மறுத்தவுடன் நீயும் சாக விரும்புகிறாயா? என்று அவர்கள் கேட்டனர்” என்று பெற்றோர்களில் ஒருவர் கூறினார். போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட எட்டு சிறுவர்களில் கல்லூரிக்கு செல்லும் அவரது பதின்ம வயது மகனும் ஒருவனாக இருக்கக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.
இந்த எட்டு சிறுவர்களுக்கும் மாவோயிச கமாண்டர் சாய்நாத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துது போல அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்ததாக அந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர். போலி மோதலில் படுகொலை செய்யப்பட மூன்று மாவோயிச கமாண்டர்களில் கட்டெபள்ளியைச் சேர்ந்த சாய்நாத்தும் ஒருவர். கொல்லப்பட்ட மற்ற இருவர் மாவோயிச கமிட்டி உறுப்பினர்களான ஸ்ரீநாத் மற்றும் நந்து. ஸ்ரீனு மற்றும் சாய்நாத் இருவரும் இந்திராதேவி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டனர். நந்து மற்றும் அவருடன் மேலும் ஐவர் இராஜாராம் கான்ட்லா காட்டுப்பகுதியில் ஏப்ரல் 23-ம் தேதி கொல்லப்பட்டனர்.
போலீசு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கே ஆறு பேர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் சீருடையணிந்தும் மேலும் ஐவர் சீருடை அணியாமலும் இருந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். போலீசு நிலையத்தில் இருந்த அதிகாரிகளில் மகேஷ் மத்கார் மற்றும் மண்டிவார் ஆகிய இருவரை அவர்கள் அடையாளம் கூறுகின்றனர். “இந்த இருவர்தான் தொடர்ச்சியாக எங்களை கையெழுத்து போடுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஒரு நான்கு மணி நேரம் கையெழுத்துப் போடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நாங்கள் பயத்தில் இருந்ததால் அதைத் தவிர கடைசியில் எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறினார் ஒரு கிராமத்துவாசி.
தாங்கள் கையெழுத்துப்போட்ட அந்த ஆவணங்களை விரைவில் போலீசார், நீதிபதி முன் வைத்து குற்றவியல் நடைமுறை சட்டம் 167-ன் படி வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் எங்களால் அதை திரும்பப்பெற முடியாது என்றும் கிராம மக்கள் கூறினர். கையெழுத்துப் போட்ட அந்த ஆவணங்களின் நகலை கேட்டும் கொடுக்க முடியாது என்றும் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு போலீசு எங்களிடம் கூறிவிட்டது என்று அவர்கள் கூறினார்கள்.
பெர்மிலி துணை போலீசு நிலையப் பொறுப்பாளரான கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் இராஜாவை தொடர்பு கொண்டபோது அவர் பதிலேதும் சொல்லவில்லை. கட்ச்ரோலி போலீசு கண்காணிப்பாளர் அபினவ் தேஷ்முக்கிடம் கிராம மக்களின் குற்றச்சாட்டைப் பற்றி கேட்ட போது அது ”தவறான தகவல்” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே பதிலாகக் கூறியிருக்கிறார்.
நாக்பூரில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எடப்பள்ளி வட்டத்தை சேர்ந்த ஒரு சிறு கிராமம்தான் கட்டெபள்ளி. கட்ச்ரோலி பகுதியில் உள்ள பெரும்பாலான பழங்குடி மக்களைப் போல கட்டெபள்ளியின் 35 குடும்பங்கள் பீடி சுற்ற உதவும் ‘தெண்டு’ இலைகளை பறித்தும் காடுகளில் விளையும் ஏனைய பொருட்களை வைத்தும்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. அவர்களில் வெகு சிலருக்குத்தான் மராத்தி மொழியில் எழுதப்படிக்கத் தெரியும்.
போலீசால் பிடித்துச்செல்லப்பட்ட ஐவரில் மூவர் காணாமல் போன எட்டு சிறுவர்களுக்கு நேரடியாக தொடர்பு உள்ளவர்கள். அக்கிராமத்தின் கல்வியறிவு கொண்ட வெகு சிலரில் இந்த ஐந்து பேர்களும் உள்ளனர். அவர்களைப் பிடித்து சென்றதற்கு இதுதான் முதன்மையான காரணம் என்று கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். “நாங்களாகவே போலீசுக்கு சாட்சியமளிக்க முன்வந்ததைப் போல், நீதிமன்றத்திற்கு காட்ட அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அளித்த வாக்குமூலத்தை பின்னாளில் திரும்பப் பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
தங்களது கிராமத்திலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவேயுள்ள கசன்சூர் கிராமத்தில் நடந்த போலிமோதல் படுகொலைகள் குறித்து ஏப்ரல் 22 ம் தேதி மாலை வரை கட்டெபள்ளி கிராம மக்களுக்கு தெரியவில்லை. அந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய மற்ற கிராம மக்கள் மூலமாக தெரிய வந்த பிறகு தான் அவர்கள் போலீசு நிலையத்திற்கு விரைந்து சென்றார்கள். மேலும் காணாமல் போனது குறித்து ஒரு புகாரையும் கட்ச்ரோலி போலீசு நிலையத்தில் பதிவு செய்தனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு போலீசு நிலையத்தில் இருந்தோ ஊடகங்களிடம் இருந்தோ எந்த தகவலும் கிராமத்து மக்களுக்கு கிடைக்கவில்லை.
ஏப்ரல் 27-ம் தேதி அந்த கிராமத்தைப் பார்வையிடச் சென்ற முதல் ஊடகம் ’தி வயர்’. அங்கு நடந்த உரையாடலின் போது எதேச்சையாக வழக்குரைஞரும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான லால்சு சோமா நகோடியுடைய கைப்பேசியிலிருந்த சிறார்களின் படங்களில் ஒன்றைப் பார்த்ததும், அதுதான் காணாமற்போன சிறார்களில் ஒருவரான 16 வயதான ராசு சாக்கோ மாதவி என்று கண்டு கொண்டார் கிராமவாசி ஒருவர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த செய்தியை கிராம மக்களுடன் பகிர்ந்து கொண்டார். நக்சலைட்டுகள் என்று சந்தேகிக்கப்பட்டு போலீசால் படுகொலை செய்யப்பட்ட 16 பேரில் அந்த சிறுமியின் புகைப்படமும் ஒன்று. தங்களது மகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் மாதவியின் குடும்பத்தாரிடம் அவளது உடலை போலீசு இன்னமும் ஒப்படைக்கவில்லை.

கிராமத்து மக்களிடம் பொய்யான வாக்குமூலங்களை வாங்கியது மட்டுமல்ல கிராம மக்களை திசை திருப்ப வேறு குறுக்குவழிகளையும் போலீசு மேற்கொள்கிறது. கிராம மக்களுடனான உறவினை மேம்படுத்துவதாக கூறிக்கொண்டு எட்டு சேலைகள், 20 சோடி செருப்புகள், 15 குடைகள் மற்றும் இரண்டு அலுமினிய பாத்திரங்களை கிராம மக்களிடம் நன்கொடையாக போலீசு வழங்கியது. “திடீரென்று அவர்கள் இங்கே வந்து இவற்றை கொடுக்க தொடங்கிவிட்டனர். சிலர் அதை எதிர்த்தனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை” என்று கிராம பெரியவர் ஒருவர் கூறினார். வேறு வழியில்லாமல் கிராம மக்களும் அவற்றை வாங்கினாலும் பயன்படுத்தவில்லை. “அவர்கள் எங்களை கொலை செய்து பின்னர் பரிசுகளை தருவார்கள். எப்படி அவற்றை நாங்கள் பயன்படுத்துவது?” என்று கோபத்துடன் ஒரு கிராமவாசி கேட்டார்.
சட்டரீதியிலான ஆதரவின்மை:
படுகொலை செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதலில் போலீசின் கதையை பத்திரிகைகள் அப்படியே வெளியிட்டன. ஆனால் கிராம மக்கள் நடந்ததை சொல்ல தொடங்கிய பின்னர் போலீசின் கட்டுக்கதைகள் அம்பலமாக தொடங்கின.
சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் என 40 பேர்கள் அந்த கிராமத்திற்குள் உடனடியாக சென்று போலீசின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தினர். விளைவாக, படுகொலை செய்யப்பட சிறுவர்களின் குடும்பத்தாருக்கு உடனிருந்து உதவி செய்த மூத்த வழக்குரைஞர் சுரேந்திரா காட்லிங் மற்றும் நில உரிமை செயற்பாட்டாளர் மகேஷ் இரவுத் இருவரும் நக்சல் இயக்கத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு புனே போலீசால் கைது செய்யப்பட்டனர். “நாங்கள் போலீசின் கட்டுக்கதையை எதிர்த்து உயர்நீதி மன்றம் செல்ல இருந்தோம். சட்டரீதியான உத்திகளை முடிவு செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் காட்லிங் கைது செய்யப்பட்டார்” என்று நோகோட்டி கூறினார்.
___________________
நன்றி: தி வயர் (’தி வயர்’ இணையதளத்தில் சுகன்யா சாந்தா எழுதிய கட்டுரை) தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு
Maharashtra Police Forced Us to Sign Letters Implicating Missing Children as Maoists: Villagers