டந்த ஒரு ஆண்டில் இடம் பெயர்ந்த புதிய அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துருக்கி, வங்காள தேசம் மற்றும் உகாண்டா ஆகிய மூன்று நாடுகள் அடைக்கலம் தந்திருக்கின்றன. இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு போராலும் கடுமையான ஒடுக்குமுறையாலும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயரும் மக்களுக்கான சர்வதேச பொறுப்பு பகிர்தல் மிகவும் மோசமான அளவிற்கு சீர்குலைந்துள்ளது. போரின் காரணமாக இடம் பெயர்பவர்களைத் தடுத்து நிறுத்த பணக்கார நாடுகள் பல தடைகளை உருவாக்கியுள்ளன. பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருக்கும் மக்களின் உதவிக்கு மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை மற்றும் நார்வே அகதிகள் கவுன்சிலின் (NRC) உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு மையம் ஆகிய அமைப்புகள் தரும் கணக்குப்படி 2018-ம் ஆண்டு தொடக்கம் வரை, வற்புறுத்தப்பட்டு இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 6.85 கோடி. இது இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகைக்கு சமமானதாகும்

இவ்விவகாரத்தைப் பொருத்தவரையில் சர்வதேச ஒத்துழைப்பும், அமைதிக்கான செயல்நயமும் மிகப்பெரும் சரிவில் சிக்கியுள்ளன. உலகம் முழுவதும் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை 6-வது ஆண்டாக தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடம்பெயர்பவர்களில் மிகவும் குறைவானவர்களே பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்புகிறார்கள்.

சுமார் 4 கோடி மக்கள் தங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்கின்றனர். 2.85 கோடி பேர் எல்லை கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதிகளாகின்றனர்.

கடந்த ஆண்டு புதிய அகதிகளை அதிகமான அளவில் தன்னகத்தே சேர்த்துக் கொண்ட நாடு துருக்கி. சுமார் 7 லட்சம் மக்களை புதிய அகதிகளாக அது ஏற்றுக் கொண்டது. இதுவரையில் சுமார் 38 லட்சம் அகதிகளை அது ஏற்றுக் கொண்டுள்ளது. சிரிய அகதிகளே மிக அதிகமாக அங்கு இடம்பெயர்கின்றனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் சேர்ந்தே வெறும் 5 இலட்சம் புதிய அகதிகளைத்தான் கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்கா சுமார் 60,000 அகதிகளை மட்டுமே கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றோடு துருக்கியை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

தஞ்சம் புகும் மக்களில், மிகவும் குறைவான அளவினரே அமெரிக்கா மற்றும்  ஐரோப்பாவிற்குச் செல்லும் சூழலில், தற்போது அதிக அகதிகளை ஏற்றுக் கொள்ளும் வங்காளதேசம், லெபனான், உகாண்டா உள்ளிட்ட வசதி குறைந்த நாடுகளுக்கு ஆதரவை அதிகரிக்க வேண்டியது நமது பொறுப்பாகும். மறு குடியமர்வு  செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் நமது பொறுப்பாகும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல லட்சக்கணக்கான அகதிகளைப் பாதுகாத்த ’பாதுகாப்பு வளையம்’, இப்போது வெகு சில நாடுகளால் மட்டுமே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

அகதிகளை ஏற்றுக் கொள்ளும் இந்நாடுகளுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாவிட்டால், ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பும் தளர்ந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோசமான பெரும் தொடர்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

தெற்கு சூடானிலிருந்தும் காங்கோவிலிருந்தும் உகாண்டாவிற்கு வரும் அதிக அளவிலான அகதிகளுக்கு தேவையான ஆதரவளிக்க, ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற அமைப்புகளும் கொடுக்கவல்ல தொகையில் வெறும் 7 சதவீதத்தை மட்டுமே இந்த ஆண்டு மே மாதத்தில் உகாண்டா பெற்றுள்ளது. பங்களாதேஷ் 20 சதவீதம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் படி பெருமளவிலான அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு பொருளாதார ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுமார் 12 இலட்சம் அகதிகள் புதிய நாடுகளில் மறுகுடியமர்வு வைக்கப்படவும் அவசியமாயிருக்கிறது. தற்போது இருக்கும் இடத்தில் பாதுகாப்பற்ற நிலையிலிருக்கும் அகதிகளின் எண்ணிக்கையே இது. கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள், சுமார் 1,03,000 மறுகுடியமர்வு அகதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டன.

இந்த மாதம் (ஜூன் 2018), 629 அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த மீட்புக் கப்பல் ’அக்குவாரிஸ்’-ம் அதில் இடம்பெயர்ந்து வந்தவர்களும் இத்தாலி துறைமுகத்தில் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட சம்பவம், பொறுப்புகளை பங்கிட்டுக் கொள்வதில் நாடுகளுக்கு இருக்கும் சுணக்கத்தின் தொடர்விளைவுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது

கடலில் தவிக்கும் மக்கள், அரசியல் விளையாட்டால் நொறுக்கப்பட்டால், சர்வதேச பொறுப்புப் பகிர்வில் ஒரு ஒழுங்கான அமைப்பு இருப்பதில் நீடிக்கும் சுணக்கத்திற்கு அதுவே ஒரு அபாயகரமான அடையாளமாகும்.

நார்வே அகதிகள் கவுன்சிலானது, போர் மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு முன் உள்ள புதிய எல்லைத் தடைகளையும், ஆபத்திற்குள்ளாகும் அகதிகளின் உரிமைகள் குறித்தும் பார்ப்பதில் அக்கறை செலுத்துகிறது.

நார்வே அகதிகள் கவுன்சில் செயல்படும் பல்வேறு நாடுகளில், அதிகாரத்தில் உள்ள நபர்கள், அகதிகளுக்கு தங்களது நாட்டு எல்லைகள் மூடப்படுவதை நியாயப்படுத்த, ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியிருப்பதை ஒரு காரணமாகக் காட்டுகின்றனர். இந்தப் போட்டியை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். மாறாக, உகாண்டாவைப் போன்ற அகதிகளை ஏற்றுப் பாதுகாக்கும் நாடுகளைக் கண்டு உத்வேகம் கொள்ள வேண்டும்.

– நன்றி: ’தி வயர்’ இணையதளம்
தி வயர் இணையதளத்தில் ’ஜேன் ஈஜ்லாண்ட்’ எழுதிய கட்டுரை
Three Countries Are Protecting More Than Half of the World’s Refugees
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு

”பெட்ரோலியம், கனிம வளங்கள், ஆயுத விற்பனை, அணு சக்தி என அனைத்திலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கழுத்தறுப்புப் போட்டி உச்சத்தில் இருக்கின்ற இந்த வேளையில்தான், மூன்றாம் உலகநாடுகளின் மக்கள் போராலும், இன மதவெறித் தாக்குதல்களாலும் தமது மண்ணை விட்டு இடம்பெயர்வதும் உச்சத்தில் இருக்கிறது.

ஏகாதிபத்தியங்களின் இலாபவெறிக்காக, கொள்ளையடிக்கும் உரிமைக்காக நடத்தப்படும் இப்பேரவலங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு அடைக்கலமும் உதவியும் அளிப்பதை, ஏதோ கருணை கொண்டு தாங்கள் போடும் பிச்சை என்பது போலவே வெளிக்காட்டிக் கொள்கின்றன வளர்ந்த நாடுகள்.

கருணை கொண்ட முதலாளித்துவம் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. இன்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும், அகதிகள் நலனுக்கும் முன் நிற்கும் நார்வே உள்ளிட்ட ஸ்கேண்டிநேவிய நாடுகளின் பொருளாதார அடித்தளம், ஆயுத விற்பனையிலும், கருப்புப்பண நிதியிலும்தான் இருக்கிறது என்ற உண்மையே இதற்கு சாட்சி !

– வினவு செய்திப் பிரிவு