மத்திய அரசு மூன்று அரசுக் கல்வி நிறுவனங்களையும் மூன்று தனியார் கல்வி நிறுவனங்களையும் “மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள்” (Institutions of Eminence) என அறிவித்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த தகுதியைப் பெற விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் இருந்து சிறப்பான கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக திரு என். கோபால்சாமி தலைமையில் ஒரு சிறப்பு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையராக முன்பு பணியாற்றிய கோபால்சாமி, தற்போது ஆர்.எஸ்.எஸ்-ன் பரிவார அமைப்பான விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் யூ.ஜி.சி மேற்படிக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களின் யோக்கியதைகளை ஆராய்ந்த பின் “சிறந்த கல்வி நிறுவனங்கள்” என அறிவித்துள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் உலகளவில் முதல் 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மேலும், தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு முழுமையான தன்னாட்சி உரிமையும் வழங்கப்படுவதோடு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு ஆயிரம் கோடி நிதி உதவியும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியான நிதி ஒதுக்கீடு இருக்காது என்றாலும், குறிப்பிட்ட முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான நிதியைக் கோரிப் பெற முடியும்.
இது செய்தி. ஒருவழியாக நான்கு வருடத்தில் உருப்படியான திட்டம் ஒன்றை மோடி அரசு கண்டுபிடித்து விட்டது என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்தீர்கள். இந்தச் செய்தியில் மேலும் சில விடுபட்ட விசயங்கள் உள்ளன. மேற்கொண்டு படியுங்கள்.
பெங்களூர் ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி ஆகிய அரசு கல்வி நிறுவனங்களுடன் பிட்ஸ் பிலானி, மணிபால் பல்கலைக்கழகம் மற்றும் ஜியோ இன்ஸ்டிட்யூட் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஜியோ இன்ஸ்டிட்யூட் என்பது இதுவரை யாருமே கேள்விப்படாத பெயராக உள்ளதே எனத் தேடிப் பார்த்தால் உண்மையில் அப்படி ஒரு கல்வி நிறுவனம் இதுவரை செயல்பாட்டுக்கே வரவில்லை என்பது தெரிய வந்தது. முகேஷ் அம்பானியின் மனைவி, தனது தலைமையில் இயங்கும் அறக்கட்டளையின் கீழ் ஜியோ இன்ஸ்டிட்யூட் எனும் பெயரில் தாம் ஒரு கல்வி நிறுவனத்தைத் துவங்கவுள்ளதாக இந்த வருடம் மார்ச் மாதம் அறிவித்திருக்கிறார்.
செயல்பாட்டுக்கே வராத நிறுவனம் தலைசிறந்த நிறுவனம் என்கிறது மோடி அரசு. கும்பலாட்சி, வாழைப்பழ ஜனநாயகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் – இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அம்பானிக்கு சேவை செய்வதற்காக ஏற்கனவே சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களைப் புறக்கணித்துள்ளது மோடி அரசு. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து எதிர்கட்சிகளின் கண்டனங்களோடு இணையவாசிகளின் கேலி கிண்டலுக்கும் மத்திய அரசு ஆளானது. நிலைமையை சமாளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்த்தைப் பெற செயல்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களோடு, செயல்பாட்டுக்கு வரவுள்ள நிறுவனம் ஒன்றையும் இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அரசின் ‘கொள்கை’ முடிவு என்பது அமைச்சரின் விளக்கம். இதற்காக புதிதாக துவங்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு ’நிலம் இருக்க வேண்டும்’, ’அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களும், நிர்வாகிகளும் இருக்க வேண்டும்’, ‘நிதி இருக்க வேண்டும்’ மற்றும் ‘நீண்டகாலச் செயல்திட்டம் இருக்க வேண்டும்’ என்பதான நான்கு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே அம்பானியின் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார் அமைச்சர்.
பேராசிரியர்கள் உள்ளிட்ட எதையும் கொள்முதல் செய்வது ஒன்றும் அம்பானிக்கு பெரிய விசயமில்லை. ஆனால், இதுவரை அப்படிக் கொள்முதல் செய்யப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. மேற்படி ’உலகத் தரம் வாய்ந்த’ பல்கலைக்கழகத்திற்கென இணையதளம் கூட இல்லை என்பது தான் விசேசம். இது நாள்வரை ஜியோ இன்ஸ்டிட்யூட் எனும் அந்தப் பல்கலைக்கழகம் அம்பானியின் கழிவறை நேரக் கற்பனையில் மட்டுமே இருந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த 9,500 கோடி முதலீடு செய்யவிருப்பதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. எப்படியும் இது வங்கிக் கடன் எனும் பெயரில் மக்களிடம் ஆட்டையைப் போடுவதற்கான திட்டமாகத்தான் இருக்கும் – ஏனெனில் அம்பானிகளின் வரலாறு அப்படி.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் ஜியோ இன்ஸ்டிட்யூட் கடும் விமரிசனங்களைச் சந்தித்து வருகின்றது. ஜியோஇன்ஸ்டிட்யூட் எனும் பெயரிலேயே டிவிட்டர் கணக்கு ஒன்றைத் துவங்கி பகடி செய்து வருகின்றனர் – அதில் இருந்து ஒரு சிறிய தொகுப்பு கீழே:
Data is Free, Not Education.
— Jio lnstitute (@Jiolnstitute) July 9, 2018
டேட்டா இலவசம். கல்வி இலவசமல்ல
A Campus beyond boundaries and a toilet to keep campus Free from open defecation. pic.twitter.com/tsHSHY1HHs
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
எல்லை கடந்த எங்கள் கல்லூரி வளாகமும் அதில் திறந்தவெளி மலங்கழிப்பை ஒழிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் கக்கூசும்.
Our campus is free from any type of Discrimination, because there is no Campus.
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
எங்கள் கல்லூரி வளாகத்தில் எந்த விதமான பாகுபாடும் காட்டப்படுவதில்லை. ஏனெனில் எங்களிடம் வளாகமே இல்லை.
Instead of taking1000 crores from Government, We will give them 2000 crores for Party fund.
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
நாங்கள் அரசாங்கத்திடமிருந்து ஆயிரம் கோடியை வாங்கிக் கொண்டு கட்சி நிதியாக இரண்டாயிரம் கோடி கொடுப்போமே
At Jio Institute, No desks will be provided to keep students down to earth. This small step will save 10 millions trees every year. pic.twitter.com/mogylX6OOO
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
எங்கள் ஜியோ கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் அமர மேசைகள் வழங்கப்படாது. இதனால் அவர்கள் தாழ்மையைக் கற்றுக் கொள்வார்கள். மேலும் இச்சிறிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் மரங்களும் காப்பாற்றப்படும்
Students of Jio Institute working on a Prototype bike which runs on a single wheel and without fuel. pic.twitter.com/GgCvg1V3tr
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
இதோ எங்கள் மாணவர்கள் எரிபொருள் இல்லாமல் ஒரே சக்கரத்தில் ஓடும் வண்டியின் மாதிரியை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No Paper will be used in Jio Institute and the Study Material will be provided on WhatsApp to save Trees. ♻️
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
நாங்கள் காகிதங்களையே பயன்படுத்த மாட்டோம். மரங்களைக் காப்பாற்ற பாடங்களை வாட்சப்பிலேயே அனுப்பி விடுவோம்.
A team of doctors at Jio Institute discussing methods to control population with morning walks. pic.twitter.com/X0b55Sw0ee
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
இதோ எங்கள் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் குழு காலை நேர நடை பயிற்சியின் மூலம் மக்கள் தொகையை எப்படிக் கட்டுப்படுத்துவது என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Jio University is the prime example of Gujarat education model. Politicians call it excellent. But it doesn't exist.
— Jio lnstitute (@Jiolnstitute) July 10, 2018
ஜியோ பல்கலைக்கழகம் என்பது குஜராத் மாடல் கல்விக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அரசியல்வாதிகள் அதை மிகச் சிறந்தது என்பார்கள். ஆனால் எதார்த்தத்தில் அப்படி ஒன்று இருக்கவே இருக்காது.
– வினவு செய்திப் பிரிவு