ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகரான ஒரு படுகொலையை நடத்தி முடித்து விட்டு, அந்தப் படுகொலையை நிகழ்த்திய கொலைகாரர்களே, பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய்க்குற்றம் சுமத்திச் சிறை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டாவது சுற்றுத் தாக்குதல். 13 உயிர்களைப் பறி கொடுத்த மக்களின் கண்ணீர் அடங்குவதற்குள், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான சதி வேலைகள் தொடங்கிவிட்டன.

மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் தூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக ஒரு மனுவை போலீசே தயார் செய்து, மக்கள் சிலர் அதனைக் கொடுப்பது போல ஊடகங்களில் விளம்பரப்படுத்தினர். தமிழக அரசால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஊடகங்கள் எவ்விதக் கேள்வியுமின்றி ஸ்டெர்லைட் கொடுத்த இந்த விளம்பரத்தை ‘‘செய்தி’’ என்ற பெயரில் வெளியிட்டன.

தூத்துக்குடி மாடல் வளர்ச்சிஇந்தச் செய்தி வெளியாகின்றபோதே, ஸ்டெர்லைட் ஆலை மூடலால் வேலையிழக்கும் தொழிலாளர்கள்,  பாதிக்கப்படும் துணைத் தொழில்கள், தடுமாறும் தூத்துக்குடி பொருளாதாரம், தாமிரப் பற்றாக்குறை என்று பல நாளேடுகளில் அடுக்கடுக்கான கட்டுரைகளை அனில் அகர்வாலின் பணம் பிரசவித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் துப்பாக்கிச் சூடு என்று அழைக்கப்படும் சட்டவிரோதப் படுகொலை குறித்த புலனாய்வில் ஓரிரு பத்திரிகைகளைத் தவிர வேறு யாரும் ஈடுபடவில்லை.

ஜார்ஜ் புஷ் நடத்திய இராக் ஆக்கிரமிப்புப் போரின்போது, அமெரிக்க இராணுவத்தின் வாகனத்திலேயே சென்று, அவர்கள் போட்ட சோற்றைத் தின்று, அவர்கள் காட்டிய திசையில் காமெராவைத் திருப்பிய பத்திரிகையாளர்கள் ‘‘embedded journalists’’ என்று அழைக்கப்பட்டனர்.  ‘‘உடன்படுக்கை ஊடகவியலாளர்கள்”  என்று அந்தச் சொல் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த மொழியாக்கத்தின் துல்லியத்தை இன்றைய ஊடகங்கள் பல தமது நடத்தை மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தூத்துக்குடி படுகொலை பற்றி இந்து ஆங்கில நாளேட்டில்  (The Thoothukudi fables, 8.6.2018) எழுதிய ஷிவ் விசுவநாதன், ‘‘காசா முனைக்கும், காஷ்மீருக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலான வேறுபாடு மறைந்து விட்டது. அங்கே பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்தும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை தூத்துக்குடியில் சொந்த மக்களுக்கெதிராக போலீஸ் பயன்படுத்துகிறது. காஷ்மீரில் அரங்கேறும் இணைய முடக்கம் தூத்துக்குடியிலும் அரங்கேறுகிறது.   குடிமகன் என்ற சொல்லின் பொருளே இப்போது சந்தேகத்துக்குரியவன் என்று மாறிவிட்டது. இப்பகுதி மக்களிடம் காணப்படும் புற்றுநோய், தோல் நோய் போன்றவற்றுக்கான விநோத அறிகுறிகளை ‘ஸ்டெர்லைட் சிம்ப்டம்’ என்ற சொல்லால் தூத்துக்குடி மருத்துவர்கள் அழைக்கிறார்கள். அதுபோல, நாம் இன்று எதிர்கொள்ளும் சூழலை ‘ஸ்டெர்லைட் ஜனநாயகம்’ என்றுதான் அழைக்க வேண்டும்’’ என்றவாறு குறிப்பிடுகிறார்.

இந்த ‘‘ஸ்டெர்லைட் மாடல்’’ ஒடுக்குமுறையில் ஊடும் பாவுமாகப் பல இழைகள் ஓடுகின்றன. இது கார்ப்பரேட் முதலாளிகள் இலஞ்ச, ஊழல் மூலம் அதிகாரவர்க்கத்தையும் அரசாங்கத்தையும் தம் விருப்பத்துக்கு வளைத்துக் கொள்ளும் வழமையான விவகாரம் அல்ல. சட்டீஸ்கரைப் போல சல்வா ஜுடும் என்ற தனியொரு கார்ப்பரேட் கூலிப்படையை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, போலீசே அத்தகைய கூலிப்படைத் தன்மையை எட்டியிருப்பதை தூத்துக்குடி மாடல் காட்டுகிறது.

“சட்டத்தின் ஆட்சி” என்ற பம்மாத்தை உதறிவிட்டு, காசு கொடுக்கின்ற பன்னாட்டு நிறுவனத்திடம் தயக்கமின்றி தமது மண்ணை விற்கின்ற ஆப்பிரிக்க இனக்குழுத் தலைவர்களைப் போல, தன்னை விலை கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. அரசையும், குஜராத்தி பனியா தரகுமுதலாளித்துவ கும்பலுக்கு முடிந்தவரை நாட்டை எழுதி வைத்து வரும் மோடி அரசையும் தூத்துக்குடி மாடல் அடையாளம் காட்டுகிறது. பார்ப்பன பாசிசம் தமிழகத்தின் மீது கொண்டிருக்கும் சந்தேகத்தையும், தனிச்சிறப்பான வெறுப்பையும், கம்யூனிசப் புரட்சியாளர்கள் மீது கொண்டிருக்கும் வன்மத்தையும் தூத்துக்குடி விவகாரத்தில் மத்திய உளவுத்துறையின் மிதமிஞ்சிய தலையீடு நிரூபிக்கிறது.

சட்டீஸ்கரைப் போல சல்வா ஜுடும் என்ற தனியொரு கார்ப்பரேட் கூலிப்படையை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, போலீசே அத்தகைய கூலிப்படைத் தன்மையை எட்டியிருப்பதை தூத்துக்குடி மாடல் காட்டுகிறது.

13 பேரைச் சுட்டு வீழ்த்திய பின்னரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து ஆளும் வர்க்கம் மீண்டுவிடவில்லை.  ‘‘இது நெடுங்காலமாக அடக்கப்பட்ட கோபங்கள் குமுறி வெடிக்கின்ற, உயர் அழுத்த கலகங்களின் காலம். இது மொத்த அரசியல் அமைப்பும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாகத்தான் இயக்கப்படுகிறது என்ற புரிதலிலிருந்து வருகின்ற கோபம். கடந்த காலத்தின் போராட்டங்களுக்கும் இன்றைய போராட்டங்களுக்கும் உள்ள தன்மைரீதியான வேறுபாடு என்னவென்றால், இன்று போராட்டத்தில் மொத்த சமூகமும் ஈடுபடுகிறது. போராட்டங்கள் மென்மேலும் தலைவர்கள் இல்லாப் போராட்டங்களாகி வருகின்றன” என்று எச்சரிக்கை செய்கிறார் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் (தி  15.6.2018).

“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் எல்லாமே அந்தந்த பகுதிகளில் சில்லறை சக்திகளால் தூண்டப்பட்டு நடத்தப்படுகின்றனவே தவிர, பெரிய கட்சிகளால் அல்ல.  இந்தப் போக்கு தொடர்ந்தால், அது தமிழக அரசியல் லகானை அராஜக சக்திகளின் பிடியில் கொடுத்தது போல ஆகிவிடும்” என்று எச்சரிக்கை செய்கிறார் குருமூர்த்தி. (துக்ளக், 6.6.2018 )

“அராஜகத்தை தோற்றுவித்து தேசத்தையே நிலைகுலைய வைக்கும் தீய நோக்கம் கொண்டது ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம். ஒக்கி புயலைத் தொடர்ந்து, 2017 டிசம்பரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப்பெரிய கலவரத்தை தூண்டுவதற்கு மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சிகளை, அதன் முன்னணியாளர்களைக் கைது செய்ததன் வாயிலாக போலீசு முறியடித்து விட்டது” என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர். “ஸ்டெர்லைட் ஆலை மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள், வி.ஏ.ஓ. அலுவலகத்துக்குத் தீ வைக்கத் திட்டமிட்டார்கள்” என்று மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகப் பொய்களையும் புனைகதைகளையும் அவிழ்த்து விடுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு தமிழகம் தழுவிய மக்கள் எழுச்சி மீண்டும் தோன்றிவிடும் என்ற பீதி சங்கபரிவாரத்தினரின் பேச்சிலும் எழுத்திலும் தெரிகிறது. ‘‘மக்கள் அதிகாரம் அமைப்பைத் தடை செய்தால் மட்டும் போதாது, அவர்களைக் கருவறுக்க வேண்டும்” என்று நஞ்சைக் கக்குகிறார் பொன். இராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாடல் வளர்ச்சிபுதிய தாராளவாதக் கொள்கைகளின் தோல்வி, மாபெரும் மீட்பராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் தோல்வி, இந்த அரசமைப்பின் தோல்வி ஆகியவற்றை பார்ப்பன பாசிஸ்டுகளால் மறைக்கவும் இயலவில்லை, ஏற்கவும் இயலவில்லை. தமது பேச்சுகள் வாயிலாக இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும் தங்களது பாசிச முகத்தையும் இவர்கள் மக்களுக்கு ஒருசேர அறியத் தருகிறார்கள்.

புதிய தாராளவாதம் என்று கூறப்படும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் தம் இயல்பிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமானவை. புதிய தாராளவாதக் கொள்கைகளின் விளைவான தீவிர முதலாளித்துவச் சுரண்டலும், சமூக ஏற்றத்தாழ்வு அதிகரிப்பும், உற்பத்தி தேக்கமும், வேலையின்மை அதிகரிப்பும் மீளமுடியாத முட்டுச்சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நிறுத்தியிருக்கின்றன. சூதும் திருட்டும் மட்டுமே இனி முதலாளித்துவம் இலாபமீட்டுவதற்கான வழிகள் என்றாகிவிட்டன.

இயற்கை வளங்களைக் கொள்ளையிடுதல், சிறு உடைமையாளர்களின் தொழில்களைக் கைப்பற்றுதல், பொதுத்துறை நிறுவனங்களைப்  பிடுங்குதல், வரிச் சலுகைகள் – மானியங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவைக் கொள்ளையிடுதல், வங்கிகளைக் கொள்ளையிடுதல் போன்றவற்றைத்தான் ‘‘இலாபமீட்டும் தொழில்களாக” பன்னாட்டு முதலாளிகளும் பெரு முதலாளிகளும் தெரிவு செய்திருக்கிறார்கள்.  புல்லட் ரயில், எட்டு வழிச்சாலை என்பன போன்ற திட்டங்கள் பயனற்றவை மட்டுமல்ல, இயற்கை வளங்களை அழிப்பதுடன், சிறு உடைமை விவசாயிகளின் சொத்தைத் திருடி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதையும்,  டோல்கேட் என்ற வழிப்பறியைச் சாத்தியமாக்குவதையும், கனிம வளங்களைக் கொள்ளையிட வகை செய்வதையுமே நோக்கமாகக் கொண்டவை.

காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய அனில் அகர்வால்,  தூத்துக்குடி மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதைவிட வேறு ஒரு அமைப்பால் அம்மக்களைப் போராடத் தூண்ட முடியுமா?

எனவேதான், எழுப்பப்படும் கேள்விகள் எதற்கும் அறிவுபூர்வமான விளக்கத்தை இவர்களால் தர முடிவதில்லை. ‘‘மக்களின் கருத்தறிதல்” என்பதெல்லாம் சட்டங்களில் ஏட்டளவில் இருந்தாலும், அவை எதையும் எப்போதுமே இவர்கள் அமல்படுத்துவதில்லை. நிலம்  கையகப்படுத்தும் சட்டம்- 2013 கூறுகின்ற வழிமுறைகளாக இருக்கட்டும், ‘‘வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல், மக்கள் பங்கேற்பு” (Transperance, Accountability, Participation) என்று உலகவங்கி போன்ற நிறுவனங்கள் தேனொழுகச் சிபாரிசு செய்கின்ற நடவடிக்கைகளாக இருக்கட்டும், எதுவும் பின்பற்றப்படுவதில்லை.  இதன் பொருள் என்னவென்றால், மறுகாலனியாக்கத்துக்கு மனித முகம் அணிவிப்பது (Globalisation with a human face) சாத்தியமில்லை என்பதுதான்.

“வளர்ச்சி” என்று புனை பெயர் சூட்டுவதனால் ‘‘திருட்டு” என்பதற்கு வேறு பொருள் வந்து விடுவதில்லை. எனவேதான், இந்த கொள்ளைக்காரத் திட்டங்களுக்கு எதிராக எழுப்பப்படும் வெகுளித்தனமான ஆட்சேபங்கள்கூடத் தேசவிரோத நடவடிக்கைகளாக சித்தரிக்கப்படுகின்றன. போராட்ட உரிமை இருக்கட்டும், அரசியல் சட்டம் கூறுகின்ற கருத்துரிமையைக் கோருவதே வரம்பு மீறிய தீவிரவாத நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகின்றது. மதுரை உயர் நீதிமன்றம் தூத்துக்குடி போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு போட சிபாரிசு செய்கிறது. சென்னை உயர் நீதிமன்றமோ எட்டு வழிச்சாலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்திக் கருத்து கூறுவதற்கே தடை விதிக்கிறது.

முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தூத்துக்குடி போராட்டம் குறித்து ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் அரசமைப்பின் தோல்வியையும் நீதித்துறையின் தோல்வியையும் மறுக்கவில்லை. எனினும், தூத்துக்குடி போராட்டம் போன்ற பெருந்திரள் போராட்டங்களை முளையிலேயே கிள்ளுவதற்கு போலீசும் உளவுத்துறையும்  கையாளவேண்டிய புத்திசாலித்தனமான உத்திகள் குறித்து அவர் உபதேசிக்கிறார். அத்தகைய ‘‘தேர்ச்சி நயமற்ற” பாசிஸ்டான குருமூர்த்தி, ‘‘மனிதனுக்கு உடல் பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் 100-க்கு 99 பேர் ஒழுங்காக இருப்பார்கள்… போலீஸ் மீது விசாரணை என்றால், பிறகு போலீசாருக்கு வேலையில் என்ன ஆர்வம் இருக்கும்?” என்று சோ பேசியதையும் ரஜினி பேசியதையும் வழிமொழிகிறார். (துக்ளக், 13.6.2018)

“எதற்கெடுத்தாலும் போராட்டமா?” என்ற கருத்தை  ஆமோதித்து, உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்துக்கு எதிராக முகம் சுளித்து வந்த நடுத்தர வர்க்கத்துக்கும்கூட இன்று புத்தி தெளிந்து விட்டது. தனியார்மயக் கொள்கைகள் மீதான அதன் மயக்கம் மறைந்து விட்டதால், அது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதுடன், களத்திலும் இறங்கத் தொடங்கி விட்டது. அதனால்தான், ‘‘போராட்டங்களைக் கையாளும் உளவுத்துறை இன்றைய போராட்டங்களில் நடுத்தர வர்க்கம் ஆற்றும் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கிறார் எம்.கே.நாராயணன்.  அருண் ஜெட்லியோ, மக்கள் போராட்டங்களை ஆதரிக்கும் அறிவுத்துறையினர் மீது  ‘‘நகர்ப்புற நக்சல்கள்,  அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்துகிறார்.  ‘‘போராடத் தூண்டும் தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்” என்று கூச்சலிடுகிறார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய அனில் அகர்வால்,  தூத்துக்குடி மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதைவிட வேறு ஒரு அமைப்பால் அம்மக்களைப் போராடத் தூண்ட முடியுமா? எட்டுவழிச் சாலைக்காக நிலப்பறி இயக்கம் நடத்தும் எடப்பாடி அரசை மிஞ்சி, வேறொருவன்  ஐந்து மாவட்ட விவசாயிகளை வீதிக்கு இழுத்து வந்திருக்க முடியுமா?

ஒரு சங்கிலித் திருடன்கூட, தன்னிடம் கழுத்துச் சங்கிலியைப் பறிகொடுக்கும் பெண், ‘‘தன்னை எதிர்ப்பாள், தடுப்பாள், போராடுவாள்” என்ற ‘நியாயத்தை’ அங்கீகரிக்கிறான். ‘‘யாரோ ஒரு வழிப்போக்கனோ, போலீஸ்காரனோ தூண்டி விட்டிருக்காவிட்டால், அவள் கூச்சல் போடாமல் கழுத்துச் சங்கிலியைக் கழற்றி என்னிடம் கொடுத்திருப்பாள்” என்று யார் மீதும் அவன் பழி சொல்வதில்லை.  மோடி, எடப்பாடி அரசுகள் அப்படித்தான் சொல்கின்றன. மக்கள் அதிகாரத்தை முடக்கி விட்டால், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களை அவித்துவிடலாம்  என்று கூறும் இவர்களுக்கு, ஒரு சங்கிலித் திருடனிடம் இருக்கும் ‘நேர்மை’யும் இல்லை, அறிவும் இல்லை.

மின்னூல்:

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க