நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த இருபதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்ஸ் காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், சென்னை லோக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு  உணவு – எண்ணெய் லாரி உரிமையாளர்கள் சங்கம், சென்னை மெட்ரோ பொலிட்டன் டிராஸ்ன்ஸ்போர்ட்ஸ் ஏஜென்சி அசோசியேசன் உள்ளிட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா முழுவதும் ஒன்பது இலட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 இலட்சம் லாரிகளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் சுமார் ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்தன. இன்று அவை ஆயிரம் கோடியை தாண்டியிருக்கலாம்.

இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, நாள்பட்ட சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் மற்றும் தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடந்து வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 18-ஆம் தேதி அகில இந்திய தரைவழிப் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உட்பட பல்வேறு சங்கங்கள் கலந்து கொண்டன. இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய அரசு “இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க நவம்பர் 18-ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டுள்ளதாக” பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் சுகுமார். எனவே அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கு முன்பாக கடந்த மே மாதம் 17-ஆம் தேதியே லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜூலை இருபதாம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என்று அறிவித்திருந்தது அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்ஸ் காங்கிரஸ் சங்கம். அதனடிப்படையில் கடந்த 19-ஆம் தேதி  போராட்டத்திற்கு முந்தைய நாள் மத்திய தரை வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும், நிதியமைச்சர் பியூஸ் கோயலிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், லாரி உரிமையாளர்களிடம் மூன்று மாதம் அவகாசம் கேட்டனர். இந்த அவகாசத்தின் மீது நம்பிக்கையிழந்த லாரி உரிமையாளர்கள் அதனை ஏற்க மறுத்ததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. “எங்கள் கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் திட்டமிட்டவாறு போராட்டம் நடக்கும்” என்று அறிவித்தார் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்ஸ் காங்கிரசின் சங்கத் தலைவர் பால் மல்கித் சிங். அதனடிப்படையிலேயே இந்த போராட்டம் தற்போது  தீவிரமடைந்துள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை லாரிகள் இயக்கப்பட்டு வந்தன. ஆந்திராவுக்கு சரக்குகளை ஏற்றி சென்ற லாரிகளை சோழவரம் சுங்கச் சாவடி அருகே நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு கோரினார்கள் லாரி உரிமையாளர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சரக்கு கொண்டு சென்ற லாரிகள் பாதியிலேயே ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்பட்டன.

சோழவரம் சுங்கச் சாவடியில் லாரிகளை மறித்து ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த தமிழ்நாடு உணவு எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜானகிராமன், “போராட்டத்தில் பங்கேற்காத லாரிகள் சங்கத்திடம் பேசி வருகிறோம். அவர்களும் ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கிறார்கள். வரும் திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். மேலும், இந்தப் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் சேர்த்துதான் நடத்துகிறோம்.

பேட்ரொல் – டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களும் பாதிப்படைகிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை  ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்தால் லிட்டருக்கு பதினைந்து ரூபாய் குறையும். எனவே இது பொது மக்களுக்கான போராட்டம். அதேபோல சுங்கச் சாவடியை பொறுத்த வரை இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 17,500 கோடி ரூபாய் வசூலாகிறது. அதே சமயம் சுங்க சாவடியில் லாரிகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நின்று செல்வதால் ஆண்டுக்கு 80,000 கோடி வீணாகிறது. இதனை நான் சொல்லவில்லை. மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி தான் கூறினார். நாங்கள் ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி லாரி உரிமையாளர்கள் கொடுத்து விடுகிறோம். சுங்கச் சாவடிகளை எடுத்து விடுங்கள் என்கிறோம். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. அவ்வாறு எடுத்தால் பொது மக்களுக்கு சாலையை பயன்படுத்துவதில் நன்மை உள்ளது.

மேலும் மூன்றாம் நபர் இன்சுரன்ஸ் கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்கள். பத்து ஆண்டுக்கு முன்பு 7,800 ரூபாய் இருந்தது. இன்று 40,000 மாக உயர்ந்து விட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முடியது. இந்த கட்டணங்கள் உயர்வால் நாங்கள் விலையை ஏற்ற வேண்டிய காட்டாயம் எற்படுகிறது. இது பொதுமக்களை  பாதிக்கும். எனவே எங்கள் கோரிக்கையை உடனடியாக மத்திய-மாநில அரசுகள் பரிசிலிக்க வேண்டும்”.

தமிழகத்தில் பல லாரிகள் இயங்குவதாக செய்திகளில் வருகிறதே?

“சில சங்கங்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டம்  நடத்தினார்கள். அவர்களும் இதே கோரிக்கையைத்தான் முன்வைத்தார்கள். அவர்கள் கோரிக்கையை மத்திய மாநில அரசு ஏற்றுக் கொண்டதா? ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எதற்கு வாபஸ் பெற்றார்கள்? என்று அவர்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் நேர்மையாவும், நியாயமாகவும்போராடி வருகிறோம். எங்கள் உரிமையை எதற்காகவும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.” என்றார்.

ஜானகிராமன் உள்ளிட்டோர்.

லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தனித்தனியாக போராடுவதை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய மாநில அரசுகள் இரட்டை வேடம் போட்டு லாரி உரிமையாளர்களை ஏமாற்றி வருகிறது. இது லாரி உரிமையாளர்களை மட்டும் வஞ்சிக்கும் செயல் இல்லை. சரக்கு போக்குவரத்து முடங்கினால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் சேவை முடங்கி அது முற்றிலும் மக்களை பாதிக்கும் என்பது இந்த அரசுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் பாதிப்பு குறித்த கவலை மோடி அரசுக்கோ, அடிமை எடப்பாடி அரசுக்கோ இல்லை. லாரி உரிமையாளர்கள் பிரச்சனையை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல்,  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின்போது “தெருவில் சுற்றித் திரிந்த இளைஞர்களை வைத்து பேருந்தை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்தியதைப் போல, “விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை அரசுப் பேருந்தில் கொண்டு செல்லலாம்” என்ற அறிவிப்பின் மூலம் அனைவரையும் எகத்தாளம் செய்கிறது” எடப்பாடி அரசு.

இதனை சங்கங்கள் உணர்ந்து கொண்டு ஒரே அணியாக திரண்டு எழுச்சியான போராட்டத்தை நடத்த வேண்டும். அரசு பொருட்களை லாரிகளில் ஏற்ற மாட்டோம் என்று உற்பத்தியை முடக்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசிற்கு உரைக்கும்.

– வினவு களச்செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க