சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரையின் சாரம் மற்றும் காணொளி.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பேசுகையில், சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது அரசு. அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சாலை வசதியோ, தங்கும் விடுதி வசதியோ இல்லாமல் இருக்கும் புதிய கல்லூரி வளாகத்திற்கு பேருந்து வசதியும் கிடையாது. ஆனால் இவை அனைத்து வசதிகளும் இருக்கும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடக் காத்திருக்கிறது அரசு. இதற்கு சட்டப் போராட்டம் மட்டுமே தீர்வல்ல, வீதியில் மாணவர்களும் , வழக்கறிஞர்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று கூறினார்.
அடுத்ததாகப் பேசிய ஊடகவியலாளர் ரகுமான், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்களின் வாழ்நாள் முழுக்க வாதாடத் தடை விதித்தது வெள்ளைக்கார அரசு. பின்னர் லார்ட் வாலீஸ் எனப்படும் வெள்ளைக்கார நீதிபதி அத்தடையை நீக்கினார். அவர் நினைவாக தமது மகனுக்கு வாலீஸ்வரன் எனப் பெயர்சூட்டினார் வ.உ.சி. அன்றைய வெள்ளைக்கார அரசு எவ்வாறு இந்தியர்கள் மீது வாழ்நாள் தடை விதித்ததோ அதே சூழல்தான் இங்கு நிலவுகிறது.
சமூகப் பிரச்சினைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தடுக்கும் பொருட்டுதான் இப்போது கல்லூரியை ஆளரவமற்ற இடத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறது அரசு. சட்டக் கல்வியை வியாபாரமாக்குவதும் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு சதி. இந்திய சட்ட சேவைக்கான சந்தை சுமார் 8 இலட்சம் கோடிக்கான மதிப்புடையது என அனுமானிக்கப்படுகிறது. இந்த பெரும் சந்தையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் தற்போதைய சட்டக் கல்லூரி இடமாற்றம். இதனை போராட்டக்களத்தில் தான் தடுத்து நிறுத்த முடியும். என்று பேசினார்.
அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் நளினி, சட்டக் கல்லூரி இடம் மாற்றத்திற்கு எதிரான மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, நீதிபதி கிருபாகரன் பொங்கி எழுந்து நீங்களும் அவர்களுக்கு ஆதரவா என்று கேட்கிறார். அந்த சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டவர், “புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்திற்கு வந்து பாருங்கள். கொஞ்சம் சிரமம் இருக்கும் என்றாலும் மிகவும் நல்ல இடம் அது” என்றார். இது வருத்தத்திற்கு உரியது. மாணவர்கள் போராடுவதோடு இல்லாமல், வழக்கறிஞர்களும் இணைந்து இப்பிரச்சினைக்காக போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
யூ-டியூப் காணொளி:
முகநூல் காணொளி:
பாருங்கள் ! பகிருங்கள் !
- வினவு களச் செய்தியாளர்