உத்திரப்பிரதேசத்தின் பழமையான மொகல்சராய் (Mughalsarai) தொடர்வண்டி நிலையத்தின் பெயர் 156 ஆண்டுகளுக்குப் பின்னர் காவிமயமாக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித்ஷா, மைய இரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் முகல் சராய் தொடர்வண்டி நிலையத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் பெயர் அதிகாரபூர்வமாக சூட்டப்பட்டது. இனி ஊர்கள்,பல்கலைக் கழகங்களுக்கு கோமாதா, சதி மாதா, மனு, சாணக்கியர் என்று நாடு முழுக்க சூட்டி பார்ப்பனியஸ்தானக மாற்ற வேண்டியதுதான் பாக்கி!

“நம்முடைய முயற்சிகளால் பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் நினைவாக புதிய விஷயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும், உ.பி. முதல்வர் யோகி அதித்யநாத்திற்கும் பல இலட்சம் நன்றிகள்” என்று அமித்ஷா அந்நிகழ்ச்சியில் கூறினார்.
“மையத்திலும் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி இல்லையென்றால் இந்த பெயர் மாற்றம் நடந்திருக்குமா? அடல் பிகாரி வாஜ்பேயி அரசும் இதை விரும்பியது. ஆனால் மாநில அரசு ஆதரவு கொடுக்கவில்லை. இப்பொழுதுதான் இது சாத்தியமாகியிருக்கிறது. ஏனெனில் இந்த நாடு இப்பொழுது பிரதமர் மோடியின் தலைமையில் வழிநடத்தப்படுகிறது” என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறினார். இப்படி அப்பட்டமாக நாங்கள் நாடாண்டால் இந்து நாடாக மாற்றுவோம் என்பதை திமிர் என்றே கூறவேண்டும்.
இந்த திட்டம் 2017, ஆகஸ்டு மாதம் உ.பி. முதல்வர் யோகி அதித்யநாத்தால் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்திற்கு 2018, ஜூன் மாதத்தில் உ.பி. ஆளுநர் ராம் நாயக் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

பெயரை காவிமயமாக்கும் இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கட்டிடத்தின் சில பகுதிகள் மற்றும் பெயர்பலகைகள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண் பயணிகள் மட்டுமே செல்லும் பயணிகள் தொடர்வண்டி ஒன்றும் சரக்கு தொடர்வண்டி ஒன்றும் இயக்கப்பட்டது.
மொகல்சராய் தொடர்வண்டி நிலையம், இந்தியாவின் மிகப்பழமையான ஒன்றாகும். கொல்கத்தாவையும் டெல்லியையும் இணைக்கும் பொருட்டு கிழக்கத்திய இரயில்வே நிறுவனத்தால் (Eastern Railway Company) 1862-ஆம் ஆண்டு இந்நிலையம் கட்டப்பட்டது. அதனால் இது ‘கிழக்கிந்தியாவின் நுழைவாயில்’ என்றும் அழைக்கப்பட்டது.
இந்த தொடர்வண்டி நிலையம், 16-ஆம் நூற்றாண்டில் முகலாய அரசரான செர்ஷா சூரி கிழக்கிந்தியாவை மேற்கோடு இணைக்கும் பொருட்டு கட்டிய கிராண்ட் டிரங் சாலையின் வழியே இது கட்டமைக்கப்பட்டது. நாளுக்கு 125 பயணிகள் இரயில்கள் கடந்து போகும் இந்நிலையம் இந்தியாவின் நான்காவது பரபரப்பான நிலையமாகும். மேலும் இங்குதான் இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி பிறந்தார்.

ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரும் பாரதிய ஜன சங்கம் எனும் பா.ஜ.க.வின் முதல் அவதாரத்தினை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான தீன தயாள், கடந்த 1968-ஆம் ஆண்டு முகல்சராய் தொடர்வண்டி நிலையத்தில் மர்மமான முறையில் மரணமானாராம். அதன் பிறகு பல ஆண்டுகளாக அதன் பெயரை மாற்றுவதற்கு முயன்ற சங்க பரிவாரத்தினர் இறுதியில் மோடி ஆட்சியின் கீழ் அதை நிறைவேற்றியுள்ளனர். இதுநாள் வரை அதை மர்மமரணம் என்று இவர்கள் பில்டப் கொடுப்பதிலிருந்தே அது சாதா மரணம் என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ வெறியர்கள் ஆங்காங்கே சாதாரணமான முறையில் இறக்கும் இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு இது துவக்கமெனலாம்
முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மோடி ஆட்சியின் கீழ் அவுரங்கசீப் சாலை, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கீதையை படிக்கும் கலாமை அவர்கள் ‘முன்னுதாரணமான’ முசலீமாக முன்னிறுத்துவதால் இதுவும் கூட ஒரு வகையான இந்துப் பெயர் மாற்றம்தான்.
மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் காவிமயமாக்கம் கனஜோராக நடந்து வருகிறது. முஸ்லிம்கள் வந்தேறிகள் என்றும் ஆரியர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றும் வரலாற்றை கபடத்தனமாக மாற்றி எழுதும் சங்கி மங்கிகளுக்கு “ஆரியர்கள்தான் வந்தேறிகள்” என மொழியியல், மரபணு மற்றும் ராக்கிகர்ஹி (Rakhigarhi) தொல்லியல் ஆய்வுகள் ஆப்படித்துள்ளன. இருப்பினும் பொய்தானே காவி பயங்கரவாதத்தின் மூலதனம்!
– வினவு செய்திப் பிரிவு
படிக்க : After 156 Years, Mughalsarai Station Renamed Deen Dayal Upadhyay