இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று மழைக்காலம் கேரளாவிற்கு தாங்கவொண்ணா துன்பத்தை அளித்திருக்கிறது. ஒரே நாளில் 26 பேர் மரணம். ஒரே நேரத்தில் 27 அணைகள் திறப்பு! இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டிருப்பது வரலாற்றில் முதன்முறை!
வயநாடில் பெய்த கனமழை அங்கிருக்கும் சாலைகளை அடித்துச் சென்றிருக்கிறது. ஆகஸ்டு 12 வரை மழை வெள்ள மரணம் 37 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 14 மாவட்டங்களில் உயர்நிலை எச்சரிச்சை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணனூர், வயநாடு மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,500 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களுக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெள்ளப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலை. மண் சரிவு, மழையால் பல நூறு வாகனங்கள் சேதம்! 10,000 கி.மீட்டர் சாலைகளும் சேதம்!
இந்தியாவிலேயே நெருக்கமான மக்கள் குடியிருப்பைக் கொண்ட மாநிலம் கேரளம். அதனாலும் சேதம் அதிகரித்து வருகிறது. அதே போன்று ஆண்டு தோறும் அங்கு பெய்யும் மழைப்பொழிவும் அதிகம். இப்போதோ பெருமழை, பெருத்த சேதம்.
வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் பினரயி விஜயன், 1,200 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமெனவும், உடனடியாக 400 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு மக்கள் போகவேண்டாம் என அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் மனிதாபிமானத்தை பாருங்கள்! அவர்கள் நாட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டுவிட்டு, கேரள மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று கடந்து போகிறார்கள்.

இந்திய அரசோ தற்போதுதான் மனமிறங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பியிருக்கிறது. அவரும் நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்து விட்டார். முதலில் ஒரு 85 கோடி ரூபாய், பிறகு ஒரு 100 கோடி ரூபாய் நிவாரணத்தை ‘மனமிறங்கி’ வழங்கியிருக்கிறார்கள்.
இனி மத்திய அரசின் அதிகாரிகள் குழு மெதுவாக சில பலநாட்கள் கழித்து கேரளா வரும்! வந்து நட்சத்திர விடுதிகளில் டீ, சம்சா சாப்பிட்டு விட்டு சில பல இடங்களை பார்த்ததாக செய்தி வரும். பிறகு கேரளாவிற்கு தேவையான இறுதி நிவாரணம் எப்போது வரும், எவ்வளவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதை வர்தா புயலின் போதே நாம் பார்த்திருக்கிறோம். ஒக்கி புயலின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.
“ஐக்கியத்தின் சிலை” என்ற பெயரில் குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப் போகிறார்கள். உலகின் உயர்ந்த சிலை என்ற சாதனையை நிகழ்த்தப் போகும் இதற்கு செலவு எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ரூ. 2000 கோடி. இதை மத்திய – குஜராத் மாநில அரசுகள் வழங்குகின்றன. வரும் அக்டோபர் 2018-இல் மோடி திறந்து வைக்கப் போகிறார்.
இப்போது சொல்லுங்கள்!
கேரள மழை வெள்ள சேதங்களுக்கான மத்திய அரசின் நிவாரணப் பணியை எப்படி மதிப்பீடுவீர்கள்?
- மிக மோசம்
- மிக நன்று
- பரவாயில்லை
- தெரியவில்லை
ட்விட்டரில் வாக்களிக்க:
டிவிட்டர் Poll : கேரள மழை வெள்ள சேதங்களுக்கான மத்திய அரசின் நிவாரணப் பணியை எப்படி மதிப்பீடுவீர்கள்?
— வினவு (@vinavu) August 13, 2018
யூடியூபில் வாக்களிக்க:
https://www.youtube.com/user/vinavu/community
ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:
- வினவு செய்திப் பிரிவு