மோடி- எடப்பாடி அரசுகளே வாழ்வுரிமையைப் பறிக்கும் பயங்கரவாதிகள்!

திருமுருகன் காந்தியை விடுதலை செய்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி அவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்  (UAPA) 13 (1) (b) பிரிவின் கீழ் கைது செய்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தின் எடுபிடி அதிமுக அரசு டெல்லியின் நேரடி ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதற்கு இது இன்னொரு சான்று.

சென்ற ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. இந்த மாதம், பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த படுகொலைக்கு எதிராக ஐ.நா வில்  பேசியது குற்றமல்ல என்றும் அவரை காவலில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறி நீதித்துறை நடுவர் விடுவித்தவுடனேயே, அனுமதி இல்லாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றதாகக் கூறி ஒரு பழைய வழக்கில் அவரை மீண்டும் கைது செய்தனர். இன்னும் பழைய வழக்குகள் அனைத்திலும் கைது செய்தாலும் பிணையில் வெளியே வந்துவிடக்கூடும் என்பதால், அவ்வாறு வரமுடியாமல் தடுப்பதற்காகவே UAPA சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பயங்கரவாதத்தை அடக்குவதற்கு என்று சொல்லி கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் எப்படி ஜனநாயக உரிமைக்காகப் போராடுவோர் முதல் சிறுபான்மை மக்கள் வரை அனைவர் மீதும் ஏவப்பட்டதோ அவ்வாறே UAPA சட்டமும் தற்போது ஏவப்படுகிறது.

குறிப்பாக வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு எதிராகவும், இவற்றைத் திணிக்கின்ற பாஜக அரசுக்கு எதிராகவும் போராடுகின்ற இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் நசுக்குவதன் மூலம் மட்டுமே தமிழகத்தில் இத்திட்டங்களை அமல்படுத்த முடியும் என்று மத்திய உளவுத்துறை, ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்ற புதியதொரு விளக்கத்தை பாஜக-வின் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கூறிவருகிறார். அதை மோடியும் வழிமொழிந்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எதிர்த்துப் பேசிய திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டம் ஏவப்படுகிறது.

அச்சுறுத்தி அடக்கி விடலாம் என்பதுதான் இந்தக் கைது நடவடிக்கைகளின் நோக்கம்.  அந்த நோக்கத்தை முறியடிப்போம். திருமுருகன் காந்தியின் விடுதலைக்கு குரல் கொடுப்போம். மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் காவி – கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம். ஊபா சட்டம் உள்ளிட்ட அனைத்து கருப்பு சட்டங்களையும் நிரந்தரமாக அகற்றப் போராடுவோம்.

மருதையன்

பொதுச்செயலர்,  மக்கள் கலை இலக்கியக் கழகம்.