மனுஷ்ய புத்திரன்

னிதாவின் மரணத்திற்கு
இன்றோடு ஒரு வயதாகிறது
அனிதாவின் மரணத்தின்
முதல் பிறந்த தினத்தில்
ஆயிரம் இரவுகளைப் பிழிந்த
அடர் கறுப்பு வண்ணத்தில்
புத்தாடை வாங்குகிறோம்
ஆயிரம் கசப்புகளின்
சாரத்தாலான
பிறந்த நாள் கேக் ஒன்றை வாங்குகிறோம்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
மெளனமாக நம்மையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
நம் கையாலாகாததனத்தை
கேலி செய்வதுபோல
ஒரு வறண்ட புன்னகையை உதிர்க்கிறது
நீதியின் தந்திகள் அறுபட்ட வீணைகளிலிருந்து
சிலேட்டில் ஆணியால் எழுதுவது போன்ற
சங்கீதங்கள் எழுகின்றன
என் பற்கள் கூசுகின்றன
அதிலிருந்துதான் நாம் அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தின வாழ்த்துப் பாடலை
இசைக்க இருக்கிறோம்

பத்ம வியூகத்தில்
அபிமன்யுவை கொன்றதுபோலவே
அனிதாவைக் கொன்றீர்கள்
நீங்கள் தந்திரமாக
உருவாக்கிய சக்கர வளையங்களை உடைக்க
கடைசிவரை போராடினாள்

கடைசியில் மலைமுகட்டில் மோதி
உயிரைவிடும் ஒரு பறவைபோல
தன்னை அழித்துக்கொண்டாள்
அது துரோகத்திற்கு எதிரான
கடைசி எதிர்ப்பு
அது அநீதிக்கு எதிரான
கடைசிக் கண்டனம்
வரலாற்றின் அரண்களை
தாண்ட முயன்றவர்கள்
வரலாற்றின் பலிபீடங்களில்
ரத்தம் சிந்துகிறார்கள்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
ஒரு குழந்தை வளர்வதுபோல
நம் நெஞ்சில் வளர்கிறது
ஒரு குழந்தையைவிட வேகமாக வளர்கிறது
ஒரு வனத்தில் மூண்ட நெருப்பைவிட வேகமாக வளர்கிறது

அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தினத்தில்
அதற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?
ஒரு ஸ்டெதாஸ்கோப்?
ஒரு ரத்த அழுத்தம் அளக்கும் கருவி?
ஒரு சிரிஞ்ச்?
ஒரு அறுவை சிகிட்சை கத்தி?
ஒரு பிரிஸ்க்ரிப்ஷன் காகிதம்?
இல்லை
தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்
அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்
அன்று கொல்லும் அரசை நின்றுகொல்லும் ஒரு முழக்கம்
நீதியின் இருண்ட வீட்டில் ஏற்ற ஒரு விளக்கு
சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்
அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க