நீதிமன்றங்களின் சமீபத்திய தீர்ப்புகள்:

தீர்ப்பு 1: இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் (தலை கவசம்) அணிய வேண்டும்.

தீர்ப்பு 2: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் நின்று செல்வதால் நேரம் விரயம் ஆகிறது. அதனால் நீதிபதிகளுக்கும் மற்ற விஐபி-களுக்கும் தனி வழி அமைக்க வேண்டும்.ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உள்ளபடியே நல்ல எண்ணம்தான். இரு சக்கர வாகனம் ஓட்டும் சாதாரண மக்களின் உயிர்களை காக்க நல்ல எண்ணத்துடன் சொல்லப்பட்ட தீர்ப்பு தான். ஆனால் நீதிமன்றங்கள் யாரை ஒழுங்குபடுத்துவதில் வேகமாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டியது.

பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் பேருந்தில் பயணம் செய்வதில்லை. படிக்கட்டுகளில்தான் பயணிக்கின்றனர்

எந்த நகரத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். பள்ளிகள் கல்லூரிகள் துவங்கும் நேரத்தில் பள்ளி கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகள் நிரம்பி வழியும். மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் படிகளில் பயணம் மேற்கொள்வதைப் பார்க்கலாம். அரசு பேருந்துகளில் மட்டுமல்ல, தனியார் பேருந்துகளிலும் இப்படித்தான் செல்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு செல்வது மட்டுமல்லாமல், இப்படி செல்வதால் விபத்துகளும் நடப்பதுண்டு.

இதே போல மழைக் காலங்களில் சாலைகள் பழுதடைந்து சரி செய்யப் படாமல் விபத்துகள் நிகழ்ந்து அதிலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதும் ஆண்டுதோறும் நடக்கும் விடயம் தான்.

நீதிபதி ஹெல்மெட்டுக்கு மட்டுமே கவலைப்படுவார்.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இருப்பதுபோல பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. அதிகம் ஏற்றிச் சென்றால் அதற்கேற்ற தண்டனையையும் சட்டம் கூறுகிறது.
ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த இருக்கும் முனைப்பும் வேகமும் அதிக பயணிகள் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏனோ இருப்பதில்லை. இரண்டு சட்டங்களும் பின்பற்றப்படாததாலும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால் ஒரு சட்டம்தான் அவர்களுக்கு முக்கியமாக தோன்றுகிறது. இதனால் நமக்கு புரிவது என்ன?

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு: “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி (பூசாரி)”.

உத்தரவுகளும் சட்டங்களும் எளியவர்களுக்கு மட்டும்தான் போல. அரசுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ எந்த சட்டமும் அமல்படுத்தப்படுவது இல்லை. ஏன் என்ற கேள்வியை யார் கேட்க முடியும்! கேட்டால் மாண்பு குறைந்துவிடும். அவமதிப்பாகி விடும்.

வேகமாக தீர்ப்பளிப்பதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம்.

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு :

கடந்த 2017-ம் ஆண்டு, செப்டெம்பர் 19, 20-ல் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி 2018-ல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. பிறகு அந்த தீர்ப்பு ஜூன் 2018-ல்தான் வருகிறது. கடந்த 2018 ஜூலை இறுதியில் மூன்றாம் நீதிபதி முன் வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி. பழைய ’சாதனைகளின்’படி பார்த்தால் டிசம்பர் அல்லது ஜனவரி 2019-ல்தான் தீர்ப்பு வரும். சாதாரணமாக யாரைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பதில் சொல்லக்கூடிய ஒரு கேள்விக்கு ஒரு வருடம் ஆகியும் இன்னும் பதில் இல்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் நடக்க வேண்டியது. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று வழக்கு தொடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 2018 ஆகப் போகிறது இன்னும் தேர்தல் நடத்தியபாடு இல்லை.

18 எம்.எல்.ஏ-க்கள் இல்லை, அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவில்லை. இவை அனைத்துக்கும், தேர்தல் ஜனநாயகம் கிட்டத்தட்ட அனைத்து நிலைகளிலும் செயல்படாமல் இருப்பதற்குக் காரணம், வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருப்பதுதான்.

ஜெயா வழக்கு :

1996-ல் சுப்பிரமணிய சாமி ஜெயாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். 1991-96 ஜெயா முதல்வராக இருந்தபொழுது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது வழக்கு. 2000 வாக்கில் முதல்முறையாக தீர்ப்பு வருகிறது. அதனால் 2001 தேர்தலில் வெற்றி பெற்றும் முதல்வராக முடியாமல் (பின்னாள்) தர்மயுத்த நாயகன் முதல்வர் ஆகிறார்.

பிறகு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பல கூத்துகளுக்கு பிறகு, 2014-ல் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கிறது. உடனே மேல்முறையீடு. சில நாட்களில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்குகிறது.
பிறகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, ஜெயா கடந்த 2016-ல் இறந்த பின்னர் 2017-ல் இறுதித் தீர்ப்பு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா இல்லையா என்று தீர்ப்பளிக்க 20 ஆண்டுகள். இந்த 20 ஆண்டுகளில் அவர், மூன்று முறை முதல்வர் ஆகி, பிறகு இறந்தே போய்விட்டார். ஆனால் சொத்து சேர்த்தாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைப் போன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்ப்பளிக்க விரைவாக செல்லவேண்டி உள்ளது. சுங்கச்சாவடிகளில் எல்லாம் நின்றால் நேரம் விரயமாகிறது. அதனால்தான் தனி வழி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் பற்றி மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும், இது ஆள்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும். எத்தனை சலுகைகள், எத்தனை சிறப்பு வழிகள்!

எங்கோ படித்தது – ‘சாலைகளில் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் வாகனங்களில் உள்ள வேகம் ஏனோ அவர்கள் செய்யும் செயல்களில் இருப்பதில்லை, ஆட்சியில் இருப்பதில்லை!’

நன்றி : Arun Karthik முகநூல் பக்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க