பீமே கோரேகான் சம்பவத்தை சாக்கிட்டு அறிவுத்துறையினர் மீது அடுத்தடுத்த அடக்குமுறைகள் ஏவப்படும் இந்தச் சூழலில், ”அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் அரங்கக் கூட்டத்தினை நடத்தியது, மக்கள் அதிகாரம்.

செப்டம்பர் – 08 அன்று மாலை, சென்னை நிருபர்கள் சங்கத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவாவைச் சேர்ந்த, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச்செயலர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே, பி.யு.சி.எல். தமிழ்நாடு – புதுவை மாநிலத்தின் பொதுச்செயலர் பேராசிரியர் முரளி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டு சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தினர்களின் உரையின் இறுதியில், கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஆனந்த் தெல்தும்டே, தோழர் மருதையன், தோழர் தியாகு, தோழர் ராஜூ ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்த அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகளை கீழே தொகுத்தளிக்கிறோம். உரைகள் வீடியோ பதிவாக விரைவில் வினவு தளத்திலேயே வெளியிடப்படும்.

தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

இந்தியா முழுக்க பத்திரிகையாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது மிகவும் அதிகமாகி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி தான் பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேடல் தொடங்கப்பட்டது. அதில் ஒன்று தான்  ஆனந்த் தெல்தும்டே வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மதிக்கப்படக்கூடிய பல நபர்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள்.

மோடி இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த, மேக் இன் இந்தியா, சுவட்ச் பாரத்,  பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., என அனைத்து திட்டங்களும் தோற்றுப் போய் விட்டன. நூற்றுக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ். இறக்கி உள்ளது. இவர்கள் மூலம் தான் கொலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கெளரி லங்கேஷ், தபோல்கர் போன்றவர்கள் ஒரே துப்பாக்கியால் தான் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையும் கர்நாடக புலனாய்வு துறை தான் கண்டு பிடித்து சொன்னது. வட இந்தியாவில் செயல்பாட்டாளர்கள் அனைவருமே ஒடுக்கப்படுகிறார்கள். உணர்வுப் பூர்வமாக போராடும் மக்கள் மத்தியில் நாம் அறிவு பூர்வமாக, அறிவியல் பூர்வமாக எடுத்துச் சொல்லும் போது போராட்டம் தீவிரமடைகிறது. வரலாற்றுப் பூர்வமான தகவல்களை சொல்லும் போது மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100 வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். அந்த 99 நாளும் அரசு எப்படி கலவரத்தை போராட்டத்தில் உருவாக்கலாம் என்று சிந்தித்து திட்டமிட்டு 100 வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி. பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு. கருத்துரிமைக்கு தடை.

மக்கள் அதிகார பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல வழக்கு உள்ளது  மேலும் உங்களை அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைத் தான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

பேராசிரியர் முரளி, பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை.

இது ஒரு அர்த்தமுள்ள நிகழ்வு. ஏன் இது போன்ற கைது என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரேகான் நிகழ்ச்சியில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்தப் பிரச்சனையை உருவாக்கியது இந்து தீவிரவாதம் தான். 3 மாதங்களுக்கு மட்டும் 22 பேர் UAPA-உபாவில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர். அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற் காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன்; பேசுவேன்; என்றதற்கு என் மீது வழக்கு. ஆர்.எஸ்.எஸ் – இன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களை கொண்டுதான் கொலை செய்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை கடைபிடிக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. நீதிமன்றத்திலும் நமக்கு கழுத்தறுப்பு. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதி மன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். சிறைச்சாலைகளை நாம் நிரப்ப வேண்டும்.

தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

சொற்களுக்கு பொருள் தேடுவதுதான் அழகான உரை. சிறைச்சாலையில் எனக்கும் ஒருவருக்கும்  நடைபெற்ற ஒரு உரைடாலில், கைதி என்றால் அதற்கான பொருள் தப்பித்து செல்பவன். அதனால் தான் பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர். சுற்றி காவலர்கள். அதே போல் நாட்டின் பிரதமர் என்றால் கொலை முயற்சி மிரட்டல் எல்லாம் இருக்கும். அதற்கு தான் பூனைப் படை, புலிப் படை எல்லாம் இருக்கிறது. ஆனாலும் கொலை செய்து விடுவார்கள் என்றால் எப்படி நடக்கும்? மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்பட்டு இருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால் தான் யாரை பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர். மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள் தான் கொலை செய்தார்கள். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகள். அந்த வகையில் தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது. இந்தியாவில் 5 பேர் இல்லப்பா 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்கு பெருமை. மக்கள் அதிகாரம் முன் எடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக ஆதரவாக நிற்கும்.

தோழர் மருதையன், மாநில பொது செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்.

உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் பா.ஜ.க. ஆட்சி ஒழிக என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2 வது பயம் தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது  வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் பதிலும் இல்லை. பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். இவர்களுக்கு மரண அடி நாம் கொடுக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு போனாலே தெரியும் எப்படி பொய் வழக்குகள் ஜோடிப்பது என்று அது போல் தான் முற்போக்காள‌ர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு இவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை இவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகள். பின்னர் அதுவே பழகிவிட்டது. இதனால் தான் போர்க்குணமிக்க போராட்டம் இல்லை.

அவசர நிலை என்பது இந்திரா ஆட்சி காலத்தில் கட்டாயமாக திணிக்கப்பட்டது. அனால், அந்த அவசர நிலையே இன்று நமக்கு பழக்கமாக்கப்படுகிறது. தமிழிசையை அச்சுறுத்தியது கேளாத செவிகள் கேட்கட்டும் என்பதுதான். இது தான் சோஃபியாவின் குரல். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத் தனத்திற்கு செல்வோம். அனைவரின் குரலும் ஓங்க வேண்டும்” என்று எளிமையாக புரிய வைத்தார்.

ஆனந்த் தெல்தும்டே, பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா.

நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி.-க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் காலத்தின் கட்டாயத்தில் செய்தார்கள். இவர்கள் திட்டமிட்டு இந்துமயம் ஆக்க வேண்டும் என்று  செய்கிறார்கள். பீமா கோரேகானிலும் இவர்கள் தான் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டினார்கள். சிவாஜி சமாதியில் இருந்து தொடங்கினார்கள். உள்ளூர் மக்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த நினைத்தார்கள். ஆனால், ஊர் மக்கள் கூடிப் பேசி இதற்கு இவர்கள் தான் காரணம் என்று தெரிந்த உடன், மக்கள் இந்துத்துவா சக்திகளை எதிர்க்க ஆரம்பித்தனர்.  அங்கு இவர்களால் திட்டமிட்டு கலவரம் ஆக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு பணம் தருவது என்று பொய் சொல்லி கைது செய்கிறார்கள். அவர்களின் கணினிகளை கைப்பற்றுவதுதான் இவர்களின் முதல் நோக்கம். அதன் மூலமே பொய்யான கடிதங்களை தயாரித்து இவர்களே வெளியிட்டு கைது செய்வார்கள். இதை எங்கு வந்து வேண்டுமானாலும் நான் சொல்லத் தயார். முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் இதை கண்டித்து உள்ளனர். நாம் தனித்தனியாக போராடாமல் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்” என்று கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க