ந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீரில் இந்திய இராணுவ வீரர்கள், காஷ்மீர் கிளர்ச்சியாளர் ஒருவரின் அரை நிர்வாண உடலை இழுத்துச் செல்லும் ஒளிப்படம் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்துத்துவ டேஷ் பக்தர்கள் கொக்கரிப்போடு அந்தப் படத்தை பகிர்ந்திருந்தனர். உண்மையில், இந்திய இராணுவ வீரர்களும்கூட அதே கொக்கரிப்போடு அந்தப் படத்தில் காட்சியளித்தனர். இந்திய இராணுவத்தின் மனிதத்தன்மையற்ற செயலுக்குப் பலர் சமூக ஊடகங்களில் எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர்.

ஜம்முவின் தெற்குப் பகுதியான கத்ரியால் வனப்பகுதியில் செப்டம்பர் 13-ஆம் தேதி இந்திய இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. ஏழு மணிநேரம் நீடித்த இந்தச் சண்டையில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

சண்டை முடிந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் உடலை கைப்பற்றிய இந்திய இராணுவத்தினர் உடலை அரை நிர்வாணமாக்கி, கால்களில் சங்கிலி கட்டி இழுத்துச் சென்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. மனித உரிமை ஆர்வலர்கள் இதை காட்டுமிராண்டித்தனமான செயல் என தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

“இறந்துபோன கிளர்ச்சியாளரின் உடலை கையிற்றால் கட்டி இழுக்கும் இராணுவ வீரர்களின் அவமரியாதையான செயல்பாடு, வெளிப்படையாக வன்முறையை தூண்டும்படி உள்ளது” என்கிறார்  அமெரிக்காவை தலையகமாகக் கொண்டு செயல்படும் ஒரு மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மீனாட்சி சங்குலி.  “இந்திய இராணுவத்தின் மோசமான பயிற்சி முறையையும் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் தன்மையையும் இது காட்டுகிறது” என்கிறார் மீனாட்சி.

இந்தியா கையெழுத்திட்டுள்ள ஜெனிவா அமைதி ஒப்பந்தத்தில் ‘மோதலின் போது உயிரிழக்கிறவர்களின் உடலை சிதைக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“இறந்தவர்களுக்குக்கூட காஷ்மீரில் மரியாதை இல்லை” என்கிறார் உள்ளூர்வாசியான முபாஷிர் நசீர். “இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இது வெளி உலகுக்கு காட்டுகிறது” என்கிறார் அவர்.

பஜ்ரங்தள் காவிவெறிக் கும்பலைச் சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர், இறந்த கிளர்ச்சியாளரின் உடல் பின்னணியில் இருக்க செஃல்பி எடுத்து கொக்கரிப்போடு வெளியிட்ட படமும் சமூக ஊடகங்களில் வெளியானது.

கிளர்ச்சியாளர்களின் உடலை மனிதத்தன்மையற்ற முறையில் சிதைத்து, தெருவில் இழுத்து வந்த இராணுவ வீரர்களின் செயலை இராணுவம் எப்படி பார்க்கிறது?

“இதையெல்லாம் பேசுபொருளாக ஏன் மாற்றுகிறீர்கள். அவர்கள் எதற்காக வந்தார், அவருக்கு கிடைத்திருப்பது சரியானதுதான்” என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.  இராணுவ வீரர்கள் இறந்தவரின் உடலை இழுத்து வருவது வழக்கமான நடைமுறையே என்கிறார் இவர்.  கிளர்ச்சியாளர்கள் உடலில் ஏதேனும் வெடிபொருட்களை வைத்திருக்கலாம் என்பதால் ‘பாதுகாப்பு’ கருதி இழுத்து வந்தார்களாம்.

கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்தப் பகுதியில் நடந்து வரும் வன்முறைகளில் இந்திய ராணுவம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“இந்திய இராணுவம் வழக்கமான முறையில் சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறது. போரில் மாண்டவர்களின் உடலை பாதுகாப்பது, அதற்குறிய மரியாதை தரவேண்டும் என சர்வதேச மனிதநேய சட்டங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.” என்கிறார் காஷ்மீரில் செயல்படும் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ்.

“கடந்த 28 ஆண்டுகளாக காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் இராணுவ வீரர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் வெறுப்பையும்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது. எல்லா நேரங்களிலும் இது பதிவாவதில்லை. புல்வாமாவில் கடந்த ஆண்டு நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மூன்று கிளர்ச்சியாளர்களின் உடலை எரித்தார்கள்” என்கிறார் பர்வேஸ்.

காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே நடந்து வரும் சண்டையில் கடந்த வாரத்தில் மட்டும் 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 90களிலிருந்து நடந்து வரும் சண்டையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  இந்த இடம் தங்களுக்கே சொந்தமானது என பாகிஸ்தானும் இந்தியாவும் கோரிக்கொள்கின்றன. இந்த இடத்தை முன்வைத்து மூன்று போர்களும் மூண்டிருக்கின்றன. பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் இந்தப் பகுதி பாகிஸ்தானுடன் சேர்க்கப்படவேண்டும் அல்லது சுதந்திரமான தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என கேட்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை கவுன்சில் அளித்த அறிக்கையை முதன்முறையாக இந்தியா நிராகரித்தது.

– வினவு செய்திப் பிரிவு

செய்தி மூலம்: Outrage after photo of soldiers dragging Kashmir rebel’s body

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க