”உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்” என்ற தலைப்பில் கடந்த செப்-18, அன்று கரூர் – தாந்தோன்றிமலை பத்மசாலியர் மண்டபத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்குகூட்டம் நடைபெற்றது.

நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுகட்சியைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளின் பங்கேற்போடு நடைபெற்ற இந்த அரங்கக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய தோழர் சிவா, தனது உரையில் ”உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டு வந்து  ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை கலைப்பதுதான் மோடி அரசின் நோக்கம் அடிப்படை கல்வியை கூட மாணவர்கள் கற்க கூடாது என்பதற்காகத்தான் இந்த யு.ஜி.சி கலைப்பு” என்பதை அம்பலப்படுத்தினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்தர் பேசுகையில், ”உயர்கல்வி ஆணையம் வந்தால் காசு இருந்தால்தான் கல்வி இனிமேல் இலவச கல்வி கிடையாது குலகல்வி முறைக்கு மாணவர்களை தள்ளுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் இதை தடுக்க ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தை மாணவர்கள் முன் எடுத்தது போல உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் தனது உரையில், ”கல்வி பிரச்சினையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உயர்கல்வி ஆணையத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி இருப்பது வரவேற்க்கதக்கது. இந்த திட்டம் மாணவர்களின் படிப்பே இல்லாமல் ஆக்ககூடியது இத்திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் சிந்தித்து போராட வேண்டும்” என்றார்.

திராவிட மாணவர்கழகத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் அஜித்தன், தனது உரையில், ”வரலாற்றுரீதியாக தமிழர்கள் சாதி ரீதியாக மதம் ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள். இதை அம்பேத்கர் பெரியாரின் போராட்டங்கள் மூலமாக தமிழர்கள் கல்வியறிவு பெற்றனர். உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டுவந்து மீண்டும் பழைய மனுநீதி நிலைக்கும் பார்ப்பனிய சூழ்ச்சிக்கு தள்ளுகிறது மோடி அரசு” எனச் சாடினார்.

இறுதியாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருக்கிணைப்பாளர் தோழர் த.கணேசன், தனது கண்டன உரையில், ”10 வது ,11-வது, 12-வது பொதுத்தேர்வில் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அரசு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் ஆகியும் பாடபுத்தகங்கள் கிடைக்கவில்லை ஆனால் தனியார் பள்ளியில் பாட புத்தகங்கள் கிடைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர். பிறந்த குழந்தைகளை இரண்டரை வயதிலே பெற்ற்றோர்கள் ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி., என தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் உங்க பசங்களா நீங்க டாக்டர் ஆக்க போறிங்களா ? இல்ல  கலெக்டர் ஆக்க போறிங்களா ? என கேட்டு அதற்கு நாங்க தனியாக கோச்சிங் தர்றோம் என சொல்லி ஐம்பதாயிரம், ஒரு  இலட்சம் என கட்டணம் வாங்கறாங்க என பேசினார். கல்வி சீர்கேடுகள், பல்கலைகழக முறைகேடுகள் நிர்மலாதேவி போன்ற பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி பேசினார். உயர்கல்வித்துறை முழுக்க முழுக்க தனியாரிடம் கொண்டு போவதே உயர்கல்வி ஆணைய மசோதா என மாணவர்களுக்கு புரியும்படி எளிமையாகவும் பல உதாரணங்களுடனும் பேசினார்.

கூட்டத்தின் இடையே, ம.க.இ.க. கலைகுழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரமாக உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு எதிரான பிரச்சார இயக்கத்தையும் நடத்தியிருந்தது பு.மா.இ.மு.

குறிப்பாக, கரூர் அரசுக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேனீ, மதுரை, பழனி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து படிக்கின்றனர். தங்களின் கல்விச் செலவிற்காக, கேட்டரிங் சர்வீஸ், மளிகை கடை, டெக்ஸ்டைல்ஸ் என கிடைத்த வேலைக்கு பகுதி நேரமாக பணியாற்றிக்கொண்டே படிக்கின்றனர். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வே தங்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக கருத்து தெரிவித்த இம்மாணவர்கள், ”உயர்கல்வி ஆணைய மசோதா அமலாகி, அரசு கல்லூரிகளை இழுத்து மூடும் நிலைமை ஏற்படும்போது எங்களால் நிச்சயம் படிக்கமுடியாது” என்றனர். மாணவர்களின் கருத்தை அக்கல்லூரி பேராசிரியர்களும் ஆதரித்ததோடு, மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் இம்மசோதாவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் ஆதரவளித்தனர்.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க