சென்னை மாதவரம் தேசிய நெடுஞ்சாலை. சரக்கு போக்குவரத்து வாகனங்கள் எப்பொழுதும் அடர்த்தியாக சென்று கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான மாலை நேரம்.. மஞ்சள் வெயிலின் வெளிச்சத்தை இருட்டு விழுங்குவதற்கு இரண்டு மணி நேரமே இருந்தது… அந்தச் சாலையின் ஓரத்தில் பல்வேறு கடைகள் இருந்தாலும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்திருந்தது ஒரு கடை.அலுமினிய தகடால் ஆன அஸ்பெஸ்டாஸ் சுவருக்கு முன் இரண்டு கழிகளை நட்டு அதன் மேல் தென்னங்கீற்றைப் போட்டு சுட்டெரிக்கும் வெய்யிலிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஒரு குடிசை அமைத்திருந்தனர்.
நீண்ட வரிசையில் பீங்கானால் செய்யப்பட்டயானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்அழகாக நேர்த்தியானமுறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில், ராஜஸ்தான் மாடல் குவளைகள் அதிகம் இடம் பிடித்திருந்தன. அதேபோல், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு அச்சு மூலம் செய்யப்பட்ட, கிருஷ்ணர், சரஸ்வதி உள்ளிட்ட சாமி சிலைகள் என அனைத்தும் கலைநயத்துடன் செய்து அடுக்கி வைத்திருந்தனர்.குடிசைக்குள், ஒல்லியான தேகம் கொண்ட ஒருவர் கண் திருஷ்டி பொம்மைக்கு வண்ணம் தீட்ட, அவருக்கருகில் ஐம்பது வயதைக் கடந்த பெண்மனி தூரிகையின் உதவியோடு உயிரற்ற ஆக்ரோஷமான அந்த திருஷ்டி பொம்மைக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார். தூரிகையை பிடித்து அவர் சுழற்றும் லாவகத்திலிருந்தே அவருடைய திறமையை புரிந்து கொள்ள முடியும்.
அவருக்கு எதிரில் நான்கைந்து சிறுவர்கள், ”இந்த ஒரெயொரு முறை மட்டும் பிள்ளையார் சிலை செஞ்சிக் கொடுங்கக்கா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். அவர்களை நிமிர்ந்துகூட பார்க்க நேரமில்லாமல், ”என்கிட்ட கேக்காதிங்கடா… போயிட்டு ஸ்டேசனுல அனுமதி வாங்கிட்டு வாங்கடா” என்று அச்சிறுவர்களை விரட்டினார். எவ்வளவோ அவர்கள் கேட்டும் தன் நிலையில் உறுதியாக இருந்தார் அவர்.ஒரு வழியாக அச்சிறுவர்கள் சென்ற பிறகு…. பேசத் தொடங்கினார் லட்சுமி.
“என்னோட சொந்த ஊர் ராஜஸ்தான். எங்க அப்பா அம்மா காலத்துல இருந்து இந்த தொழில் தான் செஞ்சிட்டு இருக்கோம். இருபத்தி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுக்கு வந்தோம். என்னோட கணவர், கணவரின் தம்பி’ன்னு குடும்பமே இந்த தொழிலை நம்பித்தான் இருக்கு.எனக்கு மூனு பசங்க இருக்காங்க… எல்லாம் ரெட்டேரியில இருக்க தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.

என்னோட தங்கச்சி குடும்பம் ஆந்திராவுல இருக்கு. அவங்களும் இதே தொழிலைத்தான் செய்யுறாங்க. இப்ப அவளுக்கு டெலிவரி ஆகியிருக்கு. என்னோட கணவர் கொழந்தைய பார்க்க போயிருக்காரு.
இங்க வந்த புதுசுல இந்த கண்திருஸ்டி பொம்மை மட்டும் தான் செஞ்சிட்டு இருந்தோம். அப்புறம் போக போக கிருஷ்ணர், சரஸ்வதி, கொலு பொம்மைகள் வரைக்கும் நாங்களே செய்து விக்க ஆரம்பிச்சிட்டோம். இப்ப பீங்கான் பொருட்களை வாங்கிட்டு வந்து விக்கிறோம். இதெல்லாம் பாரீஸ் போயிட்டு வாங்கி வருவோம். முன்னாடி மாதிரி வியாபாரம் எதுவும் இல்ல.
மாசம் 30 பீஸ் செய்வோம். தயாரிப்பு செலவும் கூடிடுச்சி. இந்த திருஷ்டி பொம்மை மட்டும் வீட்டுக்கு வாங்கிட்டு போவாங்க. ஒரு பொம்மையோட வெல 150,200,350 ரூபா வரைக்கும் இருக்கு…. இதையே குறைச்சிதான் வாங்கிட்டு போவாங்க… கிருஷ்ணர் சிலை, சரஸ்வதி சிலை எல்லாம் 1000 ரூபா. ஆனா யாரும் அந்த விலைக்கு வாங்க மாட்டாங்க. 600 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுத்துவேன். இதை ஸ்டாக் பண்ணி வச்சி என்ன பண்றது?
இந்த வேகாத வெய்யிலுல வந்து வெந்துகிட்டிருக்கோம். காலையில பத்து மணிக்கு சாப்பிட்டா அதோட நைட்டு பத்து மணிக்கு தான் சாப்பிடுவோம். மதியம் கிடையாது. அதுவும் சப்பாத்தி மட்டும் தான். அரிசி சோறு சாப்பிடுறது எங்க கலாச்சாரத்துல இல்ல. அதனால இதுவரைக்கும் சாப்பிட்டதும் இல்ல. வருஷத்துக்கு ஒரு முறை ஊருக்கு போயிட்டு வருவோம்.
ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் செஞ்சி விப்போம்.. கொஞ்சம் வருமானம் இருந்துச்சி. ஆனா, இந்த வருஷம் மட்டும் செய்யல. போலிசு செய்யக்கூடதுன்னு சொல்லிட்டதால வருமானம் எல்லாம் போயிடுச்சி. அது மட்டும் தான் கொஞ்சம் கைகொடுத்துச்சி. இப்ப அதுவும் இல்ல…” என்கிறார் சோகமாக.
இன்றைய நவீன யுகத்தில் கைவினைப் பொருட்களின் மீதான ஆர்வம் குறைந்ததற்கு முக்கிய காரணம், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வார்க்கப் பட்ட அச்சுப்பொருட்கள் மிக எளிதாக கிடைக்கின்றன.வரை வீடுகளுக்கு அதேபோல் கலை ரசனை என்பது மேட்டுகுடியினர் வாழ்வியல் சார்ந்து இருப்பதால் சாலையோர வியாபாரிகள் பக்கம் அவர்கள் கவனம் திரும்புவது கிடையாது.
சாதாரன மக்கள் கலை சார்ந்த ரசனையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பாகவே அவர்கள் இதனை வாங்குவது மிக்ககுறைவு என்பதால் இத்தொழிலை நம்பி வாழ்பவர்கள் மிக எளிதாக வீழ்ச்சியடைந்து விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்..!
– வினவு புகைப்படச் செய்தியாளர்.