Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

-

பந்தய மூலதனம் – 5

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ரி, பங்குச் சந்தையில் கோடிகளில் புரளுகிறது பந்தயப் பணம். அத்தனை லட்சம் கோடி பணமும் எதன் மேல் பந்தயம் வைக்கப்படுகிறது? ஒரு பொருளை (அல்லது சேவையை) செய்து விற்பதில், அல்லது வாங்கி விற்பதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் அல்லது அப்படி தொழில் செய்பவர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும்.

அதனை  பங்குதாரர்களுக்கு  ஈவுத் தொகையாக அல்லது போனஸ் பங்காக  அல்லது  பங்குகளை வாங்குவதன் மூலம்   பிரித்துக்  கொடுக்க வேண்டும். அதை எதிர்பார்த்து பங்கு விலை அதிகரிக்கும் என்று பந்தயம் கட்டப்படுகிறது

லாபம் எப்படி ஈட்டப்படுகிறது. அதற்கான ஒரு எளிய உதாரணத்தை பார்ப்போம்.

நாம் முன்பு பார்த்த நண்பர் பிரகாஷ் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் கிடைத்த ரூ 10 லட்சம் போனசை வைத்து பி.எஸ்.எஸ் (பிரகாஷ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்) என்ற பெயரில் மென்பொருள் செய்து விற்கிறார். மன்னார் அண்ட் கம்பெனியின் புராஜக்ட் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு ஃபோன்,

“சார் நீங்கதான் பி.எஸ்.எஸ் கம்பெனி ஓனரா? மன்னார் அன்ட் கம்பெனிக்கு நீங்கதான சாஃப்ட்வேர் செஞ்சு கொடுத்தீங்க? எங்க கம்பெனிக்கும் இதே போல சாஃப்ட்வேர் வேணும். உடனடியாக எங்க ஓனரை வந்து பாருங்க”

“நீங்க யாரு சார்?”

“நான் செல்லமணி கம்பெனி மேனேஜர் மாசிலாமணி சார். எங்க ஓனர் ராமமூர்த்தி உங்கள உடனேயே பாக்கணும்னு சொல்லிட்டார், எப்ப வருவீங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க”

மன்னார் அன்ட் கம்பெனிக்கு போட்டி கம்பெனி செல்லமணி கம்பெனி. மன்னார் அன்ட் கம்பெனியில் என்ன நடக்கிறது என்று இவர்கள் மோப்பம் பிடித்து காப்பி அடிப்பார்கள். இவர்கள் செய்வதை அவர்கள் மோப்பம் பிடித்து அதே போல செய்வார்கள். சில டஜன் கம்பெனிகள் போட்டி போடும் தொழிலில் இப்படி எல்லாம் துடிப்பாக இருந்தால்தான் தாக்குப் பிடித்து முன்னேற முடியும் என்பதில் ராமமூர்த்தி தெளிவானவர். இப்போது புதுசா ஏதோ சாஃப்ட்வேர் பேச்சு அடிபடுகிறதே என்று ஆளைத் துரத்துகிறார்.

“சரிங்க, நான் அடுத்த திங்கள் கிழமை காலையில் 11 மணிக்கு வந்து பார்க்கிறேன்”.

ராமமூர்த்தி குடும்பம் பழைய காலத்தில் வெல்ல மண்டி நடத்தி பணம் சேர்த்தவர்கள். கரும்பு விவசாயிகள் கரும்புச் சாறை காய்ச்சி கொண்டு வரும் வெல்லத்தை வாங்கி விற்கும் மொத்தத் தொழில் செய்தவர்கள். 30 வருடங்களுக்கு முன்பு அது நலிந்து போவதை புரிந்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தை எதில் போட்டால் லாபம் அதிகம் என்று பார்த்து பிளாஸ்டிக் பொருள் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்துகிறார்கள். மூலதனம் லாபம் குறைவான துறையிலிருந்து லாபம் அதிகமான துறைக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறது.

திங்கள் கிழமை அன்று புதுப்பேட்டையில் ஒரு குறுகலான தெருவுக்குள் மாடியில் இருக்கும் ராமமூர்த்தியின் அலுவலகத்துக்குப் போகிறார் பிரகாஷ்.

பி.எஸ்.எஸ்-ன் மென்பொருள் என்னென்ன செய்யும், எப்படியெல்லாம் உதவியாக இருக்கும், அது பிசினசை எப்படி வளர்க்கும், லாபத்தை எப்படி அதிகப்படுத்தும் என்றெல்லாம் 15 நிமிடங்கள் பேசுவதற்கு தயாரித்துக் கொண்டு போகிறார். பி.எஸ்.எஸ் கம்பெனி பற்றிய விபரங்கள், மென்பொருளிலிருந்து எடுக்க முடியும் மாதிரி அறிக்கைகள், பயன்படுத்தப் போகும் தொழில்நுட்பம் பற்றி விபரங்கள் என்று பக்காவாக ஒரு டாகுமென்ட் செட் தயாரித்து எடுத்துக் கொண்டு போகிறார்.

குறுகலான ஒரு மாடிப்படி ஏறிப் போனால், முதல் மாடியில் ஒரு 1500 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். ராமமூர்த்தி, எம்.டி என்ற பெயர்பலகையுடன் ராமமூர்த்தியின் அறை. சிறிது நேரம் காத்திருந்த பிறகு உள்ளே போகச் சொல்கிறார்கள். கூடவே செல்லமணி கம்பெனியின் பொது மேலாளர் ஒருவரும், கணினி பிரிவின் இன்சார்ஜூம் இருக்கிறார்கள்.

“சார், சாப்ஃட்வேர்ல எனக்கு 15 வருசம் அனுபவம் இருக்கு. இப்பதான் புதுசா கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். மன்னார் அண்ட் கம்பெனிக்கு பிளாஸ்டிக் பொருள் தொழில் சம்பந்தமான சாஃப்ட்வேர் நாங்கதான் செஞ்சு கொடுக்கிறோம். இதில அந்த விபரம் எல்லாம் இருக்கு சார்.”

“அப்படியாப்பா, உங்க கம்பெனில எத்தனை பேரு வேலை செய்றாங்க?”

“அதெல்லாம் கவலைப்படாதீங்க சார், நாலு பேரு இருக்காங்க சார், நானும் இப்போ உங்க புராஜக்ட்-க்காக வேலை செய்யப் போறேன். எல்லாம் கரெக்டா முடிச்சிருவோம்”.

“சரிப்பா, இதுல என்னென்ன வசதி இருக்குன்னு சொல்லு பார்க்கலாம்”. அடுத்த இரண்டு மணி நேரம் விவாதம் போனது. ராமமூர்த்தி டீம் கூடுதலாக சொன்ன பல தேவைகளை பிரகாஷ் குறித்துக் கொள்கிறார்.

“சரிப்பா, இதையெல்லாம் செய்றதுக்கு என்ன செலவாகும்? என்ன விலை சொல்றீங்க?”. விற்கப்படும் பொருள் தனக்கு பலனுள்ளது என்று உறுதி செய்து கொண்ட பிறகு அதற்கான விலையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“சொல்றேன் சார், நீங்க நிறைய புதுசா சொல்லியிருக்கீங்க, அதை எல்லாம் கணக்கு போட்டு பார்த்துட்டு நான் உங்களுக்கு டீட்டெய்லா புரப்போசல் அனுப்புறேன் சார்” என்று புறப்படுகிறார் பிரகாஷ்.

“மன்னார் அன்ட் கம்பெனிக்கு கொடுத்ததை பார்த்து நான் கூப்பிட்ட மாதிரி, செல்லமணி கம்பெனில உங்க சாஃப்ட்வேர வாங்குறோம்னு தெரிஞ்சா இன்னும் பலபேரு வருவாங்க. உங்க பிசினஸ் நல்லா டெவலப் ஆகும்” என்று பிரகாஷை மோட்டிவேட் செய்து அனுப்புகிறார். செய்கிறார் ராமமூர்த்தி.

பிரகாஷ் மூளைக்குள் நிறைய கனவுகள். “ஒரு புராஜக்ட் செய்து முடிப்பதற்கு முன்னாலேயே ஆள் தேடி ஆர்டர் வருகிறது. நாம இன்னும் உஷாரா மார்க்கெட்ல இறங்கினா கம்பெனிய பெருசா ஆக்கிறலாம்” என்று யோசிக்கிறார்.

அடுத்த 2 நாட்கள் விபரமாக கணக்கு போட்டு திட்டம் தயாரிக்கிறார். எத்தனை வேலை நாட்கள், என்னென்ன வேலை என்று நுணுக்கமாக திட்டம் போடுகிறார். 20 வருட மென்பொருள் துறை அனுபவம் கைகொடுக்கிறது. அலுவலகத்தில் நான்கு பேருடன் தானும் இறங்கி வேலை செய்தால் சேர்த்து வேலைகளை முடிக்க 8 மாதங்கள் ஆகும் என்று முடிவு செய்கிறார்.

மாதச் செலவாக அலுவலக வாடகை, தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், போக்குவரத்து செலவு என்று ரூ 50,000. சம்பளச் செலவு 4 பேருக்கும் சேர்த்து ரூ 1 லட்சம், பிரகாஷுக்கு ரூ 1 லட்சம். எல்லாம் சேர்த்தால் மாதம் ரூ 2.5 லட்சம் வீதம் 8 மாதங்களுக்கு ரூ 20 லட்சம் செலவாகும்.

ஆனா, இதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது.

ஒரு வேளை செல்லமணி கம்பெனி சொன்ன தேவைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ, புரிந்து கொண்டதை திட்டமிட்டதில் ஏதாவது இடைவெளி இருந்தால் வேலை இழுத்து விடும். இன்னொரு பக்கம் வேலை யாருக்காவது உடம்பு சரியில்லை, ஏதாவது அவசரமாக லீவு போட வேண்டி வந்தால் வேலை தாமதமாகும்.

வேலை அளவிலும் வேலை செய்யப் போகிறவர்களின் இருக்கும் நிச்சயமின்மையை கருத்தில் வைத்து கூடுதலாக 2 மாதங்கள் சேர்த்துக் கொள்கிறார். 10 மாதங்களுக்கு ரூ 25 லட்சம் செலவு, அதற்கு மேல் லாபத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 20% லாபம் சேர்த்து ரூ 30 லட்சம் என்று விலை முடிவு செய்து ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

ஏன் 20% லாபம்? ஏன் 30 லட்சம் விலை? அதிக விலை வைத்து அதிக லாபம் பார்க்கலாமே? ரூ 3 கோடிக்கு விற்க முடியாதா? ரூ 30 கோடிக்கு? அவ்வளவு லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள்தான் பங்குச் சந்தையில் சக்கை போடு போடுகின்றன. அவர்களும் பிரகாஷ் போல உப்பு, மிளகு, புளி கணக்கு போட்டுத்தான் விலை வைத்து விற்று லாபம் சம்பாதிக்கிறார்களா? விபரமாக வரும் பகுதிகளில் பார்ப்போம்.

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க