Thursday, April 17, 2025
முகப்புசெய்திஇந்தியாமோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

ஐந்து செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்படவில்லை - ஆகவே அவர்கள் தங்களுடைய விசாரணை சரியில்லை என கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

-

ல்கார் பரிசத் வழக்கு என்ற பெயரில், மோடியை கொலை செய்ய சதி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஐந்து சமூக செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இன்றைய (28.09.2018) தீர்ப்பு என்ன? சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட முடியாது என்றும், அவர்களது வீட்டுக் காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கவிஞர் வரவரராவ், வெர்னான் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா ஆகிய ஐந்து சமூக செயற்பாட்டாளர்களை எல்கார் பரிஷத் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தது புனே போலீசு.

“இக்கைது நடவடிக்கை தவறானது. இந்த ஐவருக்கும் எவ்விதமான குற்றவியல் வரலாறும் இல்லை எனும் நிலையில் இவர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது எதிர்க்குரலை நசுக்கும் செயல். எனவே இவ்வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” எனக் கூறி பிரபல வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே, மற்றும் மஜ தருவாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கை கடந்த ஆகஸ்ட் 28 அன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கைது செய்யப்பட்ட ஐவரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அவ்வழக்கில் தீர்ப்பளித்தது. நீதிபதி கான்வில்கர், தீபக் மிஸ்ரா ஆகியோர் இணைந்து ஒரு தீர்ப்பையும், நீதிபதி சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.

”தற்போதைய கைதுகள் வெறுமனே மாற்றுக் கருத்துக்களுக்காகவும், மாற்று அரசியல் கருத்தாக்கங்களுக்காகவும் செய்யப்படவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், தங்களது தெரிவின் அடிப்படையில் விசாரணை வேண்டும் எனக் கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுக்காவல் உத்தரவு இன்னும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும். இந்த நான்கு வாரங்களில் உரிய நீதிமன்றங்களில் அவர்கள் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்” என்று கான்வில்கர், தீபக் மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நீதிபதி சந்திரசூட் தனது மாறுபட்ட தீர்ப்பில், “இந்த வழக்கு விசாரணையில் இருக்கையில், புனே போலீசு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளது. புனே போலீசின் இத்தகைய நடவடிக்கை இவ்விசாரணை சரியான முறையில் நடத்தப்படவில்லை என்ற கருத்தை ஏற்படுத்துகிறது”

“மின்னணு ஊடகங்களை வைத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது ஒரு கருத்தோட்டத்தை புனே போலீசு உருவாக்கியிருப்பதைப் பார்க்கையில் இது நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கத் தகுந்த வழக்குதான் எனத் தெரிகிறது. இது எதிர்க்கருத்துடையவர்களின் குரலை நசுக்கும் முயற்சி என்றும் உச்ச நீதிமன்றம் தலையிடத் தகுதியான வழக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்புதான் இறுதித் தீர்ப்பு என்பதால் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது சரியே என்பதுதான் தீர்ப்பு. எவ்வித ஆதாரமும் இன்றி அரசியல் எதிரிகளை கைது செய்யலாம், மோடியைக் கொல்லப்போவதாக போலீசே ஆள்வைத்து  உங்களுக்கு இ.மெயில் அனுப்பி விட்டு, பிறகு அதையே ஆதாரமாக காட்டி ஊபா சட்டத்தில் கைது செய்யலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு வழி வகுக்கிறது.

விசாரணை நடத்தும் புனே போலீசு கைது, ரெய்டு, வாரண்டு ஆகியவை முதல் தொலைக்காட்சியில் ஆவணங்களை வெளியிட்டது, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதை தொலைக்காட்சியில் விமரிசித்தது என அடுக்கடுக்காக பல முறைகேடுகளை செய்திருப்பதைக் காட்டித்தான் சிறப்புப் புலனாய்வுக்குழு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவை குறித்த எதுவும் பேசாமல், யார் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று சாமர்த்தியமாக பிரச்சினையை திசை திருப்பியிருக்கிறது இத்தீர்ப்பு.  இதனை முன்மாதிரியாக கொண்டால் இனி யோகி ஆதித்யநாத்தின் போலீசு, இந்தியில் வாரண்டு கொடுத்து, தமிழகத்தில் நுழைந்து யாரையும் கைது செய்யலாம்.

பாபர் மசூதி தீர்ப்பும் பீமா கோரேகான் தீர்ப்பும் பாசிசத்துக்கு காட்டப்படும் பச்சைக்கொடிகள். சபரிமலையில் பெண்கள் நுழையலாம், மணவாழ்க்கைக்கு வெளியே ஆன உறவில் இனி தண்டனை இல்லை என்பன போன்ற லிபரல் தீர்ப்புகள் வெறும் பஞ்சு மிட்டாய்கள். மேற்படி லிபரல் தீர்ப்பு வெளிவந்த நாளில்தான் முஸ்லிம் மாணவனும்  இந்து மாணவியும் ஒருவரோடொருவர் பேசிய குற்றத்துக்காக போலீசாலும் பஜ்ரங் தள் குண்டர்களாலும் தாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு எந்த நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க