போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தராமல் இருக்கும் சம்பள பாக்கி 7,000 கோடி, குஜராத்தை சேர்ந்த சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி!
இந்த விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று விவசாய கடன் தள்ளுபடி.
IL&FS (Infrastructure Leasing & Financial Services) என்ற நிறுவனம் திவாலாகி அதில் நடந்துவரும் குழப்பங்கள், ஊழல் புகார்கள் பற்றி வெகு மக்கள் பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்து விட்டன அதனால் அதை பற்றி நமக்கு கொஞ்சம் தெரியும். முக்கியமான தகவல், IL&FS வாங்கி செலுத்த முடியாமல் இருக்கும் கடன் தொகை சுமார் ரூ. 91 ஆயிரம் கோடி. IL&FS பற்றிய விபரங்களை வேறு கட்டுரையில் பார்ப்போம், முதலில் செய்தியில் அதிகமாக பேசப்படாத கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனம் ஒன்று பற்றி பார்ப்போம்.

ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) என்கிற நிறுவனம் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இது சண்டேசரா என்ற குழுமத்தை சேர்ந்த நிறுவனம்.
இந்த நிறுவனம் கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் வாராக்கடனாக வகை படுத்தப்பட்ட நிறுவனம்.
இந்த நிறுவனம் சம்மந்தமாக அக்டோபர் 1 அன்று பிசினஸ் ஸ்டேண்டர்டு என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியின் தலைப்பு – ‘Sterling group firms offer steep haircuts to lenders’. இதன் தமிழாக்கம் – ‘ஸ்டெர்லிங் குழும நிறுவனங்கள் கடன் தந்தவர்களுக்கு ஒண்ட முடி வெட்டும் வாய்ப்பை வழங்குகின்றனர்’.
இந்த ‘haircut’ (முடி வெட்டுதல்) என்பது பெரு நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் கடன் வசூலிக்கும்போது உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் ஒரு வங்கியிடம் 100 கோடி கடன் வாங்கிக்கொண்டு திவாலாகி 60 கோடி மட்டுமே திருப்பி செலுத்தினால், அந்த தருணத்தில் ‘வங்கிகள் 40 கோடி haircut எடுத்துக்கொண்டன’ என்று கூறுவார்கள்.
ஸ்டெர்லிங் குழும நிறுவனம் இவ்வாறு முடி வெட்டிக்கொள்ளும்படி (haircut) கடன் கொடுத்த வங்கிகளுக்கு கூறுகிறார்கள்.
ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) பெற்றிருந்த கடன் ரூ. 4200 கோடி, இது கடனை காட்டாமல் திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்த நிறுவனம் ரூ. 2400 கோடி மட்டுமே செலுத்த முடியும் என்று கூறுகிறது. வங்கிகளின் நேரம் நல்ல நேரமாக இருந்தால் ரூ. 1800 கோடி மட்டும், ஸ்வாஹா! இல்லையேல் ரூ. 4200 கொடியும் ஸ்வாஹா!

சண்டேசரா குழும நிறுவனங்கள் மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் தொகை சுமார் ரூ. 5000 கோடி என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.
இந்த நிறுவனத்தின் முதலாளி யார் தெரியுமா? செப்டம்பர் மாதம் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபர் கடனை செலுத்தாமல் தப்பி ஓடினார் என்றும் அவர் சுருட்டிய தொகை ரூ. 5000 கோடி என்றும் ஒரு செய்தி வந்ததே, அவர் தான் இந்த கம்பனியின் முதலாளி. அவர் பெயர் நிதின் சண்டேசரா.
இது இப்போது ஆரம்பித்த பிரச்சனை அல்ல. 2012லேயே ஸ்டெர்லிங் குழுமத்துக்கு வங்கிகள் கொடுத்த ரூ. 6000 கோடி கடன் வாராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது என செய்தி வந்துள்ளது. வழக்கம் போல, அதிக கடன் கொடுத்த வங்கிகள் – SBI, PNB, IOB போன்ற அரசு வங்கிகள்.
படிக்க:
♦ வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
♦ வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !
இதோடு முடியவில்லை. 2011 இல் வருமான வரித்துறை ஸ்டெர்லிங் நிறுவன அலுவலகங்களில் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். அதில் சில ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதில் இருந்து தப்பிக்க வருமான வரி துறை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் வழங்கி உள்ளது, இதை CBI விசாரித்து 2017 இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுபோக ஹவாலா முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை துறை வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகிறது.

இந்த மாதிரி உத்தமர்களுக்கு நாடு மக்கள் என்ற பேதம் எல்லாம் இல்லை. நைஜீரியாவில் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொண்டு 30 மில்லியன் டாலர் ராயல்ட்டி செலுத்தாமல் ஏமாற்றியதற்காக அந்த நாட்டு அரசு குழு ஒன்றால் ஸ்டெர்லிங் பையோடெக் நிறுவனம் விசாரிக்கப் படுகிறது என்ற செய்தி ஜூலை 2018-இல் வந்துள்ளது.
நிதின் சண்டேசரா இப்போது இருப்பதாக கருதப்படும் நாடும் நைஜீரியா தான்.
இந்த சண்டேசரா குழுமத்தின் வழக்கறிகராக இருந்தவர் யார் தெரியுமா? முகுல் ரோஹத்கி. முகுல் யார் தெரியுமா? நாட்டின் உயர்ந்த வழக்கறிஞர் பதவியான ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை 2014 முதல் 2017 வரை வகித்தவர். முகுல், அனில் அம்பானியின் வழக்கறிஞராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.
இவை அனைத்திலும் சிறப்பு என்னவென்றால், மெகுல் சோக்சி தொடங்கி, நீரவ் மோடி, ஜெயின் மேத்தா என இந்த நிதின் சண்டேசரா வரை அனைவரும் குஜராத்தை சேர்ந்த முதலாளிகள். எதற்கெடுத்தாலும் குஜராத் மாடல் என்று கொக்கரிப்பவர்கள் ஏனோ இதற்கு மட்டும் வாய் திறப்பது இல்லை!
ஆக மொத்தத்தில், மக்களின் பணம் இன்னொரு 4300 கோடி ரூபாய் ஸ்வாஹா ஆகிறது, ஆகி உள்ளது!

இந்த கோடிகளை வெறுமனே சொன்னால் புரிவது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதனால் புரிந்து கொள்ள வேறொன்றுடன் ஒப்பிடுவோம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்த நிலுவைத் தொகையான ரூ.7,000 கோடியை உடன் அளித்தல், ஊதிய முரண்பாடு களைதல், முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முறையான உடன்பாடு ஏற்படாததால் இன்று (அக்டோபர் 4, 2018) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி கோட்டையை முற்றுகையிட்டனர். இப்படி தொழிலாளிகளின் ஊதியத்தில் கை வைக்கும் அரசு முதலாளிகளுக்கு கடனையே தள்ளுபடி செய்கிறது!
சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான். என்ன, நிதின் சண்டேசராவால் 2012-இல் இருந்து வழக்கு இருந்தும் கைதாகாமல் இருக்க முடியும்; நைஜீரியாவுக்கு தப்ப முடியும்; ஆனால் இந்த விவசாயிகளால் அவர்கள் நாட்டின் தலைநகருக்கு கூட செல்ல முடியாது! இந்த நிலையில் கடனை எங்கே தள்ளுபடி பண்ணுவது!
செய்தி ஆதாரம்:
- Insolvency process: Sterling group firms offer steep haircuts to lenders
- Rs.6,000 cr bank loans to Sterling group firms may turn bad
- CBI charges Gujarat-based Sterling Biotech over Rs 5300-crore bank loan default
- $30m Royalty: Reps Committee Summon Mgt, Board Of Sterling Oil
- Harish Salve to represent ED in case against Sterling Biotech for Re 1
- HC asks TN govt to pay transport employees dues, orders protesters to go back to work